பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களின் நினைவிட இல்லம்
பகுத்தறிவு பற்றிய அறிமுகம் எனது ஏழாம் வகுப்பிலிருந்தே துவங்கி விட்டது! எங்கள் பள்ளியில் சிறந்த தமிழாசிரியராகவும் சேலம் மாவட்ட பகுத்தறிவுக் கழகத்தில் ஒரு துடிப்பு மிக்க தொண்டராகவும் தந்தை பெரியார் அவர்களின் தலைமையேற்று வழி நடக்கும் உயர்திரு ஆ.பெரியசாமி தமிழய்யா அவர்களால் என்னுள் இளம் வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு விதை ஊன்றப்பட்டுவிட்டதெனலாம்! தமிழய்யா எங்கள் வகுப்பில் நுழைந்து பாடம் எடுத்து முடிக்கும்வரை எங்கள் வகுப்பறை ஆரவாரத்தில் உற்சாகிக்கும்! தமிழர் வரலாறு, இலக்கணம் எனத்துவங்கித் தவறாமல் சமுதாயச் சீர்கேடுகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும், பொய்யான இழிவான இதிகாசங்களையும் சாடி எங்களுக்குள் பகுத்தறிவு வளர்ப்பதற்குப் பாடுபட்டார்! இலக்கண விதியில் எப்படி எழுதுகிறேன் என்பது எனக்குத் தெரியாவிட்டாலும், தமிழய்யா போன்றவர்களால்தான் ஓரளவு என்னால் தமிழில் எழுத்துப் பிழையின்றி இன்றும் எழுத முடிகிறது! எங்கள் ஊர் சந்தைத் திடலில் அமைந்திருந்த ஒரு மேடையில் தந்தை பெரியார் அவர்கள் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் ஆர்வமுடன் நானும் கலந்து கொண்டேன்!...