நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்.

2017-ஏப்ரல் 2 அன்று காலை புதிதாகத் திருமணமாகிச் சேலத்தில் வசிக்கும் எனது மகளைக் காண்பதற்காக சேலம் செல்ல முடிவு செய்திருந்தோம்.

அன்று காலை 10.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்படும்போது எனது மனைவி ஒரு பொருளை எடுப்பதற்காக வீட்டின் அறைச்சுவற்றில் இருந்த கப்போர்டின் கண்ணாடியைத் தள்ள முற்பட அது திடீரென உடைந்து இரு துண்டாகி எனது மனைவியின் தலையில் மோத அதில் ஒரு கண்ணாடி அருகிலிருந்த படுக்கையில் விழ மற்றொன்றை எனது துணைவியார் பிடிக்க முயற்சித்த நிலையில் கை விரலைச் சற்றுக் காயப்படுத்திற்று.

ஊருக்குப் புறப்படும் நேரத்தில் அபசகுனமாக எனது மனைவிக்கு அது பட்டாலும் பெரிய அளவில் எதுவும் நிகழாமல் சிறிய அளவில் நேர்ந்ததே நடப்பது நல்லதெற்கெனச் சமாதானப்படுத்தி சேலம் புறப்பட்டோம்.

பேருந்தில் ஏறி அமர்ந்தபின்பு ஓட்டுநருக்கு எதிரே இருந்த கண்ணாடியைக் காண்பித்து இது போன்ற கண்ணாடிகளை வீட்டு அலங்கார அலமாரிகளில் பயன்படுத்தினால் அவை உடையும்போதுகூட துண்டு துண்டாக உடையுமே தவிர ஆபத்து இராதென விளக்கியவாறு பயணித்தேன்.

சேலம் சென்று எனது மகளைச் சந்தித்த பின் புறப்பட்டபோது எனது சம்பந்திகள் எனது மகளையும் எங்களுடன் ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டவே நாங்கள் மூவரும் அவர்களுடன் சேலம் பேருந்து நிலையம் சென்றடைந்து எனது மருமகன் எங்களை பத்திரமாக ஒரு தனியார் பேருந்தில் இடம் பிடித்து அமர்த்திவிட்டு இல்லம் திரும்பினார்.

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அந்தத் தனியார் பேருந்து வெளியேறி பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரெனப் பேருந்தின் முன் கண்ணாடி உடைந்த சப்தம் கேட்ட நிலையில் அதன் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதைக் கண்டோம். 

ஓட்டுநர் அருகில் சென்று காரணம் வினவினால்
எதிரே வந்த ஒரு ஆட்டோவில் இருந்து ஒரு பீர் பாட்டில் எவரோ ஒரு குடிமகன் இந்தப் பேருந்தில் அதை வீசி அடிக்க அது பட்ட வேகத்தில் கண்ணாடியும் அந்த பாட்டிலும் உடைந்து சிதறியவாறு பேருந்தில் முன்புறம் அமர்ந்திருந்த ஒரு இளம்பெண்ணின் நெற்றியில் இரத்த காயமேற்படுத்தியும், பேருந்து ஓட்டுநர் உட்பட அருகில் அமர்ந்திருந்த பல பெண்களின் மீது கண்ணாடித் துண்டுகள் தெறித்ததால் சிறு சிறு காயங்களை ஏற்படுத்தி இருந்ததையும் கண்டோம்.

தனியார் பேருந்துகளின் வசூல் நோக்கம் காரணமாக அவை பல இடங்களில் நின்று செல்வதற்காக அதி வேகமாகச் செல்வதும், அதில் புளிமூட்டைப் பயணமாக ஏராளமானவர்கள் அடைபட்டுச் செல்வதும் நாம் அறிந்ததே.

இந்தப் பேருந்து அந்த இடத்தில் 100 கிமீக்கு அதிகமான வேகத்தில் ஒரு வேளை பயணித்திருந்தால் இந்த விபத்தில் ஓட்டுநர் நிலை தடுமாறி பேருந்தின் இயக்கம் தாறுமாறாகி அன்றைய தினம் ஏராளமானவர்கள் காயமடையவும் ஒரு சிலர் உயிரிழக்கும் நிலை கூட ஏற்பட்டிருக்கக்கூடும்.

நல்லவேளையாக 40 கிலோமீட்டர் வேகத்தில் அந்தப் பேருந்து சென்ற நிலையில் இந்தத் தாக்குதல் நடந்ததால் ஓட்டுநர் சாமர்த்தியமாக வாகனத்தை நிறுத்த முடிந்து எங்களின் உயிரையும் காக்க முடிந்தது.

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றியதால் சரக்கு வாங்க அலையும் நிலை ஏற்பட்ட கோபத்தில் ஒரு குடிமகன் ஏற்படுத்திய ஆபத்தான விபத்து இது.

ஆட்டோவை ஓட்டிவந்த ஓட்டுநரும் இதற்கு உடந்தை என்பதால் வேறு ஆட்டோ பிடித்து மீண்டும் புதிய பேருந்து நிலையம் திரும்பி அமர்ந்து வர விருப்பமின்றி அந்த வழியாக வந்த அரசுப்பேருந்தில் ஏறி நின்றவாறே ஈரோடுவரை பயணிக்க வேண்டியதாயிற்று.

பெரும்பாலும் படித்தவர்களும் இன்று குடிக்கு அடிமைகள். இந்த விபத்து ஏற்படுத்த உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுநரும் படித்திருக்க வேண்டும்.
எனக்குள் அப்போது இந்தப் பாடல் வரிகள்தாம் ஓடியது.


நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம். 
மனமும் நல்ல குணமும் 
நேர்வழியை விட்டு விலகும். 
நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்.


ஒரு கற்பனைக்காக ஒரு பெரிய சாராய ஆலை அதிபர் குடும்பம் சென்ற அதிவேக செகுசுக்காரின் மீது இதே போன்ற ஒரு தாக்குதல் நடைபெற்று விபத்து ஏற்பட்டு அந்தக் குடும்பமே பலியானது என்று ஒரு செய்தி அறிந்தால்கூட எம் போன்று ஒரு நல்ல சமுதாயம் அமைய வேண்டும் என விரும்பும் நெஞ்சங்கள் அவர்களுக்காகப் பரிதாபப்படுவோமே தவிர மகிழ்ச்சியடைய மாட்டோம்.

ஆனால் மேற்கண்ட பாடல்கள் போன்று ஏராளம் பாடி அன்றைய இளைய சமுதாயத்தை தம் வசப்படுத்தி ஆட்சிப் பொறுப்பேற்ற எம்ஜியார் முதற்கொண்டு அவரால் வளர்ந்த ஊழல் திராவிட இயக்க சாராய சாம்ராஜ்யவாதிகள் அப்படி ஒரு விபத்து தங்கள் குடும்பத்தில் நேரிட்டால்கூட அதை உடனே மறந்து விட்டு மேலும் மேலும் சாராய விற்பனையில் மூழ்கி சொத்துகள் குவிக்கத்தான் முயல்வார்கள் என்று எணணும்போது அவர்களும்


ஒரு மிருகம் இந்த மதுவை விற்கும்போது 
மனமும் நல்ல குணமும் 
நேர்வழியை விட்டு விலகும். 
நீதான் ஒரு மிருகம் இந்த மதுவை விற்கும்போது


என்றுதான் பாடத் தோன்றுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தூய்மை பாரதம்! தூய்மைத் தமிழகம்!

வாய்மையே வெல்லும்!

எது இலாபம்?