ஐந்தாம் தமிழ்ச்சங்கம் துவக்கவிழா அழைப்பிதழ்!
ஐந்தாம் தமிழ்ச்சங்கம் துவக்கவிழா அழைப்பிதழ்!
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கவிதைகளை வாசிப்பவர்கள் மனதில் நிச்சயம் ஒரு புதுயுகக்கனவு உருவாகுமென்பதில் கடுகளவும் சந்தேகம் கிடையாது!
எனினும் அப்பொதுவுடமைக் கவியின் ஒரு கவிதை மட்டும் என்னுள் அடிக்கடி சலனங்களை ஏற்படுத்தி வருவதென்னவோ உண்மை! தாம் வாழ்ந்த காலகட்டத்தில் தமிழினத்தில் நிலவிய வேதனையான சூழலை மனதில் கொண்டு; பாவேந்தர் புனைந்து வைத்த சோகமான கவிதை வா¢களே என் ஆழ்மனதில் பதிவாகி இன்றும் அவரது பாடல்வரிகள் ஏராளமான தாக்கங்களை உருவாக்கி வந்துள்ளதெனலாம். சொல்லப்போனால் பாவேந்தர் காலத்தைவிடப் பல மடங்கு சோதனையான காலகட்டத்தில் இன்றுள்ள தமிழர்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனலாம்!
எனினும் இத்தகு சோதனையான காலகட்டத்தையும் தமிழினம் வெற்றிகரமாகக் கடந்து ஒரு புதுயுகச் சமுதாயத்தை உருவாக்கிக் கொள்ளுமென்பதே எனது உறுதியான எண்ணங்களாகும்! அத்தகு உறுதியான எனது எண்ணங்களை விரிவாக விளக்குவதற்கு முன்னர் அடிக்கடி என்னுள் சலனங்களை ஏற்படுத்தும் பாவேந்தரின் கவிதை வரிகளை அப்படியே ஒருமுறை உங்கள் பார்வைக்கு வைக்க வேண்டியதும் இங்கு அவசியமாகிறது! கவிதை வரிகள் இதுதாம்!
தமிழ்க் கனவு!
தமிழ்நாடெங்கும் தடபுடல்! அமளி!!
பணமே எங்கணும் பறக்குது விரைவில்
குவியுது பணங்கள்! மலைபோற் குவியுது!
தமிழின் தொண்டர் தடுக்கினும் நில்லார்,
ஓடினார், ஓடினார், ஓடினார் நடந்தே!
ஆயிரம் ஆயிரத்தைந்நூறு பெண்கள்
ஒளிகொள் விழியில் உறுதி காட்டி
இறக்கை கட்டிப் பறக்கின்றார்கள்!
ஐயோ, எத்தனை அதிர்ச்சி, உற்சாகம்!
சமுத்திரம் போல அமைந்த மைதானம்
அங்கே கூடினர் அத்தனை பேரும்
குவித்தனர் அங்கொரு கோடி ரூபாய்.
வீரத்தமிழன் வெறி கொண்டெழுந்தான்.
உறக்கக்கேட்டான்: உயிரோ நம் தமிழ்?
அகிலம் கிழிய ஆம்! ஆம்! என்றனர்.
உள்ளன்பு ஊற்றி ஊற்றித்
தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
சிங்கப் புலவரைச் சேர்த்தமைத்தார்கள்!
உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத்தையெலாம்
கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
சுடர்க்கவி தொடங்கினர்! பறந்தது தொழும்பு!
கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்,
வாழ்க்கையை வானில் உயர்த்தும் நூற்கள்,
தொழில்நூல்,அழகாய்த் தொகுத்தனர் விரைவில்!
காற்றிலெலாம் கலந்து கீதம்!
சங்கீதமெலாம் தகத்தகாயத் தமிழ்!
காதெலெலாம் தமிழ் கனிந்த சாறு!
கண்ணெதிர் தமிழ்க் கட்டுடல் வீரர்கள்!
காதல் ததும்பும் கண்ணா என்றனைக்
கோதை ஒருத்தி கொச்சைத்தமிழால்
புகழ்ந்தாளென்று, பொறாமல் சோர்ந்து
வீழ்ந்தான்! உடனே திடுக்கென விழித்தேன்.
அந்தோ! அந்தோ! பழைய
நைந்த தமிழரொடு நானிருந்தேனே!
எத்துணை இன்பக்கனவு! இறுதியில் எத்துணை அவலத்துயரம்.! பாவேந்தரின் இந்த கவிதை வெளியிடப்பட்ட ஆண்டு 1938ல் நாடு அன்னியரிடம் அடிமைப்பட்டுக்கிடந்தது.
விடுதலை பெற்று மக்களாட்சித் தத்துவத்தில் மக்கள் வசிக்கத் துவங்கிய இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் நைந்த தமிழரொடுதாம் நாம் இருக்கிறோம். இதற்குக் காரணம் படிப்பறிவு பெற்ற தமிழர்கள்கூட அரசுகள் வழங்கும் இலவசத் திட்டங்களுக்கு ஏங்கிக் கிடப்பதும், தேர்தல் நேரங்களில் தங்க்ளது வாக்கு வங்கியை பணபலத்திற்கு அடகு வைத்துவிட்டு தங்களின் உன்னத வாழ்க்கை ஏற்றத்தை ஊழல் அரசியல் வியாதிகளிடம் தொலைத்துவிட்டு அவர்களிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் அவல நிலையை நாம் இப்பொழுதும் கண்கூடாகக் காண்பதுதாம்.
இந்த நிலை மாறவே மாறாதா என்ற கேள்விகள் என்னுள் அடிக்கடி எழும். எவரிடம் விவாதித்தாலும் மக்களையும் இன்றுள்ள அரசியல் வியாதிகளையும் திருத்தவே முடியாதென்பர். எனினும் என்னுள் உறுதியான நம்பிக்கை. வாய்மை என்றேனும் வென்றே தீருமென.
பாவேந்தரின் சங்கங்கள் என்ற கவிதையும் என்னுள் ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்தியது. பாவேந்தர் விரும்பி தகுதிப்படுத்திய சங்கங்களைத் தமிழகத்தில் காண்பது அறிதிலும் அறிதாகிற்று. அவற்றில் இணைந்தால் தனிமனித வாழ்க்கையோ அல்லது அவரது வணிக வாழ்க்கையோதான் உயர முடியும்.
ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் உயர்வதற்கென ஒரு சங்கம் அவசியம் தேவையெனப்பட்டது. அது முழுக்க அரசியல் சார்புடையதாகவும் அதேசமயம் தமிழர்களின் வாழ்க்கை முறையினை முற்றிலும் மாற்றியமைப்பதாக இருக்க வேண்டும்..
எனவே நானே ஒரு சங்கத்தைத்
துவக்குவதென முடிவெடுத்தேன். அதற்கு ஐந்தாம் தமிழ்ச் சங்கமென பெயருமிட்டேன். தமிழகத்தில் தமிழ்க்கடவுள் முருகனின் தலைமையிலான மூன்று தமிழ்ச்சங்கங்களும் தமிழ்மொழியினை வளர்க்கப்பாடுபட்டன. மதுரையம்பதியில் சென்ற நூற்றாண்டில் துவக்கப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்கமும் அத்தகையதே.
நான் துவக்கியுள்ள இந்த ஐந்தாம் தமிழ்ச்சங்கம் பாவேந்தர் விரும்பியபடி அமையுமோ என்னவோ? என்னை வழிநடத்தும் சித்தர்கள் தலைவன் முருகனின் விருப்பப்படி நிச்சயம் அமையும். ஆம்! தமிழகத்தில் தமிழக்கடவுள் முருகனின் தலைமையிலான இந்த ஐந்தாம் தமிழ்ச்சங்கம் ஏராளமான மாற்றங்களை நிச்சயம் கொண்டுவரும் என்பது என்முன் உள்ளங்கனி நெல்லிக்கனி போலத் தென்படுகிறது.
அதற்கான வழிமுறைகளைத் தேடத் துவங்கினேன். எனது பொருளாதார நிலைக்கு இடம் தரும் இந்த வலைதளம் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தைத் துவங்க மிகச் சரியானதென முடிவு செய்தேன். இதோ இந்த நொடி முதல் இதைப் படிக்க நேரும் அனைவரும் இந்தச் சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு, தமிழும் தமிழர்களும் இப்பொழுதுள்ள நைந்த நிலையிலிருந்து விடுபடத் தயாராவார்கள் எனவும் உறுதியாக நம்புகிறேன்.
சமுதாயத்தின் தீமைகளை, அநீதிகளை, அறியாமைகளை அகற்றி, மக்களை நல்வழிப்படுத்த விரும்பும் எவரும்,
பொதுவாழ்க்கைப் பதவிகளுக்கு ஆசைப்படக்கூடாது.
சிறிது காலமே வாழ்ந்தாலும் நீதிக்காகப் போராடுபவர் தனித்து நின்றே போராட வேண்டும்!
என்றவர் சாக்ரடீசு. நானும் அத்தகைய வாழ்க்கை முறையையே விரும்புவபவன்.
கடுமையான இன்னல்களை அனுபவித்தபின்னர் நாடு விடுதலையடையந்த சூழலில் தமக்கென ஒரு பதவியை அடைய நினையாது வாழ்ந்த மகாத்மாவாக,
தாம் பதவி வகித்த நாட்களில் தம் அன்னையைக்கூடத் தன்னுடன் தங்க அனுமதிக்க மறுத்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராசராக,
பொது வாழ்க்கையில் வாழ்வதென்பது இன்றைய காலகட்டத்தில் எவராலும் இயலாததென்ற வாதத்தைத் தகர்த்து,
ஐந்தாம் தமிழ்சங்கத்தைத் துவங்கியவன் என்ற உரிமையிலும்கூட, நானும் சாக்ரடீசின் நிலைப்பாட்டைத்தான் கடுமையாகப் பின்பற்ற வேண்டிய தார்மீக நிலையில் உள்ளேன்.
எனவே இந்த இயக்கத்தில் இணைய நினைக்கும் அனைவரும் இதேவித உறுதியுடன் எப்பதவிக்கும் ஆசைப்படாதவராக மன உறுதி உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே இந்தச் சங்கத்தில் இனணயத் தகுதி உடையவர்களாவர்.
ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தில் இணைவதென முடிவெடுத்த இந்த நொடி முதல் நீங்களும் அத்தகையவரே.
கருத்துகள்
கருத்துரையிடுக