வள்ளுவ மகுடம்! அதிகாரம் 5. இல்வாழ்க்கை!
இல்லறம் துறவறம் மற்றும் பொதுநலம் ஆகிய மூன்று துறைகள் சார்ந்தவர்க்கு இல்லறத்தில் இருப்பவர்கள் துணையாக விளங்க வேண்டுமென வள்ளுவம் அறிவுறுத்துகிறது.
இல்வாழ்க்கையில் ஈடுபடும் தம்பதியருக்கு உரிய மகுடங்களாக வள்ளுவம் அன்பையும் அறத்தையும் பரிந்துரைக்கிறது.
பழிக்கு அஞ்சுதல், அறவழியில் ஈட்டிய பொருளை விருந்தினர், துறவியர் மற்றும் சுற்றத்தாருடன் பகுத்துண்டு, பிறர் பழிக்கும் தீமைகள் இன்றி வாழ்தல் ஆகிய குணங்களோடு வாழ்பவர்கள் தெய்வத்திற்குச் சமமானவர்கள் எனப் புகழ் மகுடம் சூட்டுகிறார் வள்ளுவர்.
இத்தகு மேன்மையான வாழ்க்கை முறையை இல்லறத்திலிருந்து கொண்டே வாழ்பவர்கள் தவம் செய்பவர்களை விட வலிமையானவர்கள் எனவும் மேம்படுத்துகிறது வள்ளுவம்.
வள்ளுவர் உலகளாவிய அளவிற்கு உயர்ந்து சிறப்படையப் பின்புலமாகத் திகழ்ந்தவர் அவரது துணைவியாகிய வாசுகி அம்மையார் அவர்கள்தாம் எனலாம்.
தாம் வகுத்த குறள் நெறிகளுக்கேற்ற துணைவியாக அவரை அடைந்ததால்தாம் வள்ளுவப் பெருந்தகை அனுபவித்து அனுபவித்து குறள் நெறி முழுக்க இல்லறத்திலுள்ள நல்லறங்களைப் போதித்துள்ளார்.
இன்றுள்ள தலைமுறைத் தமிழ்ப் பெண்களை வாசுகி போல வாழுங்கள் என்றால் அவர்கள் திரும்ப நீங்கள் வள்ளுவர் போல முதலில் வாழ முயலுங்கள் எனப் பதிலுரைக்கின்றனர்.
வள்ளுவம் வலியுறுத்தும் தேவைப்படும் மகுடங்களைத் தேர்ந்தும் மற்றும் தேவையற்ற மகுடங்களைத் தவிர்த்தும் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதை தம்பதியரின் மனச்சாட்சிக்கே விட்டுவிட்டு,
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் பண்பும் பயனும் பெற்றுத் திகழ வேண்டுமென்பதே வள்ளுவத் தந்தையும் வாசுகித் தாயாரும் தமிழ் மக்களுக்குச் சூட்டிய இல்வாழ்வின் இலக்கண மகுடமாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக