சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன!
தமிழகத்தில் உள்ள ஆளும் இயக்கத்திற்கு எதிரான மத்திய மற்றும் மாநில இயக்கங்கள் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்குக் கோரி அடிக்கடி அறிக்கைகள், போராட்டங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், விழிப்புணர்வு நடைப்பயணங்கள் போன்றவற்றை மேற்கொண்டிருக்கின்றன! தேசத்தந்தையின் பெயர் தாங்கிய இயக்கமும் இவற்றில் அடக்கம்!
இந்த இயக்கங்கள் எல்லாம் ஏதோ தற்பொழுதுதாம் தமிழகத்தில் துவங்கியவை போலவும், தமிழக மக்களை தற்பொழுதுள்ள ஆளும் இயக்கம் மது போதையில் வீழ்த்தியிருப்பதை இந்த இயக்கங்கள் இப்பொழுதுதாம் கண்ணுற்றது போலவும் பரப்புரைகள் மேற்கொண்டு வருகின்றன!
பொதுவாக போதை ஏறிய ஒரு நபருக்கு சுயநினைவு தப்பிவிடுவது இயற்கை! போதை ஏறிய நிலையில் அவரிடம் எந்தவித அறிவுரைகளும் ஏறாதென்பதும் அனைவரும் அறிந்ததே!
மதுவால் வரும் வருமானத்தில் திலைக்கும் தமிழகத்தை ஆளும் இயக்கமும் ஏறக்குறைய இதே போதை நிலையில்தான் உள்ளதென்பதும் மதுவால் விளையும் கேடுகள் பற்றிய அறிவுரைகள் இவர்களிடம் எடுபடாதென்பதும் இந்த இயக்கங்களுக்கு விளங்காததல்ல!
மதுவிற்கு எதிராகப் பரப்புரை நிகழ்த்தும் மத்திய மாநில இயங்கங்கள் அனைத்துமே தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்திய மற்றும் தொடர்ந்து அமல்படுத்தும் இரு பெரும் திராவிட இயக்கங்களின் தயவால்தாம் தங்களின் அரசியல் வாழ்வை இதுவரை வளர்த்து வந்து தக்க வைத்துக் கொண்டுள்ளன!
இன்னும் ஒரு படி மேலே சொல்வதென்றால் இந்த இயக்கங்கள் தேர்தலுக்குத் தேர்தல் இந்த இரு பெரும் சாராய சாம்ராஜ்ஜிய இயக்கங்களுடன் இணைந்து சியர்ஸ் சொல்லித்தாம் தங்களின் தொகுதிப் பிரதிநிதிகளை அடைந்து வந்துள்ளன!
இதே போன்று தமிழகத்திலுள்ள அனைத்து இயக்கங்களும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களை பரிமாறிக்கொள்கின்றன! அதே சமயம் இது போன்ற இயக்கங்கள் அனைத்துமே ஊழலில் ஈடுபட்ட பெரிய இயக்கங்களின் தேர்தல் கூட்டணிகளில்தாம் மாறி மாறிப் பங்கேற்று ஊழல் பணத்தை வாரி இறைத்து தேர்தல் வெற்றிகளைச் சுவைத்து வந்துள்ளன!
இப்படிப்பட்ட நிலையில் இந்த இயக்கங்கள் மதுவிற்கு எதிராகப் போராடுவதாகப் பசப்புவதும் ஊழலுக்கு எதிராகப் பேசுவதும் தலைப்பிற்கேற்றவாறு சாத்தான்கள் வேதம் ஓதுவதாகத்தாம் எம் போன்ற பாமரர்கள் மனதில் படுகிறது!
கருத்துகள்
கருத்துரையிடுக