கோயில் போல நிமிர்ந்த நெஞ்சம் இருந்திட வேண்டும்!



கோவிலா! கோயிலா! அரண்மனைகளா?

தலைப்பிற்குரிய இடங்கள் அதற்குரிய தகுதியுடன் விளங்குகிறதா என்பதை நம் தமிழக மக்கள்  உணர வேண்டும்!

நம் பக்தி மார்க்கம் குழப்பம் நிறைந்தது என்பதற்கு இருவேறு கருத்துகளுடன் நிலவும் இந்தச் சொல் ஒன்றே போதும்! 

நம் மக்கள் ஆண்டவன் உறைவதாக கருதப்படும் இடங்களை இந்த தலைப்பிலுள்ளவாறு இருவேறு விதங்களில் அழைக்கின்றனர்!

தமிழ் மொழியின் சிறப்பே ஒரு வார்த்தையின் உச்சரிப்பிற்கேற்ப அதற்குரிய  பொருள் விளங்குமாறு அமைக்கப்படுவதுதான்!

இவ்வகையில் நோக்கினால் கோவில் என அழைப்பது தவறானதாகும்! கோயில் என அழைப்பதுதான் சரியான தமிழ் வார்த்தை!

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைக்கும்படி செய்து உலகமே இன்றுவரை அதை கண்டுகளித்து வியப்புடன் பார்க்கும்படி கட்டிடக்கலையின் நுணுக்கத்தை உலகிற்கு தந்தவர் இராச இராச சோழர்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைபெற முடிந்த ஒரு கோயிலை கட்டியவர் தனது அரண்மனையை அதைவிட மிகச்சிறப்பாக அமைத்திருக்கவேண்டும்! அரசியல் நிகழ்வுகளால் இவை போன்ற அரண்மனைகள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் நோக்கு எனில் இவ்வாறு பலநூறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்தக்கருத்து அடியோடு தகர்க்கப்பட வேண்டும்!

ஏனெனில் தமிழக கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக காலத்தால் அழியாத கருவூலமாக திகழும் தஞ்சை பெரிய கோயில் இன்றுள்ளது போல பக்தி மார்க்கத்திற்காக கட்டப்பட்டதல்ல! 

இயல் இசை நாடகம் சிற்பம் சிலம்பம் பரதம் ஆசனம் கல்வி என பலதரப்பட்ட கலைகளை கற்றுத்தரும் கல்வித்தலமாகவும் நீதித்தலமாகவும் விளங்கியது அது!

வடவர்களின் ஆதிக்கத்தில் தமிழகம் அகப்பட்ட ஒரு இருண்ட காலத்தில்தான் இதுவும் இதுபோன்ற ஏராளமான தமிழக அரண்மனைகள் கோயில்களாக இன்றுள்ள நிலைக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும்!

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிக்கு மக்கள் தற்பொழுது கொண்டுள்ள அர்த்தம் தவறானது. கோ என்று பொருள் தரும் அரசரின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு வசதிகள் அதிகமிருக்கும். எனவே வழிப்பறி நடைபெற வாய்ப்புள்ள பிற இடங்களை விட அரசரின் இல்லம் அல்லது அரண்மனை உள்ள பகுதியில் வாழ்வதுதான் பாதுகாப்பானது என்பதுதாம் இந்த பழமொழிக்கு உண்மையான விளக்கமாகும். 

மேலும் கோயில் என்ற சொல் கோ இல் என பிரித்தறியுமாறு தமிழில் அமைகிறது! கோ என்றால் அரசர் என்ற பொருள்படும்! இல் என்பதற்கு இல்லை என்று பொருள்!

எனவே இந்த வார்த்தையை சரியாக நாம் பிரித்தறியும்போது கோ இல்லாத இடம் அதாவது அரசர் என்ற எண்ணம் இல்லாத இடம் என்றாகிறது! 

அன்று நம்மை ஆண்ட மன்னர்கள் தாங்கள் அரண்மனைகளில் வசித்தாலும் தாங்கள் அரசர்கள் அல்ல என்ற உயரிய நோக்குடன் வாழ்ந்திருக்க வேண்டும்! அந்நாட்களில் அரண்மனைகளில்தான் வாய்மை மன்றங்கள் செயல்பட்டன என்பதை வரலாறு ஒப்புக்கொள்கிறது!

வாய்மை வழங்கும் சபையில்  அமர்ந்துள்ள நான் அவ்விடத்தில் அரசனல்ல என்ற பொருள்படுமாறு கோயில் என தங்களின் வாய்மைத்தலங்களை அழைத்துள்ளனர்!

இந்த வாய்மைத்தலங்களில் வாய்மையரசராகத் தாங்கள் அமர்ந்து வாய்மை  வழங்குமிடம் தூய்மையான உணர்வுகளுக்கு இடமாக வேண்டுமென்பதால்தான் அந்த இடத்தை உலகிலேயே களங்கமற்ற எண்ணங்களுடன் உயிர் உருவாகும் இடமான தாயின் கருவறையின் பெயரால் அழைத்தனர்!

இந்த கோணத்தில் நாம் பார்க்கும்போது நம் தமிழகத்தை சீரும் சிறப்புமாக ஆண்ட இராச இராச சோழர் போன்றவர்களின் அரண்மனைகளாகத்தான் தஞ்சை பெரிய கோயில் போன்று இன்றுள்ள கோயில்கள் விளங்கியிருக்க வேண்டும்!

அன்றைய அரசர்களின் வீதி உலாக்களே இன்று உற்சவ ஊர்வலங்களாக மாற்றம் பெற்றுள்ளன! அரசர்களின் தேர் பவனியே இன்று தேரோட்ட விழாக்களாக மாற்றம் பெற்றுள்ளன! 

தங்களை சீரும் சிறப்புமாக ஆண்டுவரும் அரசர்களுக்கு தங்களின் விளை நிலங்களிலிருந்து கிடைத்த தானியங்கள் காய்கனிகளை அவர்களின் முக்கிய பிறந்தநாள் பிற நாட்டவரை வெற்றி கொண்ட திருநாள் போன்றவற்றை கொண்டாடும்போது காணச் சென்று மனமுவந்து அளித்தவைதான் இன்றைய கடவுளர்க்கெனும் காணிக்கைப் பொருட்களாக மாற்றம் பெற்று விட்டன!

அறிவியல் நோக்கிலும் அந்தந்த கால கட்டங்களில் நிகழத்தப்பட்ட அறிவியல் காரண திருவிழா வழக்கங்களே பின்னாலில் பக்திமுறைக்கு உட்பட்டதாக திரித்து மாற்றம் பெறச் செய்யப்பட்டுவிட்டன!

எனவே கோயில் என்பதுதான் சரியான வார்த்தை! இந்த இடங்களை மீண்டும் வாய்மைத்தலங்களாக நம்மால் மாற்ற முடியாவிட்டாலும் அறிவுத் தலங்களாகவாவது மாற்றியமைக்க வேண்டும்!

வாய்மையின் பிறப்பிடம் நம் தமிழகம்! அது அந்தக்காலம்! 

திருமணச் சடங்குகளுக்கும் மூடத்தனம் பரப்பும் தவறான வழிபாடுகளுக்கும் சுய நல வேண்டுதல்களுக்கும் இந்த இடங்கள் இனியும் பயன்படுவதை தமிழராக பிறந்த எவரும் எக்காலத்திலும் அனுமதிக்கக்கூடாது!

எண்ணங்களின் வலிமையால் உலகை ஆண்டு இயற்கை சக்திகளை தனது கட்டுக்குள் வைத்திருந்த தமிழினம் ஒற்றுமை குணத்தால்தான் அதை சாதித்திருந்தது!

அந்த ஒற்றுமை குணத்தை வடக்கு சாதியாலும் மதத்தாலும் சீர் குலைத்தது! பின்னர் வந்த வெள்ளையரும் நம்மை இதே ரீதியில் வடவர்களை பயன்படுத்தியே பிரித்தாண்டனர்!

மெய்ஞான தமிழினம் மீண்டெழ வேண்டும்! தாம் விஞ்ஞான தமிழினம் என உணர வேண்டும்!

உலகிலேயே மிக பெரிய கப்பல் படை வைத்திருந்தது சோழ ஆட்சியில்! அதே சோழ மரபுதான் பின்னர் வெள்ளையருக்கு எதிராக கப்பல் செழுத்தி வெற்றி கண்டது!

இந்த எழுச்சி மீண்டும் தேவை! அது எண்ணங்களால் உலகை ஆளப்  புறப்படும் தமிழக மாணவ சக்திகளாளும் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தாலும் நிச்சயம் உருவாகும்!





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!