அப்துல் ரகுமான்!

அதிகாலை இருட்டில் பாரதக் கப்பற்படையின் கண்களில் மண்ணைத் தூவியவாறு அந்தச் சிறிய கப்பல் வெகு வேகமாகப்  பாரதக் கடல் எல்லைக்குள் நுழைந்து கேரளப் பகுதிக்குள் ஊடுருவியது!

கப்பலின் மேல்தளத்தில் நின்றவாறு பாரதத்தின் நிலப்பகுதியைத் தொலைநோக்குக் கருவியால் கண்களில் கொலை வெறி தாண்டவமாடியவாறு கண்காணித்த அப்துலின் தலைமையில் பத்து பேர்கள் கொண்ட அணியென்று புனிதப் போருக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு பாரதம் நோக்கி நேற்றிரவுதான் பாகிஸ்தானின் லாகூரிலிருந்து புறப்பட்டிருந்தது!

பாகிஸ்தானின் லாகூர் அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் ரகுமானுக்கு இளம் வயது முதலே பாரதம் என்றாலே எதிரி நாடுதான் என்ற உறுதியான எண்ணம் விதைக்கப்பட்டிருந்தது! 

சரியான கல்வி வாய்ப்பு கிடைக்காததால் வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடிய அவனுக்குள் இருந்த வெறியுணர்வை மேலும் அதிகரிப்பதற்கெனவே அருகிலிருந்த தீவிரவாதப் பயிற்சி முகாம் உதவி செய்தது! 

தீவிரவாத முகாமில் பயிற்சி பெற்ற இரு ஆண்டுகளிலேயே பலவித ஆயுதங்களையும் பயன்படுத்துவதில் திறமை பெற்றதால் இன்றைய புனிதப் பயணத்திற்குத் தலைமையேற்கின்ற பொறுப்பும் அவனுக்குக் கிட்டியது!

தனது பழைய நினைவுகளிலிருந்து விடுபட்ட அப்துல் விடியப் போவதை அறிந்து, பகலவன் உதயத்திற்குள் தான் அடைய வேண்டிய எல்லையைத் துல்லியமாக அறிந்து அந்தத் திசையில் தனது கப்பலைச் செழுத்த உத்தரவிட்டான்!

கரையை அடைந்தவுடன் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு அவர்கள் வந்த கப்பல் பாகிஸ்தான் திரும்பிவிட்டது! கேரள எல்லையில் காத்திருந்த பாரதத்தை சேர்ந்த தீவிரவாதக் குழுவுடன் சேர்ந்து கொண்டு அடர்ந்த வனப்பகுதி வழியாகத் தமிழக எல்லைக்குள் நுழைந்தது! 
அவர்களின் தாக்குதல் இலக்கிற்கு உள்ளாகப்போகும் தமிழகப் பகுதி “மதுரை” என்ற செய்தியை அறியாமலேயே வழக்கம்போல தமிழகத்தின் அன்றைய பொழுது விடிந்து கொண்டிருந்தது!

அந்த வேளையில் ஒரு எதிர்பாராத திருப்பம்! 

அடர்ந்த வனப்பகுதியில் பயணித்து கொண்டிருந்த அந்தக் குழுவினர் அந்த விடியலிலும் தங்களைச் சுற்றி வளைத்தவாறு எதிர் கொண்ட தமிழக காவல் துறையினரின் துரிதமான நடவடிக்கைகளைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லைதான்! 

அப்துல் சற்றுத் துணுக்குற்றாலும் உடனடியாகத் தனக்குள் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவர்களை நோக்கித் தாக்குமாறு தனது சகாக்களுக்கு உத்தரவிட்டான்! 

ஆனால் நடந்த கதையோ வேறு! அவர்களின் வருகையை முன்கூட்டியே தங்களின் புலனாய்வின் மூலம் கண்டு பிடித்துவிட்ட தமிழக காவல்துறை அவர்களுக்கு உதவக் கேரள எல்லையில் காத்திருந்த தமிழகத் தீவிரவாதக் குழுவினரைப் பின்தொடர்ந்து வந்து அந்த அடர்ந்த வனப்பகுதியின் ஒரு பகுதியில் பதுங்கி இருந்ததையும், அப்துலின் உத்தரவு நிறைவேறுவதற்கு முன்னரே காவல்துறையினர் தயாராகக் கொண்டு வந்திருந்த மயக்க மருந்து கருவிகள் கொண்டு மயக்க மருந்தினைத் தங்கள் மீது பாய்ச்சி உயிரோடு மயக்கிப் பிடித்ததையும் உணரக்கூடப் பாவம் அவனால் முடியவில்லைதான்!

அமைதியாக விடிந்த தமிழகத்தின் ஒரு சிறைக்கூடத்தின் விசாரணை அறையில்தான் மீண்டும் அவனுக்கு நினைவு திரும்பியது! கைகள் கட்டப்பட்ட நிலையில் அருகில் தனது பாகிஸ்தானிய குழுவும் இருப்பதை அவன் உணர்ந்தான்!

எதிரிலிருந்த விசாரணை அலுவலரின் முகத்தில் கடுமையை எதிர்பார்த்த அவனுக்கு ஏமாற்றம்தான் கிட்டியது! மயக்கம் தெளிந்த அவனை அந்த அலுவலர் உருது மொழியில் நீங்கள் பாகிஸ்தானின் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் என விசாரித்தார்!

ஏற்கனவே  தான் சேர்ந்திருந்த பயி;ற்சி முகாமில் எதிரிகளிடம் மாட்;டிக்கொண்டால் எப்படிச் செயல்படுவதென அளிக்கப்பட்டிருந்த பயிற்சி தந்த தைரியத்தில் மனதை இறுக்கமாக்கிக்கொண்டு பதிலலிக்காமல் அவரை வெறுப்புடன் நோக்கினான் அப்துல்!

இதன் எதிரொலியாகத் தாங்கள் கடுமையாகத் தாக்கப்படுவோம் என எதிர்பார்த்த அவனுக்குள் ஏமாற்றம்தான் மிஞ்சியது! அந்த அலுவலரோ அவனைச் சற்றுப் பரிவுடன் பார்த்தவாறு தன் பின்னே நின்றிருந்த காவலர்களை நோக்கி இவர்களுக்குத் தேவையான  ஏற்பாடுகளைச் செய்யுங்கள் எனக் கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்!

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அதே சமயம் சற்று உயர் தரத்துடன் சகலவித வசதிகளும் நிறைந்ததாகவும் அந்தச் சிறை விளங்கியதை அவன் வியப்புடன் நோக்கினான்! அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, கடுமையாக அவர்கள் தாக்கப்படாமல் அந்த அறையிலேயே அவர்கள் அனைவரும் குளிப்பதற்கும் அதன் பின்னர் அவர்களுக்குத் தேவையான உடைகளும் வழங்கச் சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது! 

மனதிலிருந்த பிடிவாதம் சற்றுத் தொலைந்தாலும் வேறு வழியின்றி காலைக் கடன்களை முடித்துக்கொண்ட அவர்களுக்கு சுவையான உணவும் வழங்கப்பட்டபோது அவனால் தமிழகக் காவல்துறையின் போக்கு பிடிபடவில்லைதான்!

கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் அவர்களை இரவில் மட்டும் வந்து அதே அலுவலர் அவர்கள் எந்த நோக்கத்துடன் தமிழகத்திற்கு வந்துள்ளார்கள் எனத் திரும்பத் திரும்ப வினவினார்! இவர்கள் அனைவரும் பதிலளிக்க மறுக்கவே அவராகவே இறுதியில் ஒரு நாள் இரவு அவர்களின் திட்டத்தை விளக்கத் துவங்கினார்!

அவர் பேசப்பேசத் தமிழகக் காவல்துறையின் புத்திசாலித்தனமும் திறமையும் அவனுக்குள் வியப்பினை ஏற்படுத்தியது! அவர்களின் சொந்த ஊரின் தற்போதைய நிலையிலிருந்து அவர்கள் தமிழகத்திற்குள் நுழைந்ததுவரை துல்லியமாக அவர் விவரித்தபோதுதான் தாங்கள் யாரென அவருக்கு ஏற்கனவே தெரிந்துள்ள விபரமும் அவனுக்குள் உறைத்தது!

முதல் முறையாக அவன் அந்த அலுவலரைப் பார்த்து இவ்வளவு தெரிந்திருந்தும் எங்களை ஏன் உயிரோடு விட்டு வைத்துள்ளீர்கள் என வெறுப்புடன் வினவினான்! அவரோ அவனுக்குப் பதிலிக்காமல் சற்றுப் புன்சிரிப்புடன் அந்த அறையிலிருந்து வெளியேறிவிட்டார்!

அடுத்த நாள் காலை அவர்கள் அனைவரையும் பலத்த காவலுடன் அழைத்துக்கொண்டு ஒரு வாகனம் அந்தச் சிறை வளாகத்திலிருந்து வெளியேறி நேராக ஒரு குடியிருப்பின் முன் சென்று நின்றது!

வாகனத்திலிருந்து இறக்கப்பட்ட அவர்கள் அங்கிருந்த ஒரு வீட்டின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர்! சற்று வசதியாக விளங்கிய அந்த இல்லம் தங்களை இரவில் விசாரித்த அந்த அலுவலருக்குச் சொந்தமானதெனவும் அவர் ஒரு இசுலாமியர் எனவும் அந்த வீட்டின் அமைப்பைக் கண்டவுடன் அவர்களுக்கு விளங்கியது!

அந்த இல்லத்தில் விசாலமாக விளங்கிய வரவேற்பு அறையில் அன்று விடுமுறையாதலால் அந்த அலுவலரின் குழந்தைகள்; தங்களின் எதிர்வீட்டு நட்புக் குழந்தைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்! 

வேற்று மதத்தைச் சேர்ந்த அந்தக் குழந்தைகள் தன் மீது ஏறி விளையாடுவதை அவர்கள் வியப்புடன் கவனிப்பதை ஓரக்கண்ணால் கவனித்தவாறு அந்த அலுவலர் அவர்கள் வருகையை அப்பொழுதுதான் கவனிப்பதுபோல அவர்களை வரவேற்றார்!

அவர்களின் வருகையை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த அவரது மனைவி தனது இரு கரங்களிலும் தேநீர் நிறைந்த பாத்திரங்களை அன்புடன் ஏந்தி வர, அதை ஓடிச்சென்று வாங்கிய எதிர் வீட்டுக் குழந்தைகள் இவர்களை நோக்கிப் புன்னகையுடன் எதிர் கொண்டு அவற்றை அவர்களுக்கு வழங்கினர்!

அன்பு ததும்பும் அந்த இல்லத்தின் சூழலால் கட்டுண்ட அவர்கள் மறுப்பு தெரிவிக்காமல் அவற்றை வாங்கிப் பருகிய பின்னர் அந்த அலுவலரின் மனைவியும் அங்கிருந்த குழந்தைகளும் உற்சாகமாக வழியனுப்ப அந்த அலுவலருடன் மீண்டும் காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டனர்!

அவர்களைச் சுமந்தவாறு அந்த வாகனம் வெகு தொலைவு பறந்தது! வாகனத்தில் தமிழகத்தின் பண்பாட்டை.ப் பிரதிபலிக்கும் படக்காட்சியொன்று ஓடுவதை அவர்கள் தங்களின் புனிதப்பயண நோக்கம் தொலைந்த மன நிலையில் இரசிக்கவும் செய்தனர்!

அந்த வாகனம் ஒரு நகரத்தை அடைந்ததையும் அவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் ஒரு தர்காவிற்குள் அழைத்துச் செல்லப்படுவதையும் உணர்ந்து அது எந்த ஊர் தர்காவென அருகிலிருந்த காவலரிடம் வினவினான் அப்துல்! அதுதான் தமிழகத்தின் மிகப் பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவென அவர் பதிலலித்தார்!

தர்காவின் உள்ளே நுழைந்த அவர்களுக்கு அங்கு கண்ட காட்சி வியப்பை உருவாக்கியது! இசுலாமியர்கள் மட்டுமன்றி அனைத்து தமிழக மக்களும்; அந்த தர்கா முழுவதும் நிறைந்து அல்லாவின் அருள் பெற ஒன்று கூடித் தங்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதைக் கண்டனர்!

பின்னர் அவர்களை அங்கிருந்து மீண்டும் அதே வாகனத்தில் அழைத்துக்கொண்டு புறப்பட்ட அந்த வாகனம் இருட்டியதால் அருகிலிருந்த ஒரு பயணியர் விடுதியில் அவர்கள் அனைவரும் தங்கி இரவை கழித்த பின்னர் அதிகாலையில் கிளம்பித் தஞ்சையை அடைந்தது!

நேராகத் தஞ்சையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் சந்நிதியை அடைந்த அவர்கள் பார்வையில் அம்மை பாதித்த தங்களைக் காத்துத் தங்களின் பிரார்த்;;தனையை நிறைவேற்றிய அம்மனுக்கு நன்றி செழுத்தத் திரண்டு வந்திருந்த இசுலாமியப் பெண்களின் கூட்டத்தைக் கண்டவுடன் வியப்பின் எல்லைக்கே செல்ல தங்களின் பலி வாங்கும் புனிப்போரின் கனவு உள்ளுக்குள் தகர்ந்ததை அக்கணமே அவர்களால் உணர முடிந்தது! 

அவர்களின் பிரமிப்பை உணர்ந்த அந்த அலுவலர் கவனித்தீர்களா? இதுதான் பாரதம்! பல்வேறு மதங்கள் நிறைந்திருந்தும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்கள்தான் நாங்கள்! எங்களை இனியாவது உங்களைப் போன்ற தீவர எண்ணம் கொண்டவர்கள் புரிந்து கொண்டு நல்லவர்களாக மாற வேண்டும்!

மீண்டும் நீங்கள் உயிருடன் உங்களின் நாடு திரும்பி அங்குள்ளவர்களுக்கும் எங்களின் வாழ்வியல் சூழல்களை எடுத்தியம்பி இரு நாடுகளுக்குள்ளும் நிலவும் வேற்றுமைகளைக் கலைய வேண்டுமென்பதற்காகத்தான் இந்த பயணம்! எங்களின் கடமை இத்துடன் முடிந்து விட்டது! இப்பொழுது நாங்கள் உங்களை வாய்மை மன்றத்தில் அனுமதித்து உங்களுக்குரிய தண்டனையை பெற்றுத் தரப்போகிறோம் என முடித்த அந்த அலுவலர் அவர்களை நோக்கி  நேசமுடன் புன்னகைத்தார்! 
திருந்திய மனதுடன் வாய்மை மன்ற வழக்கினைச் சந்தித்த அவர்களுக்கு தமிழகத்தின் மதுரை கிளை உயர் வாய்மை மன்றம் ஐந்தாண்டுகள் சிறை தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது! 

சிறையில் அடைபட்டாலும் அதனுடனே இணைந்திருந்த தொழிற்சாலையில் அவரவர் திறமைக்கேற்ற வேலைகள் செய்து நன்னடத்தை காரணமாக நான்கு வருடத்திலேயே அப்துலுடன் அனைவரும் விடுவிக்கப்பட்டு சிறையில் வேலை செய்ததற்காக கிடைத்த வருமானத்துடன் வாகா எல்லையில் பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்! 

இதற்குள் பாகிஸ்தானில் வசிக்கும் இசுலாமியர்களிடம் ஏற்பட்ட எழுச்சியால் அங்கு நீண்ட நெடுங்காலமாக நிலவி வந்த சர்வாதிகார ஆட்சி முறை முடிவிற்கு வந்திருந்ததால் அப்துலும் அவன் குழுவினரும் எந்தவித எதிர் விசாரணை பாதிப்புகளுமின்றி தத்தம் கிராமங்களுக்குத் திரும்பினர்!

இப்பொழுதெல்லாம் அவனுக்கு வாய் ஓயாமல் தமிழகத்தைப் பற்றியும் தமிழகத்தின் கலாச்சாரம் பற்றியும் விளக்கம் கேட்டு வரும் தன் கிராம மக்களுக்குத் தமிழகத்துடன் பாரதத்தின் சிறப்புகளையும் விளக்கிக் கூறுவதற்கே நேரம் போதாததால்  தமிழகச் சிறையில் கற்றுத்தேர்ந்த தொழிலில் மும்முரமாகக் கவனம் செழுத்த நேரம் ஒதுக்க முடிவதில்லை! 

மேலும் சிறையில் இருந்தபோது தனக்கு மறுவாழ்வளித்த சிறை அலுவலருடன் மாதத்திற்கு ஒரு நாள் என விளையாடித் தேர்ந்த தமிழகத்தின் பிரதான சிலம்ப விளையாட்டை தன் கிராமத்து இளைஞர்களுக்கு கற்றுத் தருவதற்கு நேரம் ஒதுக்குவதால், அவரை விட்டுப் பிரியும்போது அவருக்கு வாக்களித்தபடி மாதத்திற்கு ஒருமுறை சிறையில் கற்றுத்தேர்ந்த தமிழ் மொழியில் கடிதம் வாயிலாகத் தனது தற்போதைய நிலை பற்றி எழுதுவதற்கும் சற்றுச் சிரமமாக உள்ளதாகத்தான் கேள்வி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!