நடிகர்கள் நாடாளலாமா?

நடிகர்கள் நாடாளலாமா?
இந்தக் கேள்வியை எழுப்பியதும் ஏன் கூடாது என்று எதிரொலி கேட்பது கேட்கிறதுதான்! நம் தமிழகத்தை ஏற்கனவே பல நடிகர்கள் ஆண்டிருக்கிறார்களே என்ற உண்மை நமக்கு தெரியாததல்ல!
அவர்கள் நாடாண்ட கதையை இங்கு தனியாகக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை! அவர்களால் இந்த தேசத்திற்கு நன்மை ஏதும் விளைந்ததில்லை! இனி அதற்கு வாய்ப்புமில்லை!
இன்றுள்ள நடிகர்கள் நாடாளுகின்ற ஆசையை வளர்த்துக் கொண்டதே தங்களை ஆதரிக்கின்ற இரசிகர்கள் துணை கொண்டுதான்! திரையில் போலியாக நடிக்கும் இவர்களை நல்லவர்களென நினைத்து இரசிகர்கள் ஏமாறுவதை பயன்படுத்தி தமிழக அரியணை ஏறுவதை தங்கள் இலட்சியமாகவே கொண்டு செயல்பட்டு வருகின்றனர்!
நடிகர்கள் ஏன் நாடாள அனுமதிக்க கூடாதென்றால் அவர்களின் திரைக்கதைககளின் பார்முலாவை சற்று நாம் இங்கு ஆய்வில் கொள்ள வேண்டும்!
அவர்களின் திரைப்பட பண்பாட்டின்படி ஒரு தீமையை களைய அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே வழி வன்முறைதான்! ஆயுதங்களின் துணை கொண்டு இரத்தக்களறியில்தான் அவர்கள் தங்கள் எதிரிகளை பழிவாங்குவர்ரூபவ் அல்லது திருத்த முயல்வர்!
இதை நிறைவேற்ற எந்தவிதமான குறுக்கு வழியிலும் செல்ல தயங்காதவர்கள் இவர்கள்! இப்படித்தான் அவர்களின் திரைப்பட பார்முலா சொல்கிறது! இவர்களின் அரசியல் வாழ்க்கையும் இப்படித்தான் அமையும்!
இவர்களின் திரைப்படங்களில்; மோசமானவர்களாக சித்தரிக்கப்பட்ட தமிழக காவல்துறை இவர்கள் தப்பித்தவறி ஆட்சிக்கு வந்துவிட்டால் உலகிலேயே திறமையான காவல்துறை என இவர்களாலே புது முத்திரை பதிக்கப்படும்!
தமது தீவிர இரசிகர்களாக விளங்கி திரைப்படத்தில் ஏராள நற்குண சிந்தனைகளை விதைத்து அரியணை ஏறி தன்னை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தப்பாடுபட்ட சிலரை வளர்த்துவிட்டு அதனால் தங்களின் இலட்சியத்தை தொலைத்த மக்கள் திலகத்தை விடவா? மக்கள் திலகம் அவர்களின் திரைப்படங்களில் அவர் வெளிப்படுத்திய இலட்சியம் இன்றுவரை நிறைவேறாது அந்த திரைப்படங்களுக்கும் பாடல்களுக்கும் சாகா வரம் கொடுத்து ஊழலுக்கு சாட்சியாக நின்று அவரால் வளர்ந்தவர்களின் செயலை எவரால் மறுக்க இயலும்?
எண்ணம் உயர்வாக வை! வாழும் காலம் வரை மண்ணில் மரியாதை வை என உயர்வான தத்துவம் கூறித் தங்கள் இரசிகர்களை திருப்திப் படுத்தும் நடிகர்களின் உயர் கொள்கை அந்தப் பாடல் வரிகள் வரும் காட்சிகளில் பெண்களை கொச்சைப்படுத்தும் ஆபாச நடன அசைவுகளில் அதல பாதாளத்திற்கு சென்று விடுகிறதே!
பெண்களை போகப் பொருளாகவே இதுவரை சி;த்தரித்து வந்துள்ள இன்றுள்ள நடிக அரசியல்வாதிகளிடம் பெண் விடுதலையும் முன்னேற்றமும் எப்பொழுதும் நடவாத ஒன்று! பெண்களுக்கு இவர்களிடம் பாதுகாப்பு என்பது நிச்சயமாக கிடைக்க போவது இல்லை! அது போலவே ஆண்களை அடிமைப்படுத்தும் பெண்களை தலைவிகளாக ஏற்கும் அமைப்பிலும் ஆண்களுக்கு எவ்வித மரியாதையும் கிடைக்காது!
மக்கள் தங்களிடம் எதிர்பார்ப்பதை மட்டுமே நிறைவேற்றுவதை இலட்சியமாக கொண்டவர்களாக இருந்தால் நடிகர்கள் தாராளமாக அரசியலுக்கு வரட்டும்! யார் தடுக்க முடியும்?
அதை விடுத்து தங்கள் இரசிகர்களைத் திருப்திப்படுத்தி தங்கள் திரை உலகப் போட்டியாளர்களை ஒடுக்க மறைமுகமாக உதவுவதை யார்தான் மறுக்க முடியும்? தொழில் போட்டியிலேயே தங்கள் இரசிகர்களை மோத விடுகின்ற இந்த நல்லவர்கள் எப்படி அரசியல் போட்டியில் நல்லவர்களாக விளங்க முடியும்? இப்பொழுதே இவர்களின் அரசியல் மோதல்கள் தொடங்கி விட்டதே!
அவர்கள் தொழில் திரைத்துறை! அதில் அவர்கள் உயர உயரச் செல்லட்டும்! மக்கள் அதில் குறுக்கிடப் போவதில்லை! அதற்குத்தான் கோடி கோடியாகக் குவிக்கின்றனரே!
அதில் தங்கள் உல்லாச வாழ்க்கையை நடத்தி அவர்கள் கோடி ரூபாய் போட்டு ஆடம்பரமான சொகுசு கார் வாங்கிய கதையை தொலைக்காட்சியில் அமர்ந்து பேசட்டும்! மக்களாகிய நாங்களும் அது எங்களின் வியர்வையில் வாங்கியது என்பதை மறந்து விட்டு வழக்கம் போல வாய் பிளந்து பார்ப்போமே!
அதை விடுத்து மக்களுக்கு நன்மை மட்டுமே செய்வதற்கென உள்ள உன்னத அரசியல் துறையை தங்கள் வருகையால் இவர்கள் களங்கப்படுத்தக்கூடாது!
ஏன் இதை அழுத்தம் திருத்தமாக எழுதுகிறோம் என்றால் தற்பொழுது ஆட்சிக்கு வரத் துடிக்கும் நடிகர்கள் ஒரு குறிப்பிட்ட சாதிக் கட்சித் தலைவரை ஒடுக்க வேண்டுமென்றால் அந்தப் பிரபலத்திற்கு எதிரான மற்றொரு சாதித்தலைவரை தன்னுடன் சேர்த்துக் கொண்டு அரசியல் செய்கின்றனர்!  
குறிப்பிட்ட சாதி வாக்குகளைப் பெற வேண்டுமென்று தகாத வழியில் அரசியலில் சொத்து சேர்த்து அந்தச் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியே புதிது புதிதாக சாதிக் கட்சி துவங்கியவர்களையும் தங்களுடன் வைத்திருக்கின்றனர்! இதை கண்ட பின்பும் இவர்கள் ஆட்சிக்கு வருவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
ஊழல் அரசியல்வாதிகளை ஒழிப்பதற்காகக் கட்சி துவக்குவதாக நடிக்கும் இவர்களின் ஊழல் பிரம்மாண்ட கட் அவுட்களிலும் பிரம்மாண்ட மேடை அலங்கார மாநாடுகளிலும் பிரம்மாண்ட சுவர் விளம்பரங்களிலும் பிரம்மாண்ட வாகன அணி வரிசைகளிலும் நாறுகிறதே! 
ஊழல் அரசியல்வாதிகளை விட ஒரு படி மேலே போய் இவர்கள் போடுகின்ற ஆட்டங்களுக்கு தேவைப்படும் பணம் நிச்சயமாக நேர்மையான வழியில் வந்திருக்கவே முடியாது! இவர்கள் சொல்வது போல தங்களின் திரையுலக வாழ்வின் உழைப்பிலும் கிடையாது!


வியர்வை சிந்திப் பாடுபட்ட பணத்தை எதற்காக இவர்கள் வாரி இறைக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு மட்டும் இவர்கள் சரியான பதில் சொல்லட்டும்! சொல்ல முடியாது! இவர்களைப் பயன்படுத்தி தாங்கள் முந்தைய கட்சிகளில் கொள்ளையடித்த பணத்துடன் ஒரு ஒதுக்கப்பட்ட கூட்டம் இவர்களின் பிண்ணனியில் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது!

திரையில் எவரோ வசனம் எழுதி எவரோ பாடி எவரோ இயக்கி தாங்கள் மட்டும் கை தட்டல் வாங்குகின்ற களமல்ல இந்த அரசியல் களம்! அங்கு உங்களுக்கு கை தட்டல் வாங்கிக் கொடுத்தவர்கள் அமைதியாகத் தம் பணியை செய்து கொண்டிருப்பர்!
ஆனால் இங்குள்ள அரசியல் கதையே வேறு! உங்களை இயக்கி பாடவிட்டு நடிக்க விடும் இந்தப் பின்னணியினர் உங்களை ஒழித்துக் கட்டி விட்டு முன்னணிக்கு வந்து தங்கள் நோக்கம் நிறைவேற்றிக் கொள்ளத் துவங்கி விடுவர்! அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என அவர்கள் சொல்வதை அப்பாவி மக்களும் நம்பி ஏமாந்து விடுவர்! பின்பு உங்கள் கதி அதோ கதிதான்!
எனவே சாதியை ஒழிக்க பாடுபட்ட பெரியாரின் பெயரால் சாதி வளர்க்கும் கட்சி துவங்கியுள்ள நடிகர்களுக்கு நாடாளுகின்ற யோக்கியதை கிடையவே கிடையாது!
அரசியலுக்கு இது அவசியமென்றால் நடிகர்கள் நாடாள நாம் அனுமதிக்கக் கூடவே கூடாது! இவர்கள் ஆட்சிக்கு தப்பித்தவறி வந்துவிட்டால் தங்கள் இரசிகர்களைத் திருப்திப்படுத்தவும் தங்களை ஆட்டுவிக்கின்ற அரசியல் சக்திகளுக்கு வளைந்து கொடுக்கவே இவர்களுக்கு நேரம் போதாது! அப்புறம் எங்கே இவர்கள் தமக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய நேரம் ஒதுக்க முடியும்?
தமிழக மாணவர்கள் நிச்சயம் சிந்தித்து தங்கள் எதிர்காலம் பற்றி சரியான முடிவெடுப்பார்கள்! இனி அவர்களே அமைக்கும் ஆட்சி முறைதான் அவர்களின் வழமான எதிர்காலத்தை நிர்ணயிக்கும்! அது ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தால் நிறைவடையும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!