கட்அவுட் கலாச்சாரம்


தமிழகத்தில் கட்அவுட் கலாச்சாரத்தை வேரறுப்போம்!
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் கமிசன் எடுத்த அதிரடியான நடவடிக்கையில் முதன்மையானது தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த பல்வேறு இயக்கங்களின் பிரம்மாண்டமான கட்அவுட்டுகளை அப்புறப்படுத்தியதுதாம்.

தமிழகத்தில் இதுபோன்ற கட்அவுட்கள் தங்களின் தலைவர்களின் பிறந்தநாள்தான் (பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை எல்லோருக்கும் வருவது போன்றதுதான் எனினும்) உலகத்திலேயே புதிய அதிசயமான நாள் என்பதுபோல ஏராளமான அடைமொழிகளுடன் தங்கள் தலைவரை வாழ்த்தும் கட்அவுட்கள்,

மேலும் இயக்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த தலைமைக்கு நன்றிகூறும் விதமாக வைக்கப்படும் கட்அவுட்டுகள்,

ஆளும் எதிர்கட்சியினரின் சுய தம்பட்ட ஜால்ரா ரக கட்அவுட்டுகள், தலைவர்கள் தங்கள் பகுதிக்கு வரும்போது அவர்களைக் கவர்வதற்காகவும், தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காகவும் வைக்கப்படும் ஜால்ரா ரக கட்அவுட்டுகள்,

(சில தலைவர்கள் தாங்கள் இருப்பதை காட்டிக்கொள்ள தங்களின் சொந்த ஊருக்கு சொந்த வேலையாக வர நேர்ந்தாலும் தங்களுக்கென ஒரு ஜால்ரா கும்பலை வைத்துக்கொண்டு தங்களின் வருகையை கட்அவுட்கள் வைத்து வெளிப்படுத்தும் அவலங்களும் இங்கு அரங்கேறுகின்றன)

எங்கோ நடக்கும் மாநாடு, பேரணி, இயக்கப் பொதுக்கூட்டங்களுக்கு தங்களின் ஆதவாளர்களை அழைக்கும் கட்அவுட்கள், சுவர் விளம்பரங்கள் என எங்கு நோக்கினும் அதி பிரம்மாண்டமான கட்அவுட்கள் மற்றும் சுவர் விளம்பரங்களின் கலாச்சாரம் கோலோச்சுகிறது.

எந்த ஊரின் பேருந்து நிறுத்தத்தில் நாம் இறங்கினாலும் ஏராளமான கட்சி நிர்வாகிகளின் படங்கள் அடங்கிய (காவல் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் காணப்படுவது போல) அரசியல்வாதிகள் கவனம் என வரவேற்பது போன்ற கட்அவுட்களை இன்று சர்வ சாதாரணமாகக் காணலாம்.

கட்சி நிர்வாகிகள் குடும்பங்களில் நிகழும் கல்யாணம், காதுகுத்து, பூப்புநன்னீராட்டு விழாக்களில் கலந்து கொள்ள வரும் தங்களின் தலைவரை விதவிதமாக வர்ணித்து வரவேற்கவென எதெற்கெடுத்தாலும் கட்அவுட் வைக்கும் நம் தமிழின இயக்கங்களின் இந்த கலாச்சாரம் இன்னும் ஒரு நிகழ்வுக்கு மட்டும் வைக்கவில்லையென்பதுதாம் சற்று ஆறுதல் அளிக்கும் செயல்.

( அதுதாங்க! “எங்கள் பகுதிச் செயலாளரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வரும் எங்கள் ஆருயிர்த்தலைவர் அவர்களை வருக வருக அவர்தம் பொற்பாதம் தொட்டு வரவேற்கிறோம்” என்பதாக)

வேதனையான கற்பனைதான் என்றாலும் இந்தவகைக் கட்அவுட்களும் இனிவரும் காலங்களில் தமிழகத்தில் இடம்பெறுமோ என்ற அச்சமும் எம்முள் எழுகிறது.

தங்களின் வணிக நிறுவனங்கள் முன்பு இடையூறாக எந்த இயக்கம் கட்அவுட் வைத்தாலும் அவர் ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு வகை பயமும், எதிர்க்கட்சியாக இருந்தால் எங்கே இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்கள் பழிவாங்கப்பட நேரிடுமோ என்ற அச்சத்தில் எவருமே இவர்களின் தகாத செயலை இதுவரை தட்டிக்கேட்க முன்வருவதே இல்லை!

தேர்தல் கமிசன் நடவடிக்கைக்கு பயந்து  அரசியல் இயக்கங்கள் தேர்தல் நடைபெறும் இந்த நாட்களில் கட்அவுட்கள் வைக்க இயலாததால் தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் தெருக்கள் விசாலமாகவும் பரந்துபட்டும் தெரிகின்றன.

இதே நிலை தமிழகத்தில் தொடர ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வந்தால் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்காவது தமிழகம் இதுபோன்ற கட்அவுட்களின் தொல்லைகளிடமிருந்து விடுபடுமே என்ற ஏக்கமும் எம்முள் எழுகிறது.

தேர்தல் கமிசன் போன்றே இதுபோன்ற கட்அவுட் கலாச்சாரத்தை ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அடியோடு தமிழகத்தில் களையும் என்பது எம்முள் நனவாகும் கனவாக விரிகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!