மதுரைக்கு வழி வாயிலே!
தமிழில் இப்படி ஒரு பழமொழி வழங்கி வருவது நாம் எல்லோரும் அறிந்ததே!
நான் வணிகம் செய்த காலத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு சட்டம் கடுமையாக இருந்ததில்லை.
வணிகம் துவக்கிய ஆரம்ப நாட்களில் என்னுடைய வணிகம் மிகவும் குறைவாக இருந்ததால் வேறு வழியின்றி நண்பர்களின் ஆலோசனையின் பேரில் ஒரு பனிரெண்டு வயதுச் சிறுவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டேன்!
அந்தச் சிறுவனின் குடும்பம் நான் வசித்த இடத்திற்கு அருகில்தான் இருந்தது! மேலும் அந்தச் சிறுவனின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால் அவனது தாயார் மற்றும் சகோதரர்களின் உழைப்பில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.
இந்தக் காரணத்தினாலேயே அவனும் படிப்பதற்கு வழியின்றி என்னிடம் வேலைக்குச் சேர்ந்தான்!
ஏழாம் வகுப்புதான் பயின்றிருந்தாலும் சுட்டியாக இருந்ததால் அவனை வங்கிகளுக்குச் சென்று பணம் செலுத்தி வரப் பழக்கினேன்! நண்பர்கள் பலமுறை எச்சரித்தாலும் என்னுடைய நம்பிக்கையும் அவனது துணிச்சலும் ஒரு முறைகூட வீணாகாமல் பணத்தைத் தொலைக்காமல் என்னிடம் அவன் வேலையில் இருந்தவரை வங்கிகளுக்கு ஆயிரக்கணக்கில்
எடுத்துச்சென்று பத்திரமாகக் கையாண்டான்!
ஒரு முறை அவனை கொள்முதலுக்கென அவனுக்கு முற்றிலும் பழக்கமில்லாத எங்கள் வணிக நிறுவனம் அமைந்திருந்த கருவூர் நகரிலிருந்து 80 கல் தொலைவில் திண்டுக்கல்லுக்கும், அங்கிருந்து 65 கல் தொலைவில் இருந்த தாராபுரத்திற்கும் சென்று பணம் செலுத்தி வருவாயா எனக் கேட்டேன்!
அந்தந்த நகர்களுக்குச் சென்று பேருந்து விட்டிறங்கி பணம் செலுத்த வேண்டிய நிறுவனங்கள் அமைந்திருந்த சாலை விபரத்தைத் துல்லியமாகப் படமாக வரைந்து காட்டி விளக்கி அங்கு சென்று பணம் கட்டிவிட்டுப் பத்திரமாகத் திரும்பி வரவேண்டும்!
எவரிடமும் ஏமாந்து பணம் போனாலும் பரவாயில்லை! நீ பேருந்துக்கென கொண்டு செல்லும் பணத்துடன் பத்திரமாக மீண்டு வந்தால் போதும் என அவனுக்கு நம்பிக்கையளித்து மதிய உணவிற்குப் பின்னர் திண்டுக் கல்லுக்குப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டேன்!
அவனும் எவ்விதப் பயமுமின்றி அவனுக்கு முற்றிலும் புதிய நகராயிருந்த திண்டுக்கல் சென்றடைந்து அங்கு பணம் செலுத்த வேண்டிய நிறுவனம் சென்றடைந்து பணம் செலுத்தி பொருட்களுக்கு ஆர்டர் தந்துவிட்டு, பின்னர் பேருந்து நிலையம் திரும்பி தாராபுரத்திற்கு சென்று அங்கிருந்த நிறுவனத்திலும் பணம் செலுத்தி ஆர்டர் கொடுத்துவிட்டுப் பத்திரமாக இரவு எட்டு மணிக்குள் எனது நிறுவனம் திரும்பிவிட்டான்!
இன்றைக்குள்ளது போன்று கைபேசி வசதிகள் இல்லாத காலம் அது! அந்தச் சிறுவனுக்கு இருந்த துணிச்சலை நம்பித்தான் நான் அவனை இது போன்று அனுப்பி அவனை இளம் வயதிலேயே ஒரு தன்னம்பிக்கையாளனாக உருவாக்கினேன்!
இங்கு இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இன்று படித்துவிட்டுப் புதிதாக வேலைக்கு வரும் இளைஞர்களை நகரிலுள்ள ஏதேனும் ஒரு நிறுவனத்திற்குச் சென்று வருமாறு அனுப்பினால் அந்த நிறுவனத்தின் அருகிலேயே சென்றுவிட்டு அங்கே அந்த நிறுவனம் இல்லை, சரியான இடம் சொல்லுங்கள் என உடனே கைபேசியிலிருந்து வழி கேட்கின்றனர்!
அருகிலுள்ள ஏதேனும் ஒருவரிடமோ அல்லது ஒரு நிறுவனத்திலோ தாங்கள் தேடி வந்த நிறுவனத்தின் பெயர் அல்லது தெரு சொல்லிக் கேட்பதற்கு அவர்கள் முயலுவதில்லை!
இன்றைய இளைய சமுதாயத்தை பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி விட்டால் வீடு, வீடு விட்டால் பள்ளி என்று எவ்விதச் சுதந்திரமும் இன்றி வளர்ப்பதின் விளைவுதான் இது!
வங்கிகளுக்குச் சென்று பணம் கையாள்வது, அல்லது புதிதாக வங்கிக் கணக்குத் துவங்குவதற்குக் கூட இன்றைய இளைஞர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்பதை நான் எனது சொந்த அனுபவத்திலேயே பலமுறை கண்டுள்ளேன்!
இப்படிப்பட்டவர்களை மனதில் கொண்டுதான் மதுரைக்கு வழி வாயிலே என்ற பழமொழியே தமிழில் உருவாகி இருக்குமென்று கருதத் தோன்றுகிறது!
கொசுறுக் குறிப்பு!
என்னிடம் வேலைக்கு வந்த இன்னொரு சிறுவனைத் தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்தி வருமாறு பேருந்து நிலையம் மேல் தளத்தில் அமைந்திருந்த அஞ்சல் அலுவலகத்திற்கு அனுப்பினேன்! வெகு நேரமாகியும் அவன் திரும்பி வரவில்லை!
எனக்கு உதவியாக அவ்வப்போது எனது நிறுவனத்திற்கு வரும் எனது மனைவி உட்பட நண்பர்கள் அனைவரும் சிறுவனை அனுப்பிய எனது செயலைக் கண்டித்தனர்!
நானோ அவன் கண்டிப்பாக பத்திரமாக வருவான் என நம்பிக்கையுடன் இருந்தேன்!
நேரம் ஆக ஆக இவர்களின் பதட்டம் என்னிடமும் வேறு வழியின்றித் தொற்றிக்கொள்ளவே நான் உடனே எனது வாகனத்தில் ஏறி அவனைத் தேடத் துவங்கினேன்!
முன்னதாக வேறு ஒருவரை அனுப்பி அவன் சென்ற அஞ்சல் நிலையத்தில் சென்று பார்த்து வர அனுப்பினால் அவன் அங்கில்லை என்றும் எனக்கு பதில் வந்தது!
எனக்கும் பதட்டமேற்பட்டு நகரத் தெருக்களில் அவனைத் தேடிய சிறிது நேரம் கழிந்து எனது மனைவியிடமிருந்து அழைப்பு எனக்கு கைபேசியில் வந்தது சிறுவன் பத்திரமாக வந்து விட்டான் என!
நிறுவனம் திரும்பி அவனை விசாரித்தால் பேருந்து நிலைய அஞ்சல் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் தொலைபேசிக் கட்டணம் செலுத்தக் கடைசி நாளாக இருந்ததாலும் இருக்கும் கூட்டத்தில் வரிசையில் நின்று பணத்தைக் கட்ட முடியாமல் போகுமோ எனக் கருதி அங்கு இருந்த பணியாளரிடம் விசாரித்து நேராகத் தொலைபேசி நிலையமே சென்று பணத்தைக் கட்டிவிட்டு வந்ததாக வெற்றிக் களிப்புடன் தெரிவித்தான்!
எனக்கு அப்பொழுதும்கூட நண்பர்களிடமிருந்து எச்சரிக்கையான அறிவுரைகள்தாம் வந்தது! அதனை நானும் புதிதாக வந்த அந்தச் சிறுவனும்கூட ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை! அவனும் என்னிடம் இருந்தவரை பத்திரமாகப் பணத்தைத் தொலைக்காமல், எவரிடமும் ஏமாறாமல் வங்கிகளுக்குக் கொண்டு சென்று சேர்த்து வந்திருந்தான்.
13.12.2024
கருத்துகள்
கருத்துரையிடுக