வள்ளுவ மகுடம்! அதிகாரம் 9. விருந்தோம்பல்!
உலகிலேயே விருந்தோம்பலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்ற பெருமைக்குரிய மகுடத்தை இன்றைய தலைமுறைத் தமிழர்கள் இழந்து வருகின்றனரோ என ஐயுற்று இந்த இழி நிலை மாற வேண்டும் எனத் தவிக்கிறது நம் முன்னோர்களின் மனம்!
விருந்தோம்பலில் தவிர்க்க வேண்டிய இழி குண மகுடங்களெனப் பின்வருவனவற்றைப் பட்டியலிடுகின்றது வள்ளுவம்.
விருந்து வெளியிருக்கத் தான் மட்டும் தனித்து உண்ணல்,
முகரும்போதே வாடும் அனிச்சமலர் போன்று, வந்த விருந்தினரின் முகம் திரிந்து வாடுமாறு நோக்குதல்,
பொருளை வருந்திப் பாதுகாத்து அவற்றை மற்றவர்க்கு உதவாது பயனற்றதாக்குதல், இவையெல்லாம் அறிவற்றவர்களின் செயலாம்.
அதே சமயம் விருந்தோம்பலில் சிறந்தவர்களின் உயர் குண மகுடங்களாக வள்ளுவம் இவற்றையும் விவரிக்கின்றது.
அகமும் முகமும் மலர்ந்து விருந்தினரை வரவேற்று உபசரித்துத் தம் உழைப்பில் கிடைத்த செல்வத்தை, மனைவியின் துணையுடன் சிக்கனம் செய்து, அச் செல்வத்தை விருந்தினருக்கென்றே செலவிட்டு வாழ்தல்,
விருந்தினர் உண்டது போக மீதமுள்ள உணவு குறைவாக இருந்தாலும் நிறைவாக உண்டு வாழும் குணநலம்,
வந்த விருந்தை உபசரித்து வழியனுப்பியபின், இனி வரும் விருந்துக்காக ஏங்கிக் காத்திருத்தல் போன்றவை விருந்தளிப்போரின் உயர் குண மகுடங்களாம்.
இத்தகு உன்னத குணமுடையோர்தாம், தம்முடைய விருந்தோம்பலின் தன்மைக்கேற்ப திருமகள் எனும் செல்வம் நிலைத்து வாழும் வளமும்,
ஞானிகளின் விருந்தினராகும் தகுதியும், தமது விளை நிலத்தில் விதைக்காமலே பயிர் விளையும் நன்மையும் அடையப்பெறுவர் என வளளுவம் சிறப்பு செய்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக