தலை ஆடி! அய்யப்பன்!

                  
தலைப்பைப் பார்த்ததுமே ஒரு கேள்வி உங்களிடமிருந்து எழுமென்பது தெரிந்ததுதான்! தலையாடி கேள்விப்பட்டிருக்கிறோம்! அது என்ன தலை ஆடி சற்று விளங்கச் சொல் என நீங்கள் கேட்பதுவும் புரிகிறது! 

நான் வேண்டுமென்று இவ்வாறு எழுதவில்லை! ஆடி மாதத்தின் முதல் நாளன்று தமிழர்களால் கொண்டாடப்படும் தலையாடிக்கு உண்மையிலேயே அர்த்தம் புரிந்துதான் கொண்டாடுகிறோமா என்பதே எனக்கு விளங்காத காரணத்தால் அதற்கான உண்மைக் காரணம் இதுதான் என எனது உள்ளுணர்விலும், சொந்த அனுபவத்திலும் ஏற்பட்டதை  அப்படியே இங்கு விளக்க முற்பட்டிருக்கிறேன்!  

தமிழகத்தில் ஆடிமாதத் துவக்கத்தின் முதல் நாளன்று தமிழர்கள் கொண்டாடும் இப்போதைய தலையாடியின் அர்த்தம் இதுதான்! 
    
வடவர்களின் திருமண அமைப்புப்படி தலையாடியைக் கொண்டாடுவதில் முதலிடம் வகிப்பவர்கள் அதே திருமண அமைப்பை ஏற்றுத் திருமணம் புரிந்த புதுமணத் தம்பதியினர்தாம்! 

இந்நாளில் தம் தாய் வீடு திரும்பும் புது மணப்பெண்ணை ஆடி மாதம் முழுவதும் தன் கணவருடன் சேர்ந்து வாழ அனுமதியாமல் பிரித்து வைப்பது தொன்று தொட்டு நிலவி வரும் விதிமுறை!

இதற்கு வடவரின் மத அமைப்பு தரும் விளக்கம் ஆடி மாதத்தில் கருத்தரிக்கும் மகளிருக்கு, கடும் கோடைக் காலமாகிய சித்திரை, வைகாசி மாதங்களில் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அமையும்! அப்பொழுது நிலவும் கோடை வெய்யில்  கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதுதான்  வடவர்தம் விளக்கம்!  

இவ்விளக்கம் சரியானதெனவே நாமும் காலம் காலமாக அதே விளக்கத்தை ஏற்றுக் கொண்டு வந்துள்ளோம்! தலையாடிக்குத் தாய் வீடு திரும்பும் புது மணப்பெண்ணிற்கு திருமணத்தன்று பேசியபடி சீர்வரிசை செய்ய இயலாவிட்டால் காலம் முழுவதும் கணவருடன் சேர்ந்து வாழத் தலையாடியே தடையாகிப் போவது தனிக் கண்ணீர்க் கதை! அதை இங்கு எழுத முற்பட்டால் எனது எண்ணத்தைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள வழியின்றிப் போய்விடும்! 

தலையாடியன்று எங்கள் கிராமத்தில் தொன்றுதொட்டு நிலவி வரும் வழக்கத்தையும் எனது இளமைக்கால நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்வது இந்தத் தலைப்புக்கும் எனது உள்ளுணர்விற்கும், அனுபவத்திற்கும் ஏற்றதாகவே இருக்குமென நம்புகிறேன்! 

தலையாடிக்கு முதல் நாளே சிறுவர்களாகிய நாங்கள் எங்கள் கிராமத்தின் தோட்டங்களின் வேலி ஓரங்களில் வளர்ந்து நிற்கும் ஒருவகை மரத்தின் நீண்ட கழியினை வெட்டிச் சேகரித்து வீடு கொண்டு சேர்ப்போம்! இக் கழியினை எங்கள் ஊர்ப் பெரியவர்கள் அழிஞ்சிக் குச்சியென அழைப்பர்! நாங்களும் இன்றுவரை அதை அப்படித்தான் அழைத்து வருகிறோம்!

இந்த அழிஞ்சிக் குச்சியினைத் தலையாடியன்று தேங்காய் சுடும் பண்டிகைக்கெனவே நாங்கள் சேகரிப்போம்! சேலம் மாவட்டத்தில் மட்டுமே கொண்டாடப்படும் இந்தத் தேங்காய் சுடும் பண்டிகையையும் இங்கு விளக்க வேண்டியதுவும் தலைப்புக்கு மிக அவசியம்தான்! 
   
தலையாடிக்கு முதல் நாளன்றே சிறுவர் சிறுமியர்களான எங்களுக்கு எங்கள் தாய் வழித் தாத்தாவின் தோட்டத்திலிருந்து நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மிகப்பெரிய தேங்காய்கள் பறிக்கப்பட்டு பிரித்துத் தரப்படும்! அவற்றை அன்றே நாங்கள் சொரசொரப்பான தரையில் தேய்த்து வழுவழுப்பாக்குவோம்!

இதில் இன்னொரு வேடிக்கை சிறுவர்களாகிய நாங்கள் எதிரும் புதிருமாக அமர்ந்துகொண்டு தேங்காயைத் தரையில் உரசுவோம்! அப்பொழுது ஏற்படும் போட்டியில் எங்கள் தேங்காய்கள் மோதிக் கொண்டு உடைபடுவதுவும் எங்கள் கைகளில் காயமேற்படுவதுவும் பின்னர் உடைபட்ட தேங்காய்க்கு மாற்றுத் தேங்காய் வாங்க எங்கள் பெரியவர்களிடம் வசைபட்டதுவும் இன்றும் எனக்கு மனதில் நிலைக்கும் பசுமையான நினைவுகள்தாம்!

அடுத்து அழிஞ்சிக் குச்சியை நன்கு கத்தியால் தோல் நீக்கிச் சீவி வழுவழுப்பாக்குவோம்! பின்னர் வழுவழுப்பாக்கப்பட்ட தேங்காயின் மூன்று கண்களில் ஒன்றில் துளையிட்டு உள்ளிருக்கும் நீரைப் பாதியாக வெளியேற்றிவிட்டு அதன் உள்ளே தயாராக வைத்திருக்கும் தானியங்கள் மற்றும் நாட்டுச் சர்க்கரையினை இட்டு நிரப்பி பின்னர் அத் துளையினை அழிஞ்சிக் குச்சியின் கூர்முனை கொண்டு கெட்டியாக அடைப்போம்! 

அதன் பின்னர் அழிஞ்சிக்குச்சிக்கும் தேங்காய்க்கும் மஞ்சள் பூசி திருநீரு மற்றும் குங்கும திலகமிட்டு அலங்கரிப்போம்! இப்போது தேங்காய் சுடும் பண்டிகைக்கான தேங்காய் தயாராகி விட்டது. மாலை மூன்று மணியானதும் சிறுவர்களாகிய நாங்கள் அனைவரும் அவரவர் தேங்காய்களுடன் ஓரிடத்தில் ஒன்றுகூடி சருகுகள் நிரப்பித் தீ மூட்டித் தேங்காய்களைச் சுடுவோம்! 

இங்கும் தேங்காய் சுடுவதற்கு முண்டியடித்து ஏற்படும் போட்டியில் வலுத்தவர்களின் செயலால் இளைத்தவர்களின் தேங்காய்கள் உடைபடுவதும், அழிஞ்சிக்குச்சியின் முனையைத் தீயில் வாட்டும்போது அது எரிந்து தேங்காய் தனியாவதும் மற்றுமொரு வேடிக்கை!

இறுதியாக அனைவரது தேங்காய்களும் ஒருவழியாகச் சுட்டு முடித்தவுடன் வேகவேகமாக அனைவரும் எங்கள் ஊர்ப் பிள்ளையார் கோயிலை நோக்கி ஓடுவோம். எங்கள் குணம் அறிந்து எங்கள் பெரியவர்கள் ஏற்கனவே செய்திருந்த எச்சரிக்கைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு எங்களில் பெரும்பாலானவர்கள் அந்தத் தேங்காய்களைச் சரியாகப் பிள்ளையாரின் தலையில் அடித்து உடைத்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையைச் செயல்படுத்த ஓடிவிடுவர்!
    
இதை நன்கு அறிந்த எங்கள் பெரியப்பா தனது கடை ஆட்களை அனுப்பி நாங்கள் சிதறவிட்ட தேங்காய்களை திரட்டி வீடு சேர்ப்பார். இளவயதில் கடவுள் பயமுள்ள நானும் என் சகோதரிகளும் மட்டும் தேங்காய்களை ஒழுங்காகப் பிள்ளையார் முன்பு உடைத்து கற்பூரம் கொளுத்திக் கும்பிட்டு சகோதரிகள் தத்தம் தேங்காய்ச் சிதறல்களுடன்  வீடு திரும்பிய பிறகே நான் மற்றவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்க ஓடுவேன்!

எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன தெரியுமா? எங்கள் கையில் தேங்காய் சுட்ட பின்னர் எஞ்சிய அழிஞ்சிக் குச்சியுடன் எங்கள் ஆற்றோரங்களில் வளர்ந்துள்ள முள் காட்டில் பதுங்கியுள்ள ஓணான்களைத் தேடிப் பிடித்து அவற்றை அழிப்பதுதான்! இந்த முட்டாள்த்தனச் செய்கைக்கு எங்களுக்குக் கற்பிக்கப்பட்ட அர்த்தம் என்ன தெரியுமா? 

இராமாயண இராமன் இலங்கையைக் கடக்கப் பாலம் அமைத்தபோது இராமாயணக் கதைப்படி குரங்கு இனமாகச் சித்தரிக்கப்பட்ட தமிழர்களின் வானர சேனை மட்டுமன்றி பிற உயிர்களெல்லாம் தம்மாலான உதவிகள் அவனுக்குச் செய்தனவாம்! 

குறிப்பாக அணில் தன் பங்கிற்கு தாகத்தில் தவித்தவர்களுக்குத் தண்ணீர் கொணர்ந்து தந்ததாம்! அதனால் அணில் மேல் பரிவுற்ற இராமன் அதன் முதுகில் அன்புடன் தடவியதால்தான்தான் அதன் முதுகில் நீண்ட விரல் படிவ அடையாளம் தோன்றியதாம்! 

ஆனால் எங்களால் வேட்டையாடப்படும் ஓணான்கள் தம் பங்கிற்கு தாகத்தில் தவித்தவர்களுக்கு சிறுநீரைக் கொணர்ந்து தந்தனவாம்! அதனால்தான் இவற்றைக் கொன்று குவிக்க வேண்டுமாம்! இந்தக் கட்டுக்கதையை வழிவழியாகத் தமிழினச் சிறுவர்களுக்கு தமிழினத்தை மதத்தால் அடிமைப்படுத்திய வடவர்கள்தாம் திரித்து போதித்திருக்க வேண்டும்! நாங்களும் காலம் காலமாக இந்த முட்டாள்த்தனமான செயல்களில் வீணாகி ஓணான்களை வீரத்துடன் அழிக்கக் கிளம்பும் நிலைக்கு வந்துவிட்டோம்! 

அன்றைய தினத்தின் விபரீதம் கருதி உள்ளுணர்வாலோ என்னவோ பெரும்பாலான ஓணான்கள் எங்களிடம் சிக்காமல் பதுங்கி விடும்! அப்படியும் சிக்கும் பல அப்பாவி ஓணான்களுடன் சில பாம்புகளும் எங்களால் கொல்லப்படும்! 

அதிக உயிர்களைக் கொன்றவர்கள் அவற்றின் வாலைப் பிடித்து வானில் எறிந்து வெற்றிக் களிப்புடன் வீடு திரும்புவர்! அப்படித் திரும்பும்போது விளையாட்டிற்கு ஒருவரை ஒருவர் அழிஞ்சிக் குச்சியால் அடித்துக் கொள்வோம்! அதைக் கண்ணுறும் எங்கள் பாட்டி அப்பா அழிஞ்சிக் குச்சி கொண்டு அடித்துக் கொள்ளாதீர்கள் அழிந்து போய்விடுவீர்கள் என எச்சரிப்பார்! 

பக்தியறிவு தொலைந்து பகுத்தறிவுக்கு என் மனம் மாறிய தற்போதைய மனநிலையில் எனது இளமைக்காலச் செயலை நினைத்தால் வெட்கமும் வேதனையும் வடவர்களின் கட்டுக்கதைகளில் வீழ்ந்து தவித்த அவலமும் நன்கு புரிகிறது! இப்பொழுது எனது உள்ளுணர்வு நடந்த கதை இதுதான் என ஆணித்தரமாகவே நம்பத் துவங்கிவிட்டது! 

                                 தமிழகத்தில் ஆரிய திராவிட யுத்தம் 
    
ஆரிய திராவிட யுத்தத்தின் விளைவுதான் மகாபாரதக் கதை! நாகரீகத்தில் உயர்ந்தவர்களும் பரதக்கலை வளர்த்ததால் பிற தேசத்தவர்களால் பரத கண்ட நிலத்தவரென அழைக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் அந்நாளைய வாழ்க்கை முறை அன்பு வழி ஒன்றுதான்!

முதலாவது ஆரிய திராவிட யுத்தமாகிய இராமாயணத்திலேயே ஒப்புக்கொண்ட இலங்கை போன்ற தங்க மயமான திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்களையும் உயரிய பண்பு நலன்களையும் ஏராளமான செல்வ வளங்களைத் தமது திரைகடலோடித் திரவியம் தேடிய ஆற்றலாலும் கடுமையான உழைப்பாலும் நிறைத்துச் செழித்து வாழ்ந்திருந்த உயரிய இனம் தமிழினம்! 

இராமாயண யுத்தத்திலிருந்து மீண்டு மொழியறிவற்ற ஆரியர்களுக்கு மொழியறிவு கற்றுத் தந்து அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து சீர்பட்டு தம் வாழ்வு நெறிகளை மீண்டும் சீரமைத்துக்கொண்ட மற்றுமொரு தருணத்தில் நாடு பிடிக்க வந்த நாகரீகமற்ற இனம்தான் ஆரியர்! கௌரவ சேனையினரான இவர்களின் படையெடுப்பின்போது நடைபெற்ற இரண்டாவது ஆரிய திராவிட யுத்தம்தான் மகாபாரதக் கதை! 

அன்பு வழி வாழ்ந்த தமிழினம் ஆரியரின் காட்டுமிராண்டித்தனமான யுத்தத்தின் விழைவால் ஏராள உயிர்ச் சேதத்தைச் சந்தித்திருக்க வேண்டும்! அந்நாளில் இன்றைக்கு ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் வாழ்ந்திருந்த தமிழர்தம் வழிகாட்டியாகிய கண்ணன் ஆரியர்களின் தாக்குதலுக்குத் தப்பிப் பிழைத்த தமிழர்களை நெறிப்படுத்த வழங்கியதே கீதா உபதேசம்! அத்தகு தருணத்தில்தான் வடவர்களால் கண்ணனும் கொல்லப்பட்டிருக்க வேண்டும்!

வடக்கு கண்ணன் கங்கைக்கரையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்தம் பாதங்கள் அழகிய புறாக்கள் போலத் தென்பட்டதால் வேடன் ஒருவன் விட்ட அம்பு தைத்து தனது மானிட வாழ்வை முடித்துக் கொண்டதாக ஒரு கதையையும் மகாபாரத யுத்தத்திற்குப் பின்னர் நடைபெற்ற சண்டையில் கங்கைக் கரையோரம் வளர்ந்திருந்த புற்களைப் பிடுங்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டபோது கண்ணன் கொல்லப்பட்டதாக மற்றொரு கதையையும் கூறுகிறது!

என்னைப் பொறுத்தவரை திருவரங்கக் காவிரிக்கரையில் பாலின வேறுபாடு அற்று கோபியர்களுடன் விளையாடிக் கழித்து வாழ்ந்தவனாகத்தான் கண்ணன் இருந்திருக்க வேண்டும்! வைகைக் கரையாம் மதுரையில் பிறந்த கண்ணன் வடவர்களாகிய அரக்க வம்சத்தைச் சார்ந்த கம்சனுக்குப் பயந்து அவனது தாயால் காவிரிக்கரையில் தனது மாற்றாந்தாயின் அரவணைப்பில் வாழ அனுப்பப்பட்டிருக்க வேண்டும்!

கதை புனைவதில் வல்லவர்களாகிய வடக்கு மதுரையை மதுரா எனத் திரித்துக் காவிரியைக் கங்கையென மாற்றி கௌரவர்களாகிய ஆரியரைப் பாண்டவர்களெனவும் பாண்டவர்களாகிய தமிழர்களை அரக்கர்கள் எனவும் திரித்து கதை கட்டிவிட்டது! சத்திரியன் சூத்திரன் என வர்க்க பேதத்தை முழுவதுமாகப் பிரதிபலிக்கும் மகாபாரதக் கதையை எழுதியவர்கள் ஆரிய மதம் சார்ந்தவர்கள் என்பதைக்கூடத் தமிழினம் பகுத்தறிவுடன் நோக்க இன்றுவரை மறுக்கிறதே.

எது எப்படியோ தமிழகத்தில் நிகழ்ந்த இந்தத் கொடிய யுத்தத்தின் தாக்கம் எப்பொழுதும் தொடரக் கூடாதெனத்தான் மகாபாரத யுத்தம் துவங்கிய தமிழ் மாதமாகிய ஆடிமாதத்தின் முதல் நாளன்று வடவர்களின் காட்டுமிராண்டித்தனமான யுத்த முறையான கல் ஆயுதம் கொண்டு மண்டைகளை உடைக்கும் யுத்த முறை எக்காலத்தும் தமிழ் மண்ணில் தொடரக்கூடாதென்பதை உணர்த்தத்தான் தேங்காயில் நவதானியம் நிரப்பி வடவர்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்ட கற்பனை தெய்வமான பிள்ளையாரின் தலையில் உடைக்கும் வழக்கத்தைத் தமிழர்கள் பின்பற்றியிருக்க வேண்டும்!

இதைத் தடுக்க அந்நாளில் முற்பட்ட தீவிர வடவர்கள் பிள்ளையார் சிலைமுன்பு குனிந்து தங்கள் தலையில் இந்த தேங்காய் உடைப்பினை ஏற்றுக் கொண்டதே பின்னாளில் மகாதானபுரத் தேங்காய் உடைப்பு நிகழ்விற்கு வடவர்களால் கட்டுக்கதைகளுடன் வித்திட்டிருக்கக்கூடும்! இன்றுவரை மூளையைச் சிதைக்கும் இந்த முட்டாள்த்தனத்தையும் தமிழினம் பக்தி முறையாக்கிக் கொண்டதுதான் வேதனையிலும் வேதனை!

அதற்குப்பின்னும் தமிழினம் வடவர்களின் கற்பனைக் கதைகளை நம்பித் தனது சுயத்தன்மையினை இழந்துவிட்ட ஓரு கால கட்டத்தில்தாம் மேற்கூறிய அணில் ஓணான் கதைகள் புகுத்தப்பட்டு தமிழினம் அதனைக் காலம் காலமாக நம்பித் தொலைத்து வந்துவிட்டது!

மகாபாரத யுத்தம் தன் பூமியில் நிகழ்ந்ததாக கதை கட்டும் வடக்கு ஆடிப்பண்டிகையைக் கொண்டாடுவது கிடையாது! இதிலிருந்தே வடவர்களின் கட்டுக்கதைகள் நமக்குப் புரிந்திருக்க வேண்டும். என்ன செய்வது? வடவர்களால் தமிழகத்தில் புதிதாகப் புகுத்தப்பட்ட பிள்ளையார் ஊர்வலங்களில் அதிதீவிரமாக ஈடுபாடு காட்டி மதவாத அமைப்புகளில் பங்கேற்று நமது நீர்நிலைகளை மாசு படுத்திக் கொண்டிருக்கும் பக்தி மார்க்கத் தீவிரவாதத் தமிழினத்தைக் கறையேற்ற இன்னொரு பெரியார்தான் பிறந்து வரவேண்டும்! அதற்குள் ஆரியர்களின் சேது சமுத்திரத்திட்டத் தடையெனும் படையெடுப்பில் தமிழினம் வங்கக்கடலில் மூழ்கடிக்கப்படப் போவதென்னவோ சர்வ நிச்சயம்! 

தலையாடி கொண்டாடும் புதுமணத் தம்பதியினரைப் பிரித்து வைக்கும் தமிழின வழக்கத்தின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? ஆரிய திராவிட யுத்தம் நிகழ்ந்த ஆடி மாதத்தில் கருவுறும் பெண்ணிற்குப் போர்க்குணம் படைத்த வாரிசு பிறக்கும் என்பதாலும் ஆரிய திராவிட யுத்தம் தொடங்கிய கசப்பான அந்த மாதத்தில் தமிழினத்திற்கு வாரிசுகளே பிறக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தினாலும்தான் தலையாடி கொண்டாடும் புதுமணத் தம்பதியினரைப் பிரித்து வைக்கும் வழக்கம் தமிழகத்தில் தோன்றியிருக்க வேண்டுமென்பதே எனது தீர்க்கமான முடிவு!

மகாபாரத யுத்தம் தொடங்கி முடிவுக்கு வந்து தமிழினம் நிம்மதிபெற்ற பதினெட்டாம் நாள் அன்று இனி இப்படி ஒரு யுத்தம் வரக்கூடாதெனத் தலை முழுக ஏற்படுத்தப்பட்டதே ஆடிப் பதினெட்டுப் பண்டிகை!

அதே போன்று கழுவாடியென ஆடி மாதக் கடைசியில் கத்தி முதலான ஆயுதங்களை ஆற்றில் கழுவும் வழக்கம் கூட இரத்தக்கரை படிந்த யுத்தங்கள் இனித் தமிழகத்தில் வரக் கூடாதென்ற நோக்கத்தில்தான்!

பெண்கள் குங்கும திலகம் இட்டுக்கொள்ளும் வழக்கம்கூட இந்த நிகழ்விற்கு பிறகுதான் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்!

மஞ்சளின் பிறப்பிடம் தமிழகம்! இதுபோன்ற யுத்தங்களால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவர்! எனவே இரத்தம் சிந்தும் இது போன்ற யுத்தங்கள் இனித் தமிழகத்தில் வேண்டாம் என்பதைக் குறிக்கவே மஞ்சளில் சில கலவைகளைச் சேர்த்து இரத்தச் சிவப்பாக்கி அதைப் பெண்கள் இடும் திலகமாக்கினர் தமிழர்கள்! 

பதினெட்டாம் பெருக்கன்று தமிழ்ப் பெண்கள் சுமங்கலி நோன்பிருந்து தனது கணவருக்கு மஞ்சள் கயிறு கட்டும் பழக்கம் தற்போது நிலவுகிறது! இதுகூட வடவர்களின் ஆதிக்கத் தமிழகத்துப் பிற்கால வழக்கம்தாம்! 

உண்மையில் சண்டைகள் ஓய்ந்து சகோதரத்துடன் வாழ்வோம் என்ற தமிழினத்தின் உயரிய கருத்தினை ஏற்று மனந் திருந்திய அந்நாளைய வடவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டப்பட்டதாக இவ்வழக்கம் இருந்திருக்க வேண்டும்! 

இதுவே வடக்கில் சகோதரத்துவத்தை உணர்த்த தங்கை தமையனுக்குக் கட்டப்படும் ராக்கிப் பண்டிகையாகப் பின்னாலில் ஆடி மாதத் துவக்கத்தில் வடக்கிலும் வடவர்களின் மூன்றாவது ஆரிய திராவிட யுத்தத்தின் ஆதிக்கத் தமிழகத்தில் புரோகித ஆரியர்கள் வயிறு வளர்க்க சுமங்கலிப் பூசை எனவும் மாற்றப்பட்டு விட்டது! 

இப்பொழுதும் கூட ஆடி மாதத்தில்தான் பெரும்பாலான குடும்ப உறவுகள் பிரிகின்றன! எங்கள் குடும்பமே இதற்குச் சான்று இன்றும் இலங்கையில்கூட ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில்தான் தமிழர்களுடனான சிங்களவர்களின் யுத்தம் உச்ச நிலையை அடைகிறது!

எனது பாட்டி கூட எங்கள் குடும்பப் பிரிவினை பெரும்பாலும் நிகழ்ந்த ஆடி மாதங்களில் அப்பா இது போர்க்கள காலமப்பா நிதானத்தைக் கடைப்பிடியுங்கள் என்று எங்களை மன்றாடி வேண்டுவார்! 

இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் தமிழினம் ஆடிப்பண்டிகையை எப்படிக் கொண்டாடுவதென! ஏன் ஆண்டிற்கொருமுறை நம் பித்தலாட்ட அரசியல்வாதிகளால் நமது கர்நாடகச் சகோதரர்களுடன் சண்டை நிகழ்வும் நடைபெறுவதுகூட இந்த ஆடிமாதத் துவக்கத்தில்தானே! அவர்களுடன் மட்டுமா நமது யுத்தம் தொடர்கிறது? நமது பிற சகோதரர்களான ஆந்திரர்களுடனும் கேரளத்தவர்களுடனும் இதே மாதத்தில்தானே தண்ணீர்ப் பிரச்சினை ஏற்பட்டு வேண்டாத தேவையற்ற கசப்பான யுத்தங்கள் தோன்றுகின்றது!

நம் அரசியல்வாதிகளிடம் நிலவுகின்ற தற்போதைய நிறம் மாறுகின்ற ஓணான் குணங்களையும் அந்நாளில் இராமாயண இராமனுக்குத் துணை போன பச்சோந்தி குணத் தமிழர்களையும் கருத்தில் கொண்டுதான் ஆடி மாதத்தில் பச்சோந்தி குணங்களை தமிழர்கள் தங்களிடமிருந்து தலை முழுக வேண்டும் என நம் முன்னோர்கள் வலியுறுத்தியிருக்க வேண்டும்!

நாம்தான் அதை தவறாகப் புரிந்து கொண்டு ஓணான்களையும் பச்சோந்திகளையும் பாம்புகளையும் பலிவாங்கி நம் உயர் நாகரீகத்தை அடியோடு தொலைத்து விட்டோம்!

இதே தேங்காய் சுடும் பண்டிகைக்கும் இன்றைய கேரளத்தின் சபரி மலையில் இலட்சக்கணக்கான தமிழர்களால் வணங்கப்படும் அய்யப்பன் சந்திதியில் உடைக்கப்படும் நெய்த்தேங்காய் வழிபாட்டிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு!

அந்த ஒற்றுமை இதோ இவ்வாறுதான் துவங்குகிறது!

அய்யப்பன்!

தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களின் அளவற்ற வருகையால் தான் தவம் செய்யும் வனப்பகுதியில் மூச்சுத் திணறி வாழ்பவன்! 
சபரிமலையில் நிலவும் அசுத்தக் கேடுகளை அய்யப்ப பக்தர்களே ஒப்புக்கொள்கின்றனர்!

ஆண்டு முழுவதும் உழைத்த பணத்தைப் பூசைகள், தானங்கள்  எனப் பல வழிகளில் செலவழித்து அய்யப்பன் சந்நிதிக்கு வருடம்தோறும் சென்று வந்தால்தான் தாம் ஆண்டு முழுவதும் நலமாக இருப்போமென நம்பிக்கை சுமந்த பக்தர்களின் மாறிவரும் தற்போதைய தவறான பழக்க வழக்க முறைகள்  சீர்பட வேண்டுமென்பதே பெரும்பாலானவர்களின் நோக்கம்!

அய்யப்பனின் வரலாறு பற்றியும் அங்கு கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் பற்றியும் விமர்சிப்பதல்ல என் போன்றவர்களின்  நோக்கம்! ஆனாலும் பக்தியின் பெயரால் வரலாற்றில் மறைக்கப்பட்ட சில உண்மைகளைப் பக்தர்களுக்கு எடுத்து இயம்ப வேண்டியது எனது கடமை!

பதினெட்டாம்படி!

பதினெட்டாம்படித் தத்துவம் ஆன்மீகவாதிகளால் பலவாறாக விளக்கப்பட்டுவிட்டது! ஆனால் இந்தப் பதினெட்டாம் படிக்கும் மகாபாரத ஆரிய திராவிட யுத்தத்திற்கும் ஏராளமான ஓற்றுமைகள் உண்டு! 

இன்றைய சபரிமலை அன்றைய தமிழகத்தின் ஒரு பகுதி என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை! மகாபாரத யுத்தம் நடைபெற்ற பதினெட்டு நாட்களின் நினைவைத் தமிழர்கள் மறவாதிருக்க ஏற்படுத்தப்பட்டதே பதினெட்டாம்படித் தத்துவம்!

இமயம் முதல் குமரி வரை விரிந்து பரந்த நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக விளங்கிய தமிழர்களான பாண்டவர்களது நிலங்களை ஆரியர்கள் வஞ்சத்தால் அபகரித்துக்கொண்டனர்! அவற்றைக் கண்ணன் தலைமையில் மீட்டெடுக்க நடைபெற்ற யுத்தமே மகாபாரத யுத்தம்! 

மகாபாரத யுத்தம் பதினெட்டு நாட்கள் நடைபெற்றது! இதில் கலந்துகொண்ட தமிழ் மன்னர்களில் அய்யப்பனும் ஒருவர்! பஞ்ச பாண்டவர்கள் என்றால் ஐந்து நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் என்று அர்த்தம்! 

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பவையே ஐவகை நிலங்களாகும்! இதில் அய்யப்பன் குறிஞ்சி நிலத்திற்குச் சொந்தக்காரர்! இலட்சக்கணக்கான தமிழர்களால் வணங்கப்படும் இவருக்கு இணையாக இலட்சக்கணக்கான கேரள மக்களால் வணங்கப்படுபவர் அதே குறிஞ்சி நிலக்கடவுளாக தமிழர்களால் வணங்கப்படுபவர் தமிழ்க்கடவுள் முருகன்! 

சித்தர்களால் உருவாக்கப்பட்ட நவபாசானத் திருமேனி படைத்த முருகன்
பழனி மலையில் நின்ற நிலையில்   ஆண்டிக்கோலத்தில் ஆயுதங்கள் ஏதுமின்றி இருப்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!

வரலாறும் அர்ச்சுனனின் வாரிசுகள் தமிழகத்திலிருந்து இன்றைக்கு சபரிபீடம் என அழைக்கப்படும் இடததிற்குச் சென்று தங்கியதாகத்தான் இயம்புகிறது. 

எனவே அர்ச்சுனன் தவம் செய்த இடத்தில் அர்ச்சுனின் தவக்கோலச் சிற்பத்தை வைத்து அந்தக் குடும்பம் வழிபாடு செய்திருக்கவேண்டும். பின்னர் மதவாதத்தில் வீழ்ந்த சபரி பீடம் தற்போது உலவும் கதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆகக் கண்ணனின் உபதேசம் கேட்டும், அயலவர்களாக இருந்தாலும் பகையிடம் போர் செய்ய மறுத்த அர்ச்சுனன்தான் அய்யப்பனாகவோ அல்லது முருகனாகவோ இங்கு கருதப்பட வேண்டிய உண்மையான சான்றாகிறது! 

இது போன்ற கொடிய யுத்தங்கள் இனி இந்தத் தமிழ் தேசத்தில் நடைபெற வேண்டாம் எனவும், யுத்த எண்ணம் தவிர்த்தவர்கள் மட்டுமே என்னிடம் வாருங்கள் எனவும் போர் செய்ய மறுத்து ஆயுதங்கள் துறந்து காட்டில் சென்று தவம் செய்ய அர்ச்சுனன் அமர்ந்துவிட்ட இடமாகத்தான் சபரிமலை இருந்திருக்க வேண்டும்!  

அத்தகு நிலையில் அய்யனே அப்பனே என அவரைக் கெஞ்சி அழைத்து மீண்டும் போர் செய்ய அழைக்க முயற்சித்த கண்ணனின் செயலை நினைவு கூறவே அய்யப்பன் என்ற பெயர் அவருக்கு வந்திருக்க வேண்டும்!

தமிழகத்தில் ஆடி மாதத் துவக்கத்தில் கொண்டாடப்படும் தேங்காய் சுடும் பண்டிகைக்கும் அய்யப்பன் சந்நிதிக்கு இருமுடியில் சுமந்து சென்று உடைக்கும் நெய் நிரப்பப்பட்ட தேங்காய் வழிபாட்டிற்கும் அவ்வளவான வித்தியாசம் கிடையாது! 

தமிழகத்தில் கொண்டாடப்படும் தேங்காய் சுடும் பண்டிகை ஒரே நாளில் முடிந்துவிடுவது! எனவே இந்த பண்டிகையில் சுடப்படும் தேங்காயும் அதில் நிரப்பப்படும் நவதானியங்களும் அன்றைய தினமே படைக்கப்பட்டு மக்களுக்கு உணவாகிவிடும்!

ஆனால் ஆதி நாட்களில் கால்நடையாகப் பல நாட்கள் சுமந்து சென்று அய்யப்பன் சந்நிதிக்குக் கொண்டு போகும் தேங்காயில் இது போன்று நவதானியம் நிரப்பி கொண்டு சென்றால் அது கெட்டுவிடும் வாய்ப்பு அதிகம் என்பதால்தான் அதில் நெய் நிரப்பிக் கெடாமல் கொண்டு சென்று அய்யப்பன் சந்நிதியில் உடைக்கும் வழக்கம் உருவாகியிருக்க வேண்டும்!

இது ஒரு உறுதிமொழி போன்றதுதான்! நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து உடலையும் மனதையும் தூய்மையாகப் பராமரித்துப் பின்னர் கால் நடையாக நடந்து சென்று அய்யப்பன் சந்நிதியில் நெய்த் தேங்காயை உடைத்து எந்தச் சமயத்திலும் சொத்து சுகங்களுக்காகச் சகோதர யுத்தங்களில் ஈடுபட மாட்டோம் என்று அந்த அய்யப்பனிடம் சரணமடைவதையே பதினெட்டாம்படி தத்துவம் காட்டுகிறது! 

ஆதியில் இந்த பயணம் ஆடி மாதத்தின் முதல் நாள் கிளம்பி ஆடிப்பதினெட்டாம் நாளன்று சபரிமலை சென்றடையுமாறு இருந்திருக்க வேண்டும்!

இதுவே கார்த்திகை மாதத்தில் விரதம் துவங்குவதென பின்னர் வந்த காலங்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்! இன்றுள்ளது போன்று பஜனைகள், பக்தி முறைகள் எதுவுமே அந்நாட்களில் இருந்திருக்க வாய்ப்பில்லை! 

ஒருவர் புதியதாக ஏதாவது செய்ய அதை மற்றவர்கள் பின்பற்ற இதுவே இந்நாட்களில் ஏராள மாற்றங்களுடன் முகம் சுழிக்கும் வண்ணம் அமைந்துவிட்டது! வருடம் முழுவதும் தவறு செய்துவிட்டு அய்யப்பன் சந்நிதிக்குச் சென்றால் மட்டும் செய்த தவறுகளின் வினைகள் தீர்ந்துவிடுவதில்லை! அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும்! 

மண்டல விரதத்தை முறையாகக் கடைப்பிடித்து தங்களின் உடலையும் மனதையும் தூய்மையாக்கிக்கொண்டு சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் வருடத்தின் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் இலட்சக்கணக்கில் சென்று அவதிப்பட வேண்டியதில்லை! 

வருடம் முழுவதும் செல்லும் வண்ணம் தங்களின் வழிபாட்டு முறையை மாற்றிக்கொண்டு இயற்கை நேசனாம் அய்யப்பன் அங்கு அமர்ந்துள்ள நோக்கத்தினை சரியாக புரிந்துகொண்டு அவன் சந்நிதியில் தங்களின் எண்ணங்களை இயற்கை சக்திகளிடம் சுயநல நோக்கமின்றி செழுத்தினால் இயற்கை வேண்டிய வளங்களை வாரி வழங்கும்!

தூய்மை கடை பிடிப்பதை விட்டுவிட்டு வருடத்திற்கு ஒருமுறை சுற்றுலா செல்வதுபோலச் சென்று தங்கள் செயலால் வனத்தைப் பாழ் செய்பவர்கள் பேசாமல் தங்களின் இருப்பிடத்திலிருந்தே அந்த அய்யப்பனின் தூய்மையான எண்ணங்களுடன் தொடர்பு கொண்டு இயற்கையைப் பாதுகாக்க வேண்டுமென்பதே புறத்தூய்மையும் மனத்தூய்மையும் இல்லாது சுற்றுச்சூழலைப் பாழாக்கும் அய்யப்ப பக்தர்களிடம் நான் முன்வைக்கும் தாழ்மையான வேண்டுகோள்!

குறிப்பு!
கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்கள் நான் ஒவ்வாமை நோயின் பிடியில் இருந்தபோது பக்தி மார்க்கத்தில் இருந்தேன். அப்பொழுது இந்த நோய் குணமானால் அய்யப்பன் சந்நிதிக்கு வருவதாக வேண்டிக்கொண்டேன். 

எனது நோய் குணமாகிப் பல ஆண்டுகள் சென்றபின்பும் ஐய்யப்பன் சந்நிதிக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை! மேலும் சித்தர்களின் எண்ணங்கள் என்னுள் ஆக்கிரமிக்கத் துவங்கியதால் எங்கும் நிறைந்த பிரபஞ்சப் பேராற்றல் என்னுள் நிறைவது போன்ற உணர்வுகளால் கோயில்களுக்குச் செல்வதும் குறைந்து விட்டது.

இந்நிலையில் ஐய்யப்பன் சந்நிதிக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது! எனது மைத்துனருடன் கோவையிலிருந்து அவரது நண்பர்கள் இருவருடன் செல்வதென முடிவாயிற்று!

ஒரே நாளில் சென்று திரும்புவதாக எங்கள் பயணம் அமைக்கப்பட்டிருந்தது. கோவை சென்று அங்குள்ள அய்யப்ப சேவா சங்கக் கோயிலில் இருமுடி கட்டிக் கொண்டோம்! 

கோவைக் கேரள நண்பரின் அழகிய சிறு வயது மகள் கரங்களால் எங்களின் இருமுடிப் பையில் அரிசியும் நாணயங்களும், நூறு ரூபாய் பணமும் இடப்பட்டுக் கட்டப்பட்ட பின்னர் எங்களின் பயணம் துவங்கியது! 

கடந்த 2013 ஆம் ஆண்டு சித்திரை மாதத் துவக்கத்திற்கு முந்தைய நாளில் நானும் அய்யப்பன் சந்நிதியில் இருந்தேன்.

என்னுள் அழுத்தமாகப் பதிந்த மேற்கண்ட பழைய நிகழ்வுகள் உறுதியாயிற்று! போர் செய்ய மறுத்துத் தவம் செய்யப் புறப்பட்ட அர்ச்சுனனே அய்யப்பன் வடிவில் அங்கு அமர்ந்திருப்பதைக் கண்டேன்!

ஐயப்பன் கோயில் விதிப்படி நான் முதன் முதலாக அங்கு செல்வதால் கன்னிச்சாமி! எனக்கோ அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியதோடு மட்டுமன்றி நான் அங்கு கண்ட காட்சிகள் இனியும் அடிக்கடி அங்கு சென்று தவம் செய்யும் அர்ச்சுனனின் தவத்தினைக் கலைப்பதில்லை எனும் உறுதியான கொள்கையுடன் திரும்பினேன்!

வருமானத்திற்கெனவே அடர் வனத்தின் அமைதியைக் குலைக்கும் விதமாகக் கேரள அரசு கட்டியுள்ள ஏராளமான கட்டிடங்கள்,

வழி பாட்டு முறை என்ற பெயரில் வன விலங்குகளை அச்சுறுத்தும் வண்ணம் வழியெங்கும் ஒலிக்கும் வெடிச்சத்தங்கள்,

ஐயப்பன் சந்நிதியைச் சுற்றி குறைவான கூட்டத்திலும் கூட அன்று நிலவிய தூய்மையின்மைக் குறைபாடுகள்,

ஐய்யப்ப பக்தர்களால் வழியெங்கும் வீசப்பட்டு கிடக்கும் நெகிழிக் கழிவுப் பொருட்கள்,

ஆர்வத்துடன் அய்யப்பனைத் தரிசிக்க வந்து பருவமெய்திய சிறுமிகள் எனக் கேரளப் பெண் காவலர்களின் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி வாய் விட்டுக் கதறிய இரண்டு  கேரளச் சிறுமிகளின் கண்ணீர் சிந்திய முகங்கள்,

இவைகளும் இனி ஐய்யப்பன் சந்நிதிக்கு செல்லப் போவதில்லை என்ற உறுதியை என்னுள் ஏற்படுத்தின!

எங்கும் நிறைந்த பிரபஞ்சப் பெருவெளியில் கலந்து நிற்கும் அந்த அய்யப்பன் எனப்படும் அர்ச்சுனனின் எண்ணங்கள் இங்கிருந்தவாறே என்னுள் நிறைந்து உணரப்படும்போது அடிக்கடி  சென்று அந்த வன உயிரிகளின் நேசன், இயற்கைக் காவலன் அய்யப்பனின் தவத்தைக் கலைக்கப்போவதில்லை!

கொசுறுக் குறிப்பு!

நாங்கள் சென்றிருந்த மாதம் சித்திரைக்கு முதல் நாளான பங்குனியின் கடைசி நாள்!

கடுமையான வெயிற்காலம் அது! காலையில் அய்யப்ப தரிசனம் முடித்தவுடன் பம்பா திரும்பத் துவங்கினோம்! முன்னதாக அதிகாலையில் முதன் முறையாக அய்யப்பன் சந்நிதி செல்லும் மலைப்பாதையில் பயணக்களைப்பு தெரியாமல் இருக்க வழி நெடுக அய்யப்ப பக்தர்கள் ஒலித்த சாமியே சரணம் அய்யப்பா என்ற கோசத்தை மனதுக்குள் உச்சரித்தவாறு நானும் சென்றதால் பயணக் களைப்பே தெரியவில்லை!

அதே போன்று மதியம் கடும் வெயிலில் திரும்பி பம்பா ஆற்றை நெருங்கும்போது பாதையெங்கும் வெயிலின் கொடுமை தகித்தது! ஒரே நாள் பயணமென்பதால் பாதணி அணியாது பழக்கப்படுத்தாத கால்கள் சூடு தாங்காமல் தவித்தது! என்னை விட வயதில் இளைய எனது மைத்துனருக்கு இந்த அனுபவம் இன்னும் கடுமையாக இருந்தது!

மைத்துனரோ கடுமையான சூட்டை மட்டுமே கவனித்தவாறு வந்தார்! பம்பாவில் முதற் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருந்த ஒரு மண்டபத்தில் கருமை நிறக் கருங்கல் தளம் பாவியிருக்க கடும் வெயிலில் அங்கு நிழலுக்கு ஒதுங்க முற்பட்டு அது தோசை சுடும் கல் போலத் தகித்திருந்ததால் அதிலும் சூடு பட்டு மேலும் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு, கடுமையான வெப்பம் நிறைந்த தார்ச் சாலையில் நடந்து  திரும்புவதற்குள் சூடு தாங்காமல் அவரது பாதங்கள் கொப்பளித்துப் போனது!

இதற்கு நேர் மாறாக நான் எனது மனதை அதே சாமியே சரணம் என்ற அய்யப்பனின் கோசத்தில் திசை மாற்றியதால் எனது எண்ணங்கள் வெயிலின் தாக்கத்திலிருந்த எனது பாதங்களைக் கொப்பளிக்காமல் காத்தது!

மாரியம்மன் கோயில்களில் தீ மிதிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தீ தங்களைச் சுடாது என்ற மனநிலையிலேயே கடப்பதால் அவர்கள் பாதங்கள் பாதிப்படைவதில்லை என்பதையும் தீ சுடும் என்ற மன நிலையில் கடப்பவர்கள் பாதி தூரம் கடப்பதற்குள் சூடு தாங்காமல் தவித்து ஓடி விடுவதையும் கண்ட அனுபவம் ஐய்யப்பன் கோயில் பயணத்தில் எண்ணங்களை மடை மாற்றியதால் கிடைத்த இந்த அனுபவத்தில் புரிந்து கொள்ள முடிந்தது!

இன்னுமொன்றைச் சொல்ல வேண்டும்! அடுத்த ஆண்டே மீண்டும் புதிய நண்பர்களுடனும் எனது மைத்துனருடனும் ஐயப்பன் சந்நிதிக்குச் செல்ல நேர்ந்தது! இந்த முறை எனது குடும்பத்தவர்களின் வழி அனுப்புதலோடு பயணம் துவங்கியது.

ஒரு உணவகத்தில் இரவு உணவிற்காக வாகனத்திலிருந்து இறங்கும்போது அதன் கதவில் சிக்கி அணிந்திருந்த ஐயப்ப மாலை அறுந்துவிட்டது! நண்பர்கள் பதறினர்!

நானோ இது இயல்பாக ஏற்பட்டது! சகுனம் சரியில்லை என மூடத்தனமாக மனதை நான் சஞ்சலப்படுததிக் கொள்ள மாட்டேன் எனப் புன்னகையுடன் சொல்ல ஒரு நண்பர் அருகிலிருந்த கடையிலிருந்து நூல் வாங்கி வந்து அதை சரி செய்தார்!

இந்த முறை மழைக் காலம்! எனவே வெய்யிலின் தாக்கமற்ற அவ்வப்போது கடுமையாகவும் சற்று மனதிற்கு இதமான மழைச் சாரலும் நிறைந்த இரண்டாவது ஐயப்பன் தரிசனம்!

மூன்றாவது அழைப்பு அவரிடமிருந்து வந்தால் ஒருவேளை நான் அங்கு செல்லக்கூடும். அது அய்யப்பனின் அழைப்பாக மட்டுமே தவிர எனது விருப்பமாக நிச்சயம் இருக்கப் போவதில்லை!

முருகன் உட்பட இந்தப் புவியைக் காக்கப் போராடும் இயற்கை சக்திகள் எங்கு அழைத்தாலும் எப்பொழுது அழைத்தாலும் மட்டுமே நான் அங்கெல்லாம் செல்ல முடிகிறது! எந்தக் காரியமென்றாலும் மூன்று முறை என்பதாகத் தமிழர் வழக்கம் உள்ளது! எனவே எனது அடுத்த அய்யப்ப பயணம் நிறைவேறினால் அதுவே போதும் என்ற மன நிலையுடன் நிறைவு கொள்வேன்!

மேலும் அன்றும் அந்த வனப்பகுதியில் நான் நடந்து வரும்போது இதோ இந்தப் பாடல் வரிகள்தான் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது!

நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே!

இதை நான் செல்லும் பாதையில் கண்டு கொண்டேன் இந்தக் காட்டிலே!

எஙகும் நான் பார்க்கிறேன்! எதிரொலி கேட்கிறேன்! கேட்கிறேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!