இது ஒரு நல்ல துவக்கம்!!
பிறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்! என்ற கவிஞரின் வைர வரிகளுக்கேற்ப மறைந்தாலும் என்றென்றும் மக்கள் நினைவுகளில் வாழும் கலாம் அவர்களின் மறைவுகூட ஒரு நல்ல தொடக்கத்திற்கு வித்திட்டுள்ளது. திரு கலாம் அவர்கள் மறைவுச் செய்தியினை உலகம் கேட்டது 27.07.15 அன்று இரவு 8.30 மணி வாக்கில்தாம். இதைக் கேள்விப்பட்ட நேரம் முதல் நாடெங்கும் உள்ள மக்கள் மனதில் சோக இருள் சூழ்ந்தது. எனினும் அவரின் மறைவைக் கேட்டவுடன் நள்ளிரவு வரையில்கூட ஆங்காங்கே மக்கள் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி செழுத்தி வருவதாக ஊடகங்கள் வாயிலாகச் செய்திகள் வரத்துவங்கின. மறு நாள் காலை கலாம் அவர்கள் வாழ்ந்த இராமேசுவரத்தில் மட்டும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதாகவும், (கவனியுங்கள் அதுகூட அவர் மீது அந்தத் தீவு மக்கள் கொண்டிருந்த அபரிமிதமான பாசத்தின் காரணமாகத்தானே தவிர கட்டாயத்தின் காரணமாக அல்லவே அல்ல) அந்தத் தீவில் வாழும் மீனவர்கள் கலாம் அவர்களின் மறைவு காரணமாக மூன்று நாட்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கப் போவதில்லை எ...