தாயில்லாமல் நானில்லை

இன்று எங்கள் அன்னையின் நினைவு நாள்.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எங்களின் அன்னை வேதனைகள் சுமந்த வாழ்க்கையைத்தான் அனுபவித்து வந்தார். எனக்கு 10 வயது இருக்கும்போது எங்களது மூத்த சகோதரியின் திருமணம் மட்டுமே பிளவுபடாத எங்கள் பாட்டி முத்தாயம்மாள் குடும்பம் ஒற்றுமையுடன் நடத்தியது எனலாம். 

அதன் பின்னர் வசதியாக வாழ்ந்த எங்கள் குடும்பம் பிளவுபட்ட நிலையில் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட நிலையிலும் மீதமுள்ள தனது மூன்று பிள்ளைகளையும் எவ்வளவோ இன்னல்களுக்கு இடையிலும் எங்களுக்கு வறுமையின் நிறம் அறியாமல் தான் பட்டினி கிடந்தேனும் அரவணைத்து வளர்த்தவர்.
இளம் வயதில் உணவை நான் இறைத்து உண்ணும்போது படிப்பறிவு குறைந்த நிலையிலும் ஏசு நாதர் உணவை வீணாக்காமல் தன் கையில் ஒரு ஊசியை வைத்துக் கொண்டு ஓரிரு பருக்கைகளையும் குத்தி எடுத்து உண்பார் என்று என்னுள் ஏசு கிறிஸ்துவையும் அறிமுகப்படுத்தியவர்.(பின்னாளில் அது திருவள்ளுவர்  வாழ்வில் நடந்த நிகழ்வு என்பதை நான் அறிந்தேன்)

ஒரு முறை எனது எட்டாம் வகுப்பு ஆசிரியை ஒருவர் நாகரீகமாக உடை அணிந்து சேலத்தில் இருந்து வருபவர், என்னை எதற்கோ அடித்துவிட நான் இல்லம் திரும்பி அவரது நாகரீக அலங்காரம் குறிப்பிட்டு என்னை அடித்த கோபத்தில் இகழ்வாகப் பேசத் துவங்க என் அன்னையோ உடனடியாக என்னை கடிந்துகொண்டு கல்வி கற்பிக்கும் ஆசிரியையை இப்படிப் பேசக்கூடாது என்று கண்டித்து என்னை நல்வழிப்படுத்தினார். 

எங்கள் குடும்பம் சொந்த ஊரை விட்டு நாடோடி வாழ்க்கை துவங்கிய பின்னர் எங்கள் தாயாருக்கு வறுமை நிலை நீங்கினாலும் வணிகக் குழப்பங்களால் எனது திருமணத்திற்கு பிறகு அவருடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையில் இருந்து விலக்கி விதி என்னை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றபோதும் தன் கணவரே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்தவர். 

எங்கள் தந்தையின் மறைவுக்குப் பின்னர் சொந்தங்களுடன் வாழ வேண்டும் என்ற அவரின் விருப்பப்படியே சொந்த ஊர் திரும்பி வாழ்ந்து மறைந்தார்.

எவ்வளவோ இன்னல்களுக்கு இடையிலும் நேர்மை சார்ந்த வணிகமும், வேலைக்கு செல்லவேண்டிய நிலையில் கூட அதே நேர்மை தவறாத வாழ்க்கை முறைக்கு என்னை வளர்த்ததில் என் தாய்க்கும் அதிக பங்குண்டு.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் தமிழ் மண்ணில் பிறக்கையிலே 

அவன் நல்லவன் ஆவதும் 
தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே 

இந்தத் தமிழ் மண்ணில் நான் பிறப்பெடுக்க கருவில் தாங்கி வலிகள் தாங்கிய என் அன்னையுடன் நீண்ட காலம் வாழ வழியின்றிப் போனதில் விதியின் பங்கும் ஏராளம்.

எனினும் எம் தந்தை மறைந்த அதே தை மாதத்தில் பால்வெளியில் கலந்த எம் அன்னைக்கு என் பிறப்பின் நோக்கம் புரிந்திருக்கும்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தம் மகவைச் சான்றோன் எனக் கேட்ட தாய்
இதற்கு இன்னும் நேரம் வரவில்லை.

அதை எம் தமிழ் அன்னைதான் தீர்மானிப்பார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!