ஞான தேசிகன் சித்தர்


ஈரோடு மண்ணுக்கு நான் வந்தபோது எனது மைத்துனரின் சித்த மருத்துவ ஆசானாக அறிமுகம் ஆனவர்தாம் திரு ஞான தேசிகன் அவர்கள். 

அவரது மருத்துவ வித்தை குறித்தும் அவரிடமுள்ள ஆன்மீக சக்தி பற்றியும் எனது மைத்துனர் வாயிலாக அறியத் துவங்கிய நான் ஒரு நாள் அவரைச் சந்திப்பதற்காக அவரது சித்த மருத்துவமனை அமைந்திருந்த சிவன் மலை அடிவாரத்திற்குச் சென்றேன்.

என்னை ஒரு மகனைப் போல அன்பு காட்டி வரவேற்ற அவரை இரண்டாவது முறையாக நான் சந்தித்தபோதுதான் என்னை அறியாமலேயே அவரது வழி காட்டுதலுக்கு ஆளாகத் துவங்கினேன். 
இரண்டாவது முறை என்று நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் நான் முதன் முறையாக அவரைச் சந்தித்ததே கன்னியாகுமரியில்தாம்.

அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்ததற்கு முதல்நாள் எனது துணைவியின் அத்தை மகன் ராஜ்குமார் திருச்சியில் இருந்து என்னைக் காண்பதற்காக கருவூர் வந்திருந்தார். 
நான் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது எனது மூத்த மைத்துனர் குடும்பத்துடன் எனது துணைவியும் தவசி அவர்களுடன் கன்னியாகுமரிக்கு ஆன்மீகப் பயணமாகச் சென்று இருப்பதைப் பற்றி நான் எடுத்துரைத்து அதோடு விடாமல் நாம் இருவரும் கன்னியாகுமரிக்குச் செல்வோமா எனக் கேட்க அவரும் தட்டாமல் என்னுடன் கிளம்பிவிட நாங்கள் இருவரும் திருச்சி சென்றடைந்து அங்கிருந்து இரயிலில் புறப்பட்டு இரவோடு இரவாக ஒரு வழியாகக் கன்னியாகுமரி சென்றடைந்து தவசி அவர்களைச் சந்தித்தோம்.

அதன் பின்னர் நான் அவசரம் அவசரமாக கன்னியாகுமரித் தாயைத் தரிசித்துவிட்டு அவர்கள் வந்திருந்த பேருந்திலேயே பயணித்து மதுரை வந்தடைந்த போது எனது சிறிய மாமனார் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதான தகவல் வந்ததால் நாங்கள் இருவரும் அப்படியே திருச்சிக்குச் சென்று அவரைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு நான் ஈரோடு திரும்பினேன். 

அந்த முதல் சந்திப்பின்போது நான் ஏற்கனவே அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தபோதும் அவர் மீது நம்பிக்கையற்றவனாகத்தான் இருந்தேன். ஏனெனில் அவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டிருந்ததாக நான் அறிந்திருந்த காரணத்தால். 

எனினும் என் இந்த இரண்டாவது  சந்திப்பின்போதும் ஒரு மனிதனுக்கு மூன்று வேலை நிம்மதியான உணவுத் தேவைக்கு மட்டுமே தனது இந்தத் திருமணம் என்ற விளக்கம் தர அவரைப் பற்றிய என் தவறான புரிதல் விடை பெற்றது. 
நான் அவரை எனது மானசீக ஆசானாக ஏற்று அவரது அறிவுரைகளைப் பின்பற்றி நடக்கத் துவங்கினேன்.  

என்னைப் பற்றிய அறிமுகம் அவருக்கு ஏற்கனவே இருந்ததால் எனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி நான் சொல்லும் போதெல்லாம் அவர் எனக்கு அறிவுரையும் என் எதிர்காலத்திற்கான வழி காட்டுதலும் நிகழ்த்தத் துவங்கினார்.

சொந்த வணிகம் செய்து நட்டப்பட்டு ஈரோடு வந்திருந்த நான் ஈரோட்டில் முதல் முதலாக நண்பர் ஒருவரின் பரிந்துரையின்படி மரப்பாலம் ஜெமினி பால் பண்ணையில்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். 

அங்கு நான் கடுமையாக வேலை செய்த காரணம் மற்றும் பன்னீர் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தும் வினிகர் கால் மற்றும் கை விரல்களில் பட்டு வெடித்துப் போன நிலை தவிர எனது உடலும் பாதியளவு இளைத்துவிட்ட நிலை. 

இதைக் கண்டு சகிக்காத என் குடும்பம் அந்த வேலையை விட்டுவிட்டு எனது மாமனாரின் நண்பரான திரு.ஜெகதீசன் அவர்களின் நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல என்னை வற்புறுத்தத் துவங்க நான் அதை ஏற்காமல் தவசி அவர்களிடம் சென்று இது பற்றி நான் முறையிட அவரோ நீ பால் பண்ணை வேலைக்கே செல் என்று என்னைத் திருப்பி அனுப்பிவிடுவார்.

நானும் அவர் சொல்படிதான் நடப்பேன் என்று பிடிவாதமாகப் பால் பண்ணை வேலையிலேயே  தொடர்ந்தேன்.  ஒரு கட்டத்தில் எனது குடும்பம் தவசி அவரிடமே இது பற்றி முறையிட்டு நீங்கள் சொன்னால்தான் அவர் கேட்பார் என்று தொலை பேசியில் வற்புறுத்தினர்.
 ஒரு நாள் அவர் தொலைபேசியில் என்னை அழைத்து நேரில் வரச் சொல்லி என் கருத்து நீ பால் பண்ணைக்குதான் செல்ல வேண்டும் என்பது. 
எனினும் உங்கள் குடும்பம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நீ இனி உங்கள் குடும்பம் சொல்லும் இடத்திற்கு எனக்காகச் செல் என்று பணிக்க நான் அவர் சொல்லை மந்திரச் சொல்லாக ஏற்று பால் பண்ணை வேலையை விட்டுவிட்டு எழுது பொருட்கள் விற்பனை வணிகத்தில் வேலை செய்யத் துவங்கினேன்.

இந்த வேலையில் எனக்கு அடிக்கடி ஏற்படும் சங்கடங்கள் காரணமாக நான் அடிக்கடி சிவன்மலை சென்று தவசி அவர்களைச் சந்தித்து முறையிடுவேன். 
 அவரோ என்னைச் சமாதானப்படுத்தி அனுப்புவார். 

ஒரு முறை இந்த வேலை பிடிக்காமல் நான் வேலையை விட்டுவிடுவதாகச் சொன்னவுடன் எனது குடும்பமே ஒட்டு மொத்தமாக இந்த வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று பிடிவாதம் காட்ட நான் உடனே சிவன்மலை சென்றடைந்தேன்.

குழப்பமுற்ற மனநிலையில் இருந்த என்னிடம் அவர் தானும் வேலையை விட்டு வேறிடம் வந்தவர்தாம் என ஒரு வார்த்தையை எனக்கு அறிவுரை கூறும்போது பயன்படுத்த என்னுள் ஏதோ ஒரு மாற்றம்.  
நான் அவரிடம் விடைபெற்று ஈரோடு திரும்பி வீட்டிற்குச் செல்லாமல் அப்படியே எனது சொந்த ஊருக்குச் சென்றடைந்து எனது மூத்த சகோதரியிடம் மட்டும் நான் சென்னைக்கு வேலை தேடிப் போகப்போகிறேன். 
இதைப் பற்றி என்னைக் கேட்காமல் ஈரோட்டில் யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு அப்படியே சேலம் சென்றடைந்து இரயிலேறி சென்னை சென்றுவிட்டேன்.

அங்கு மூன்று மாதங்கள் புதிய வேலை புதிய அனுபவத்துடன் மீண்டும் ஈரோடு திரும்பி தவசி அவர்களைச் சந்தித்து ஆசியும் அறிவுரையும் பெற்று மீண்டும் திரு.ஜெகதீசன் அவர்களின் நிறுவன வேலையைத் தொடர்ந்தேன். 

அதன் பின்னர் நான் பல இடங்களில் வேலை பார்க்க மாறும் போதெல்லாம் தவசி அவர்களின் அறிவுரைகளோடுதான் எனது வேலை வாழ்க்கை அமைந்தது.

இவ்வாறு அவருடனான சந்திப்பின்போது நான் ஒரு முறை தமிழர் வாழ்வு தமிழர் பெருமை என்பது பற்றிப் பேசப்போக அவர் தமிழன் தமிழன் என்று சொல்கிறாயே நீ தமிழனா என்று எதிர்க்கேள்வி தொடுத்தார்.  

என்னுள் அதிர்வலைகள் ஏற்பட்டன. ஏன் சாமி இப்படிக் கேட்கிறீர்கள் என நான் அவரிடம் விளக்கம் கேட்டேன். பத்தாயிரம் சமணர்களைக் கழுவேற்றிய நீ ஒரு தமிழனா என்று அடுத்த கேள்வியை என் மீது வீசினார்.  

கூன் பாண்டியன் என்ற மன்னன் பத்தாயிரம் சமணர்களைக் கழுவேற்றியது பற்றிய கதையை நான் ஏற்கனவே படித்திருந்த காரணத்தால் என்னால் அவருக்கு மறு பதில் கூற இயலவில்லை.

அவருடன் கூட இருந்த அவரது சீடர்கள் சிலர் கழுவேற்றுதல் என்றால் என்னவென விளக்கம் கேட்க அவர் கொடுத்த விளக்கத்தால் நானும் ஆடித்தான் போனேன். 

எனினும் என் மனம் இதை ஏற்க மறுத்த நிலையில் நான் அந்தத் தவறை முற்பிறவியில் செய்தவன் நானாக இருந்தால் என்னை நீங்கள் கழுவேற்றலாம் என்று கண்களில் கண்ணீருடன் மறுமொழி கூற அவர் வேறு விவாதத்திற்கு மாறிவிட்டார்.

எனினும் அன்றே ஒரு நெருப்பை அவர் பற்ற வைத்துவிட்டார் என்பது மட்டும் என்னுள் தெளிவாயிற்று.  தமிழின வரலாற்றை திருப்பிக் காட்ட என் பிறப்பு என்பது உறுதியானது.
 கூன் பாண்டியன் எனும் மன்னன் நிச்சயம் ஒரு தமிழனாக இருந்திருக்க மாட்டான் என்ற எண்ணம் என்னுள் வலுப்படத் துவங்கியது.

தமிழன் என்றாலே வீரம் நிறைந்தவன். போர்க் குணம் மிக்கவன் என்ற வரலாற்றுச் செய்திகளும் அவன் போரில் வென்று ஆடுமாடுகள் மற்றும் எதிரிகளின் செல்வத்தை அபகரித்து வருபவன் என்ற செய்திகளும், 
கூன் பாண்டியன் போல தனக்குப் பிடிக்காத எதிரிகளை கழுவேற்றிக் கொல்லத் தயங்காதவன் என்ற திரிபுச் செய்திகளும் சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் என்ற சங்ககாலப் பிரிவினைகள் மட்டுமன்றி தற்காலச் சாதிமத பேதங்களால் அடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் போரில் வென்று அடிமைப்படுத்துவது அல்லது அடிமையாவது போன்ற வரலாற்றுச் செய்திகளும் பொய் எனும் எண்ணம் என்னுள் வலுப்படத் துவங்கியது.

என்னை வழி நடத்தும் சக்திகளில் நான் படிப்பதற்காக முதன் முதலாகச் சென்ற நாமக்கல் மண்ணில் பிறந்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களும் ஒருவர் என்பதை நான் அவரது இல்லத்தில் வணிக வாழ்வுக்கெனச் சுவாசித்த காற்றும் அந்த  நகரில் எனக்கு நேர்ந்த அனுபவங்களும்  சாட்சியாயின.

அதைப் போலவே எங்கள் குடும்பம் சொந்த ஊரை விட்டு நாடோடியாகி நாமக்கல் சென்றது, அதன்பின்னர் பரமத்திவேலூர் சென்றது அங்கிருந்து நான் மட்டும் கருவூர் சென்றது வரை என்னை வழி நடத்தும் சக்தியாகத் திகழ்ந்தது இன்று வரை என்னை வழி நடத்தும் முருகனின் விளையாட்டே இதுவென்பது நான் சிவன்மலைக்குச் செல்லத் துவங்கியபோதே உணர முடிந்தது,

ஈரோட்டு மண்ணுக்கு என்னை வரவழைத்து வழி நடத்தும் சக்தியாகத் தந்தை பெரியாரும் திகழ்ந்தார் என்பதை நான் பால் பண்ணை வேலையில் சேர்ந்தபோதே உணரத் துவங்கினேன். 
இவர்களை வழி நடத்தும் மகா சக்தியும் நம் தமிழ் அன்னை என்பதை நான் முழு மனதாக ஏற்கத் துவங்கினேன். 

ஆரியர் வருகையால் தமிழ் அன்னைக்கு நேர்ந்த அவலமும் தமிழர் வாழ்வை இன்றைய நரக அவல வாழ்க்கைக்கு இட்டுச் சென்றதில் பெரும் பங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் தமிழ்ச்சமுதாயத்தை பக்தி மார்க்கம் என்ற பெயரில் வழி நடத்தி வந்துள்ள மட மதவாதமே முழுக்க முழுக்கக் காரணம் என்று என் உள்ளுணர்வு எச்சரிக்கத் துவங்கியது.

அதனை உறுதி செய்யும் வண்ணமே இன்று மதவாத சக்கிகளின் ஆதிக்க மனப்பான்மை தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்க முயல்வதும் அதை எதிர்ப்பதாக முரட்டுப் பகுத்தறிவுடன் திகழ்ந்த இயக்கங்கள் தங்களின் ஊழல் குணத்தால் வாங்கிய வினைகள் தீர உதவுவார்கள் என்று பக்திமார்க்கிகளின் முன் மண்டியிட்டு பெரியாரின் எழுச்சியைக் குழி தோண்டிப் புதைப்பதையும் என் மனம் ஏற்காமல் இந்த இரண்டு  முரட்டுச் சக்திகளையும் ஒரே நேரத்தில் எதிர்க்கத் துவங்கியது.  

இந்த எதிர்ப்புணர்வு என்னுள் இருப்பதை தவசிகள் அறிவார் என்பதை விட அவர்தான் இந்த எதிர்ப்புணர்வை தான் வாழ்ந்த காலம் வரை மட்டுமன்றி இதோ இந்தப் பதிவை நான் எழுதும் இந்த நொடிவரை என்னுள் வளர்த்து வந்துள்ளார் என்பதை என்னால் உணர முடிகிறது.

 அவர் தன் இன்னுடல் விட்டு இந்தப் பேரண்ட வெளியில் கலந்த அந்த நாளின்போது நான் எனது சொந்த ஊரில்தான் இருந்தேன். அவர் நினைத்திருந்தால் என்னை அவர் உடல் இருந்த இடத்திற்கு என்னை அழைத்திருக்க முடியும். ஏன் அவர் என்னை அழைக்கவில்லை என்பதையும் நான் நன்கறிவேன்.

அவர் என்னுள் ஏற்றிய தீ இன்னும் கனன்று கொண்டுதான் உள்ளது. அது அவரைக் கொண்டு என்னை வழி நடத்தும் உலகின் ஒரே மகாசக்தியாம் தமிழ் அன்னை என்பது என்னுள் உறுதிபட ஒலிக்கிறது. 

பாரதியின் வரிகள் போல
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
ஆங்கதை மரப் பொந்தினில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு

என்னுள் இருக்கும் தீ பரவும் போது நிச்சயம் ஏராமான மாற்றங்கள் தமிழகத்தில் உருவாகும். ஏராளமான மகுடங்கள் சாகடிக்கப்படும்.

அதன் பின்னர் என்னை வழி நடத்தும் சக்திகளில் ஒருவரான நாமக்கல் கவிஞர் பாடிய வரிகள் உயிர் பெறும்.

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்.

தவசிகளார் அவர்களின் செய்தி
'தன்னைச்  சூழ்ந்ததறி"

இதற்கு என்னுள் கிடைத்த விளக்கம் தன்னைச் சூழ்ந்ததை அறிவதே அறிவு. அதுவே பகுத்தறிவு.

தவசிகளார் அவர்கள் தந்த வாழ்த்தும் முறை 

"வாழ்வாங்கு வாழ்க"

அறிவை விரிவு செய் அகண்டமாக்கு மானுட சமூகம் நானெனக்கூவு மக்கள் சங்கமத்தை அணைந்து கொள். 

நன்றி பாரதிதாசனார்.

ஒரு தாய் மக்கள் நாமென்போம்

ஒன்றே எங்கள் குலம் என்போம்

தலைவன் முருகன் தானேன்போம்

சமஉரிமை எங்கள் வாழ்வென்போம்

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் 

இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

ஆனந்த தெய்வ குமார ராஜா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!