கட்சி நிதி!


ஊருக்காக வெளிச்சம் போடக் கொடுத்த பணத்திலே!
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்திருப்பர் கட்சி நிதியிலே!

கட்சி நிதி! இந்த நிதி எப்படி வந்தது? யாரிடம் பெறப்பட்டது என்பது இன்றைய கட்சிகளைப் பொருத்தவரை ஒரு சிதம்பர இரகசியம் எனலாம்! கட்சி நிதியைப் பொருத்தவரை இந்த நிதி இரு வழிகளில் வருகின்றது!

ஒன்று தனது காரியத்தை முடித்துக் கொள்ள உதவுமென்ற நோக்கில் பயனாளி தானாக முன்வந்து தருவது! இதுவும் நம் தேசத்தின் அதிவேக வளர்ச்சியினை முடக்கும் இலஞ்சமும் ஒன்றுதான்!

இரண்டாவது வகை வற்புறுத்தலின் வாயிலாகவும் மிரட்டுதலின் வாயிலாகவும் பெறப்படுவது! முதலாவதை விட இந்த வழிதான் மிகவும் கேவலமான வழியாகும்! இது மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்காது வழிப்பறி செய்கின்ற தாதாக்களின் செயலென்றுதான் கூற முடியும்!

1..05.08 மே தினத்தன்று செய்தித்தாளினைப் படிக்க நேர்ந்தபோது கட்சிகளின் நிதி பற்றி மக்கள் கணக்கு கேட்கலாம் என்ற செய்தியினைப் படிக்க நேர்ந்தது! மக்களது எண்ணங்கள் வலுப்பட ஆரம்பித்து விட்டதின் தொடக்கம் இதுவெனவே நாம் கருதவேண்டும்!

இன்றுள்ள அரசியல் தலைவர்கள் ஆட்சியில் இருந்தால் மக்கள் வரிப்பணத்தில் தங்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்! அதிகாரத்தை விட்டு மக்களால் தூக்கி எறியப்பட்டால் இருக்கவே இருக்கிறது கட்சி நிதியும் அதனால் கட்டப்பட்ட ஆடம்பர மாளிகைகளும்!

அதில் அமர்ந்து கொண்டு ஆளும் கட்சியினரின் ஊழல் திட்டங்களை எதிர்ப்பதாக மக்களிடம் நாடகமாடி அறிக்கைகள் விட்டுக்கொண்டு தங்களின் செயல்பாடுகளை அதிகம் எதிர்க்காமலிருக்க ஆளும் கட்சியினர் திருப்பிவிடும் உள் வரவுகளைப் பெற்றுக்கொண்டு தங்கள் எதிர்க்கட்சி வாழ்க்கையை சுகமாக்கிக் கொள்கின்றனர்!


எனவே இது போன்ற போலியான அரசியல் இயக்கங்கள் தங்களை வளர்த்துக் கொள்ள நிதி சேர்ப்பதையும் அவற்றைச் சொத்துக்களாக மாற்றி ஒரு சில சுயநலக் கும்பல்கள் அனுபவிப்பதையும் முற்றிலுமாகத் தடை செய்யும் காலம் வரவேண்டும்!

அப்பொழுதுதான் தேர்தலுக்கென்று தங்களின் அதிகார பலத்தைப் பயன்படுத்தி ஏராள நிதி சேர்த்துக் கொண்டு வலுத்தவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெரும் நிலை முற்றிலும் ஒழிக்கப்படும் காலம் வரும்! மக்கள் பிரதிநிதித்துவம் என்பது பணபலத்தில் நிர்ணயிக்கப்படுவது என்ற நிலை வெகு விரைவில் அகற்றப்பட வேண்டும்;!

ஆம்! கட்சி நிதியை பயன்படுத்தி பணபலத்தால் வென்றவர்கள் முதல் போடாமலே பெற்ற வெற்றிக்குப் பின்னரும் மக்களின் வரிப்பணத்தை அறுவடை செய்கின்றனர்!

எனவே இப்படி கட்சி நிதி வசூலித்து வாழ்க்கை வசதிகளை அனுபவிப்பவர்களின் காலம் முடிந்து விட்டாலே சாதாரண வசதி வாய்ப்பற்ற நல்லவர்கள் மக்கள் துணையுடன் தேர்தலில் போட்டியிட முடிகின்ற அசாதாரண நிலை இந்த தேசத்தில் உருவாகும்!

அப்பொழுதுதான் அரசியல் என்பது வணிகமல்ல, அது மக்களுக்குத் தொண்டு செய்கின்ற ஒரு தூய்மையான சேவை என்பதைப் பாமர மக்களும் உணருகின்ற நிலை உருவாகும்!

அத்தகு காலம் தொடங்கி விட்டாலே இப்பொழுதுள்ள அரசியல் இயக்கங்களும் அரசியல்வாதிகளும் காணாமல் போகக் கூடிய நிலையும் உருவாகுமென்பதில் சந்தேகம் ஏதுமில்லை!

ஐந்தாம் தமிழ்ச்சங்கம்தான் இந்த நிலையை உருவாக்கும் என்பதில் எம்முள் சந்தேகம் ஏதுமில்லை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!