வள்ளுவ மகுடம்! அதிகாரம் 7. மக்கட் பேறு!
ஆண் பெண் இருவரும் இணைந்த வாழ்க்கையில் அவர்கள் பெற்றெடுக்கும் மக்கட்செல்வங்களால்; அடையும் இன்பங்களை வள்ளுவம் வியப்புடன் எடுத்தியம்புகிறது.
குழந்தைகள் தம்மைத் தொடுவதால் அடையும் இன்பமும்,
சிறு குழந்தையாயின் குழலையும் யாழையும் விட மிக இனியதான அவர்தம் மழலை மொழியும்,
மழலையரின் சிறு கையால் அளையப்பட்டுப் பெறப்பட்ட உணவு அமிழ்தத்தை விட மிக இனிமையானதெனவும் வள்ளுவம் நயம்பட எடுத்தியம்புகிறது.
நல்ல பண்புகளை உடைய மக்கட்செல்வத்தைப் பெற்றவருக்கு அடுத்தடுத்துத் தொடரும் பிறவிகளிலும் துன்பமகுடம் சேராதென உறுதிபட உரைக்கும் வள்ளுவம்,
சான்றோராக வாழ்ந்து மிகச்சிறந்த பண்புநலன்களைப் பெற்று ஈன்ற பொழுதினை விடப் பெரிதுவக்கும்படி தம் தாய்க்கும்,
இத்தகு மக்களைப் பெற இவர் தந்தை என்ன தவம் செய்தனனோ எனப் பிறர் வியக்கும்படித் தம் தந்தைக்கும் பெருமை செய்வதே,
பிள்ளைகள் தம் பெற்றோருக்குச் சூடி அழகு பார்க்கும் சிறந்த புகழ் மகுடங்களாம்.
அறிவிற் சிறந்தவராகத் தம் மக்கட்செல்வத்தை உடையவரே மிகச்சிறந்த பெற்றோராவர்.
இதைவிடச் சிறந்த வேறு எதையும் உலகத்தில் தம்மால் காண இயலவில்லை எனவும் வள்ளுவர் வெளிப்படையாக ஒப்புகிறார்.
அறிவொழுக்கங்களில் சிறந்தவர்களாக, கற்றவர் சபையில் முதன்மையுற்றவர்களாகத், தாம் பெறாத அறிவைத் தம் மக்கள் அடையுமாறு செய்வதே
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டும் அறிவு மகுடங்களாம்
கருத்துகள்
கருத்துரையிடுக