குடிமைப் பொருட்கள் விநியோகம்!

நான் எனது 55ஆவது வயதில் தற்பொழுது செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டுச் சொந்தமாக வணிகம் செய்யலாம் என முடிவெடுத்து வேலையிலிருந்து விலகிவிட்டேன். வணிகம் துவக்குவதற்குத் தாமதமாவதால் தற்பொழுது வேலையின்றி இருக்கிறேன்.

இதுவரை எனது துணைவியார் குடிமைப் பொருட்கள் (அதாங்க ரேசன் பொருட்கள்) வாங்குவதற்காக விற்பனை அங்காடிக்குச்  சென்று வந்திருந்தார். வேலையின்றி இருப்பதால் குடிமைப் பொருட்கள் வாங்குவதற்காக அங்காடிக்கு நான் செல்லத் துவங்கினேன்.

மாதத்தின் முதல் நாள் துவங்கி அந்த வாரம் முழுவதும் அங்கு ஏராளமாக மக்கள் கூடியிருப்பர். குறிப்பாக அறுபது வயதைத் தாண்டிய முதிய  பெண்கள் அதிக எண்ணிக்கையிலும், வயதான ஆண்கள் குறைந்த எண்ணிக்கையிலும் வரிசையில் நிற்பர்.

வயதானவர்கள் என்பதால் பெரும்பாலானவர்கள் வயது மூப்பின் காரணமாக கடும் வெயிலில் வரிசையில் நிற்க இயலாமல் கடுமையான மன உலைச்சலுடன்தான் காணப்படுவர். 

இடையே காலை ஆறு மணிக்கே வந்ததாகவும், கடை திறக்காததால்  ஒன்பது மணிக்கு வீடு சென்று திரும்பி வந்தால் தன் இடத்தில் வேறு யாரோ நிற்கிறார்கள் என ஒரு 65 வயது பாட்டி அனைவரிடமும் சண்டையிட்டுக் கொண்டு கடை அலுவலரின் முன் சென்று தனக்கு முதலில் பில் போடு என்கிறார்.

இதைச்  சகித்துக் கொள்ளாத மற்ற முதிய பெண்கள் ஏக காலத்தில் கூச்சலிட கடை அலுவலர் கடுப்படைந்து அந்தப் பாட்டியின் குடிமைப் பொருள் அட்டையை ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு பில் போடத் துவங்கினார்.

பாட்டி விடாமல் பலவாறு திட்டிக் கொண்டே இருக்க பதிலுக்கு வரிசையில் நின்றவர்களும் கூச்சலிட்டவாறு இருந்தனர். ஒருவரை விட்டால் அடுத்தவரும் இதே போலத்தான் முண்டியடித்து முன்னே செல்ல முயற்சிப்பர். நாங்களும் காலையிலிருந்து கால் கடுக்க நிற்பவர்கள்தானே மேலும் இந்த பாட்டியிடம் மாதந்தோறும் இதே பிரச்சினைதான் என்ற அவர்களின் ஆதங்கமும் நியாயமானதாகவே பட்டது. நான் உட்பட அங்கிருந்த அனைவரும் மணிக்கணக்கில் வரிசையில் நின்றுதாம் பொருட்களை வாங்கவே முடிகிறது.

குடிமைப் பொருட்களை விநியோகிக்கும் மாதத் துவக்கத்தின் முதல் வாரத்தில் அடிக்கடி நிகழும் நிகழ்வு இது. இதைவிடக் கொடுமை இது போன்ற கடைகளில் மண் எண்ணை விநியோகமென்றால் காலை 9.30 மணிக்கு மேல் திறக்கப்படும் கடைக்காக அதிகாலை நான்கு மணிக்கே முதியவர்கள், குறிப்பாக பெண்கள் கடும் பனியிலும் முக்காடிட்டவாறு மண் எண்ணெய் கலன்களுடன் வரிசையில் அமர்ந்திருப்பதை பல முறை இந்த நேரத்தில் வீட்டுக்குத் தேவைப்படும் பால் வாங்கச் செல்லும்போது கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறேன்.

கணவன் மனைவி வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் வேலையற்றிருக்கும் வயதானவர்களே பெரும்பாலும் குடிமைப் பொருட்கள் வாங்கி வர வேண்டியதென்ற கட்டாயம் நம் நாட்டில் சர்வ சாதாரணம். மேலும் சிறுவர்களைப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கச் சொல்லிவிட்டு இந்தக் கடைகளில் வரிசையில் நின்று குடிமைப் பொருட்கள் வாங்கி வரச் சொல்லும் பெற்றோரும் இதில் அடக்கம்.

நாட்டு மக்கள் தங்களின் ஆட்சியில் வளமுற்றிருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஆட்சியாளர்களில் ஒருவரேனும் இது போன்று குடிமைப் பொருட்கள் வாங்குவதற்கு வரிசையில் நின்று பார்த்தால்தான் அவர்களின் சிரமம் என்னவென்று புரியும்.

மேலும் மக்கள் வளமுற்றிருந்தால் குடிமைப் பொருட்கள் வாங்குவதற்கு ஏன் இவ்வாறு முண்டியடித்துக் கொண்டு பரிதாபமாகக் கடும் வெயிலில் மணிக்கணக்காகக் காத்திருக்க வேண்டும் என்ற கேள்வியும் இயல்பாக எவர் மனதிலும் தோன்றாதிருக்காது.

வெளிச்சந்தையைவிட இங்கு மலிவு விலையில் சில பொருட்கள் கிடைப்பதால் அவற்றை இழக்கக்கூடாது என்பது ஒரு காரணம். நமக்குத் தேவையற்ற மண்எண்ணை போன்றவற்றை அதிக விலைக்கு விற்பதால் அவற்றினால் கிடைக்கும் இலாபமும் மறு காரணம். 

வணிக உபயோகத்திற்கென நான் வாங்கிய ஒரு டிஜிட்டல் தராசில் கடந்த இரு மாதங்களாக அங்கு வாங்கிய பொருட்களின் அளவீட்டைச் சரி பார்த்தேன். ஒரு கிலோவிற்கு 100 கிராம் அளவு குறைவாக 900 கிராம்கள்தான் அவை எடை காட்டியது. அந்தக் கடையில் உள்ள டிஜிட்டல் தராசில் எடை போடுபவருக்கு மட்டுமே எடை தெரியுமாறும், மறுமுனையில் என்ன எடை என்பது தெரியாதவாறும் இருந்ததை நான் கடந்த மூன்று மாதங்களாகவே கவனித்துள்ளேன்.

கடை அலுவலர்கள் தவறு செய்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. இதில் ஒரு மகத்தான நெட்ஒர்க் முறையே உள்ளது. இந்த அலுவலர்கள் இவ்வாறு தவறு செய்யத் தூண்டப்பட்டு அவர்களின் மேல் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் இவ்வளவு கப்பம் கட்டவேண்டும் என்ற நிர்பந்தம். இது சங்கிலித் தொடர்போல மேலிடம் வரை செல்கிறது. மலிவு விலை விற்பனையிலும் மலிவான புத்தியுடன் நடந்து கொள்ளும் இவர்களின் நோக்கம் தவறான வழியில் வரும் செல்வத்தின் மீதுதானே.

ஒரு கடையில் சாதாரணமாக இருநூறு மக்கள் வாங்குகிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஆறுவிதமான பொருட்கள் விநியோகம் நடக்கிறது. ஓவ்வொன்றிலும் 100 கிராம் எனக் கொண்டால் 120 கிலோ அளவில் அந்தக் கடையில் மக்களுக்குக் குறைவாக விநியோகம் செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள கடைகளின் எண்ணிக்கையையும், குறைவு படும் எடை அளவையும் கணக்கிட்டால் தலை சுற்றி மயக்கம்தான் வரும்.

மிகுதியாகும் பொருட்களை இவர்கள் வெளிமார்க்கெட்டில் விற்பதைவிடச் சற்றுக் குறைவாக விற்று மேலுள்ளவர்களுக்குத் தேனெடுத்துப் புறங்கை சுவைத்துக் கப்பம் கட்டுவதாகப் பரவலாக மக்கள் பேசிக்கொள்வதை இந்தக் கடையிலேயே கண்டேன்.

மாதக் கடைசியில் ஓய்வாக வேலை பார்க்கும் ஒரே பணியாளர் வார முதல் நாட்களில் குடிமைப் பொருட்களை பில் செய்து பணம் வசூலித்தபின் எடை போட்டு விநியோகம் செய்வதில் உள்ள சிரமங்களை எழுதுவதற்கும் ஏராளமுண்டு. 

எனினும் குடிமைப் பொருட்களை வாங்கும் முதியோர்களின் சிரமங்களைக் குறைக்கவும் இங்கு நடைபெறும் ஊழல்களைத் தடுக்கவும் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றினால் பொதுமக்களின் வயிற்றெரிச்சல் குறைவதுடன் பணியாளரின் வேலைச்சுமை குறைந்து இருதரப்பிலும் நிம்மதி பெற இயலும்.

முதலாவதாக எடை போட்டு விற்கப்படும் பொருட்களை இனி பொட்டலமிட்டுத்தான் விற்கும்படி செய்ய வேண்டும். இதனைச் செய்வதற்குப் புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்கினாலும் பரவாயில்லை. மேலும் பொட்டலமிடுவதால் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பொட்டல முறையை மட்டும் கட்டாயம் தவிர்த்து மாற்று ஏற்பாடு காணவேண்டும். இதனால் எடை அளவுகளில் பணியாளர்கள் தவறு செய்வது அறவே தவிர்க்கப்பட்டு தாங்கள் எதுவும் ஆதாயம் அடைய இயலாததால் மேலுள்ளவர்களுக்குத் தாங்கள் கப்பம் ஏதும் கட்ட முடியாது என அவர்கள் இனி நெஞ்சம் நிமிர்ந்து சொல்லலாம்.

இரண்டாவதாக ஒரு கடையில் இருநூறு மக்கள் பொருட்கள் வாங்குகிறார்கள் என வைத்துக் கொள்வோம். இந்த இருநூறு மக்களையும் முதல் வாரத்தில் இந்த எண்கள் உள்ளவர்கள், இரண்டாவது வாரத்தில் இந்த எண்கள் உடைவர்கள், மூன்றாவது வாரத்தில் இந்த எண்கள் உடையவர்கள்தாம் என்பதாகவோ அல்லது மக்களுக்கென வழங்கப்பட்டுள்ள குடிமைப் பொருட்கள்  அட்டைகளின் தரத்திற்கேற்றவாறு இந்த நாளில் இந்த அட்டைக்குரிய மக்கள் என இனி தங்களின் பொருட்களை காலை முதல் மாலை வரை பெற்றுக் கொள்ளலாம் என நெறிப்படுத்த வேண்டும். 

அதே சமயம் மண்எண்ணை தவிர்த்து அனைத்து பொருட்களும் ஒரே தடவையில் அந்தந்த வாரத்தில் அனைவருக்கும் முழுமையாகக் கிடைக்கும் வகையில் பொருட்களை தருவித்து விநியோகம் செய்யத் தயாரான நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது கடை ஊழியருடன் சம்பந்தப்பட்ட குடிமைப் பொருட்கள் வழங்குதுறையின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும்.

கணக்கு வழக்குகளை முடித்துவிட்டு அடுத்த மாதத்திற்குத் தேவையான பொருட்களை சேகரிக்கத் தேவைப்படும் கால அவகாசத்தை பணியாளருக்கு மாத இறுதியான நான்காவது வாரத்தில் வழங்கலாம். பெரும்பாலும் விற்பனைக்கே போகும் மண்எண்ணை விநியோகத்தை அரசு மாற்று ஏற்பாடுகள் வாயிலாக விற்பனை செய்யும் வழிகளைக் கண்டறிய வேண்டும். மக்களிடம் எதிர்ப்பிருப்பின் அதனை மாதத்தின் முதல் நாளிலோ அல்லது கடைசி நாளிலோ விநியோகம் செய்வது பற்றி முடிவெடுக்கலாம்.  

தங்களின் உழைப்பிற்கேற்ப அதிகளவு வருமானம் கிடைக்கும் வகையில் மக்கள் வாழ்கிறார்கள் என்றால் அது மக்களின் வாழ்க்கைத் தரத்தில் தன்னிறைவு பெற்ற ஒரு நாடாகத்தான் கருத முடியும். 

தன்னிறைவு பெற்ற ஒரு நாட்டில் இதுபோன்ற குடிமைப் பொருட்களை மலிவு விலையில் அரசிடம் எதிர்பார்க்காமல் தங்களின் மிகு வருமானத்தினால் மக்கள் அனைத்துத் தரப்பினரும் பொது வர்த்தகத்தின் வாயிலாகவே வாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்கிறார்கள் என்றுதான் கருதவேண்டும். 

அப்படி ஒரு நிலை உருவானால் வள்ளுவம் சுட்டியது போன்று இயற்கையே ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக இயல்பான முறையில் இயங்குகின்றது என்று அர்த்தம். 

ஆட்சியாளர்கள் மோசமாக இருந்தால்தான் வழக்கத்திற்கு மாறான வெள்ளம். புயல், வறட்சி, நோய், வறுமை, எனப் பல்வேறு மோசமான நிகழ்வுகள் அந்த நாட்டில் நடைபெறும். 

எந்தவகையான ஆட்சியாளர்கள் தேவை என்பதை மக்கள்தாம் இனிச் சிந்தித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் குடிமைப் பொருட்களை இலவசமாகவும், விலை மலிவாகவும் இங்கு வாங்க வேண்டிய அவசியமே இன்றி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குப் பாடுபடுபவர்களாகத்தாம் அவர்கள் திகழ்வார்கள் என்பது கனவானாலும் நனவாகப் போகும் உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!