நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்!


தமிழகத்தில் அருவருக்கத்தக்க புதிய நாகரீகம் பரவி வருகிறது.

அரசியல் இயக்கத் துலைவர்கள், சாதித்தலைவர்கள், வன்முறை குணம் கொண்டவர்கள் எவரேனும் இறந்து விட்டால் உடனடியாகக் கடையடைப்பு நடத்தச் சொல்லி அவர்தம் ஆதரவாளர்கள் வற்புறுத்துகின்றனர்.

மறுத்தால் கடைகளை அடித்து உடைப்பது சொத்துக்களை நாசம் செய்வது மட்டுமின்றி மரங்களை வெட்டிச் சாய்த்துப் போக்குவரத்தினைத் தடை செய்தல், பேருந்துகள், வாகனங்களைக் கல்வீசித் தாக்குதல், கண்ணில் பட்ட வாகனங்களை அடித்து நொறுக்குதல், தீ வைத்துக் கொளுத்துதல் என இவர்களின் வன்முறைப் பட்டியல் நீளும்!

சில நேரங்களில் தலைவர்களுக்கு உடல் நலக் குறைபாடு எனும் வதந்தி பரவினால்கூட மேற்கண்ட வன்முறைச் செயல்கள் அரங்கேறுகின்றன!

பூமிப்பந்தில் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதற்கு எவரும் பிறப்பெடுத்து வருவதில்லை. அவரவர் உடல்வாகு மற்றும் வினைகளுக்கேற்ப இந்த பூமியில் சராசரியாக எழுபது வயது வரை மட்டுமே எவரும் வாழ இயலும்.

பொதுவாக வயதானவர்களுக்கு உடல் நலக் குறைவு அடிக்கடி வருவதென்பதுடன் மரணமும் வருவதென்பது உலக நியதி. இந்த நியதிக்கு எவருமே தப்ப இயலாது!

இதற்கெல்லாம் வன்முறை பரப்புவதென்பது எவராலும் ஏற்றுக் கொள்ளவே முடியாத குணமெனலாம்.

நம் தமிழக கிராமங்களில் இன்னும் பரவலாக வயதான ஒருவரின் இறப்பிற்குப் பின்னர் இதோ இது போன்ற சில நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் காணலாம்!

அவரவர் வசதிக்கேற்ப பூப்பல்லக்கில் அவரது சடலத்தை ஏற்றி மேளதாளம் முழங்க கிராமத்து இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் சுமந்து சென்று தகனம் செய்யவோ புதைக்கவோ செய்வர்!

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கெனச் செல்லும் இதுபோன்ற இறுதி ஊர்வலங்களின் போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் வெடி வெடித்தல் போன்றவைகள் தேவைதானா எனத்தான் அறிவுடையோர் எண்ணுவர்!

ஆயின் இந்த நிகழ்விற்கும் ஒரு அற்புதமான காரணம் உள்ளது!

நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து பேரன் பேத்திகளின் திருமணக் காட்சிகளையும் கண்டவர்களைக் கிராமத்திலுள்ளவர்கள் அதி உன்னதமான வாழ்க்கை வாழ்ந்தவர்களாகத்தான் கருதுகின்றனர்.

இதற்கும் மேலாக இறந்தவர் ஊரில் நேர்மையாகவும் நல்ல குணத்துடனும் எவரிடமும் கெட்ட பெயர் எடுக்காமல் வாழ்ந்தவராக இருந்திருந்தால் இவரைப் போன்ற நல்லவர்களின் மரணம் கொண்டாடத்தக்கது என நம் முன்னோர்கள் கருதியிருக்க வேண்டும்!

எனவேதான் இது போன்ற நல்லவர்கள் மரணிப்பதில்லை. அவர்களின் உடல்தான் இந்த உலகை விட்டு நீங்குகிறதே தவிர அவர்களின் உயர்ந்த குணங்களும் எண்ணங்களும் இந்த உலகில் நிரந்தரமாகத் தங்கியுள்ளன. மேலும் இது போன்ற உத்தமர்களின் உயிர் மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் பிறப்பெடுத்து மனித குல உயர்வுக்குப் பயன்படுவர் எனக் கருதியும்தான் நம் முன்னோர்கள் இது போன்றவர்களின் மரணத்தைக் கொண்டாடியுள்ளனர்!

அதே சமயம் இளம் வயதுடையவர்களின் மரணத்தை நம்மவர்கள் கொண்டாடியதில்லை! அவர்களின் மரணத்தைத்தான் துக்ககரமானதெனக் கருதி அவர்களின் இறுதி ஊர்வலம் மௌனமாக நடைபெறும்!

ஆக நம் தமிழ் மண்ணின் மேன்மைக்காக உண்மையிலேயே எவரேனும் பாடுபட்டு நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தம் இன்னுயிரை இந்த மண்ணில் ஈந்தால் இது போன்ற உன்னதமானவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் நாம் வாழும் பெருமை பெற்றதற்காக அவரது மரணத்தை நாம் உண்மையிலேயே கொண்டாட வேண்டும்! அவர்களின் மரணம் வருந்தத்தக்கதல்ல! கொண்டாடத்தக்கது!

இது போன்ற நல்ல உயிர்கள் தாங்கிய உடல்கள் வேண்டுமானால் மண்ணில் புதைக்கப்படலாம். ஆனால் அவர்களின் உயிர்கள் விதைக்கப்படுகின்றன. அவை மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் பிறப்பெடுதது இந்த மண்ணின் மேன்மைக்காகப் பாடுபடப் போகின்றன.

எனவே இத்தகைய உயிர்கள் பிரபஞ்சப் பெருவெளியில் தங்கிவிடாமல் மீண்டும் இந்த மண்ணில் பிறப்பெடுக்க வேண்டுமெனத்தான் உலகத்தவர்கள் தங்களின் எண்ணங்களை இத்தகையவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவரிடம் வேண்டுதல்களாகச் செழுத்தப்பட வேண்டும்!

இதற்கு மாறாக ஒருவரின் மரணத்திற்குப் பிறகு இந்த மண்ணில் கலவரங்கள் வன்முறைகள் ஏற்படுத்தப்படுகின்றதென்றால் அந்த மனிதர் எப்படி வாழ்ந்திருந்தாலும் அவரது மரணத்திற்குப் பின்னர் ஏற்படுத்தப்படும் வன்முறை விளைவுகள்தான் அவர் நல்லவரா கெட்டவரா என்பதை மக்கள் சக்தி அறிந்து கொள்ள முடிகிறது.

அடுத்தவர் உழைப்பினை வீணடித்து ஏராளமானவர்களைச் சிரமத்திற்கு ஆளாக்குபவர் எப்படி ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்திருக்க முடியும்? இத்தகைய தலைவர்களை வரலாறு கொடுங்கோலர்களாகத்தான் பதிவு செய்யும்!
ஐந்தாம் தமிழ்ச்சங்க ஆட்சி காலத்தில் உன்னதமான தலைவர்களாகக் காட்சியளிக்காது மக்களோடு மக்களாக இணைந்து தொண்டாற்றும் மக்கள் தொண்டர்கள்தாம் தம் இறுதிக் காலத்தில் அடையாளம் காணப்பட்டுத் தமிழக மக்களால் கொண்டாடப்படுவர் 

எனவே  உன்னதமானவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் நாம் வாழும் பெருமை பெற்றதற்காக அவரது மரணத்தை

                                 எல்லோரும் கொண்டாடுவோம்! 
                                  நல்லோர்கள் வாழ்வை!  எண்ணி! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!