அவரவர் கோபம் அவரவருக்கு!

எனது தந்தையார் தனது மூத்த அண்ணாருடன் இணைந்து உணவகம் நடத்திச் சேர்த்த சொத்துக்களை ஒரு கட்டத்தில் என் பெரியப்பா தனக்கே உரிமையென எடுத்துக்கொள்ள எவ்வளவோ போராடிப் பார்த்தும் தனக்குரிய பங்கினை முறையாகப் பெற இயலாத என் தந்தை 

பெருத்த ஏமாற்றத்துடன் அவரிடமிருந்து கிடைத்த சொற்பப்  பணத்துடன் அனைத்து சொத்துக்களிலும் இனி தனக்கோ தனது வாரிசுகளுக்கோ எந்தவித உரிமையும் கிடையாது என எழுதிக்கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டார்!

இதன் காரணமாக எனது பெரியப்பா குடும்பத்துடன் எங்கள் குடும்பம் பேச்சு வார்த்தையின்றிப் போனது! பல ஆண்டுகள் செய்து வந்த வணிகத்திலிருந்து ஒரேயடியாக விலக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபமும், தன்னுடைய கடுமையான உழைப்பினால் சேர்த்த சொத்துக்களை இழந்துவிட்டதால் தனக்கு வாழ வழியின்றிப் போனதால் ஏற்பட்ட விரக்தியியிலும் சில ஆண்டுகள் என் தந்தை வேறு எந்த வணிகத்திலும் ஈடுபட விரும்பவில்லை!

வருமானமின்றிப்போனதால் ஏற்பட்ட குடும்பச் சுமைகள் ஒரு பக்கம்! குடும்பம் ஒன்றாக இருந்தபோதே எனது மூத்த சகோதரிக்குத் திருமணம் ஆகியிருந்தாலும் எஞ்சியிருந்த எங்கள் மூவரையும் வளர்த்து படிக்க வைக்க எனது தந்தையார் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! இதுவும் எனது தந்தையாருக்குத் தன் அண்ணன் குடும்பம் மேலிருந்த கோபம் அதிகரிப்பதற்குக் காரணமாகிவிட்டது!

குடும்பம் பிரிந்த பொழுது எனக்கு பனிரெண்டு வயதுதான்! எனது பெரியப்பா குடும்பத்துடன் எங்கள் குடும்பத்தவர் தொடர்பு கொண்டால் எனது தகப்பனாரிடம் திட்டு வாங்க நேரிடுமே என்பதை விட அவர் மனம் வேதனைப்படுமே என்பதால் நான் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொண்டதில்லை!

இரண்டாண்டுகள் இவ்வாறே கழிந்தபின் எனது தந்தை தன்னிடம் மீதமுள்ள பணத்தைக் கொண்டு பல்வேறு விதமான வணிகங்களில் ஈடுபட்டுச் சிறிது பணம் சேர்த்தார்! அந்தப் பணத்தைக் கொண்டு எங்கள் ஊரின் கடை கோடியில் எனது சகோதரிக்குச் சொந்தமான ஒரு நிலத்தை வாங்கி அதில் ஒரு அரிசி அரவை ஆலையைக் கட்டத் துவங்கினார்!

இந்த ஆலையை அரசு விதிப்படி கட்டிடத்தைச் சற்று பெரியதாகக் கட்டத் துவங்கவே அவரிடமிருந்த முதலீடு முழுவதும் கட்டிடப் பணியிலேயே முடங்கியது! மேலும் ஆலைக்கு மின் இணைப்புப் பெற மின்வாரியத்தை அணுகினால் ஆலைக்கு தகுதியான பவர் தருவதற்கென தனியான மின்சார டிரான்ஸ்பார்மர் ஆலை அருகில் இருந்தால்தான் தரமுடியுமென சில ஆண்டுகள் இழுத்தடித்தனர்!

ஒருவழியாக தன்னுடைய செலவில் அதனையும் நிறுவி மின் இணைப்பு பெற்றபோது அரவை ஆலைக்குரிய இயந்திரங்கள் மற்ற நெல் காயவைப்பதற்கான களம் அமைத்தல் போன்ற செலவினங்களுக்குப் பணம் இன்றிப் போனதால் அந்தத் திட்டமும் தள்ளிப் போனது! 

பின்னர் எங்கள் ஊரில் பரவலாக இருந்த பருத்தி அரவை ஆலையைத் துவக்குவதென முடிவு செய்து அதற்குரிய இரண்டாம்தர பாகங்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்த நிலையிலும் இந்த ஆலையையும் நடத்துவதற்குப் போதிய பணம் இன்றிப்போனது! 

எவ்வளவோ முயன்றும் அந்த நாட்களில் என் தந்தைக்கு வங்கிக் கடன் ஏதும் கிடைக்கவில்லை என்பதும் ஒரு வேதனையான செய்திதாம்! இந்த நிலையில் நான் எனது பதினொன்றாம் வகுப்பினை முடித்துவிட்டு நாமக்கல்லில் எனது சிறிய தகப்பனார் பணியாற்றிய கலைக்கல்லூரியில் சேர்ந்து புகுமுக வகுப்பினைத் தட்டுத்தடுமாறிப் படித்து முடித்திருந்தேன்!

மேற்கொண்டு படிக்க இயலாதவாறு எனது சூழல் அமைந்ததால் ஓராண்டு எனது சிறிய தகப்பனார் நாமக்கல்லில் துவங்கிய ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அந்த தொழிலில் உள்ள இலாபங்கள் பற்றிய எனது சிறிய தகப்பனார் தந்த ஆலோசனையின் பேரில் நாங்கள் அதுவரை வசித்து வந்த சொந்த ஊரை விட்டு இருந்த சொத்துக்களையும் விற்றுவிட்டு ஆட்டோமொபைல் வணிகம் செய்வதற்காக வேறு ஊருக்குக் குடி பெயர்ந்து வந்தபோது எனக்கு வயது பதினெட்டு!

அப்பொழுதுகூட எனது தந்தையாருக்குத் தன் அண்ணன் குடும்பத்தின் மீதிருந்த கோபம் குறையவில்லை! வெளியில் இப்படி நடந்து கொண்டாலும் உள்ளுக்குள் அவர் தன் அண்ணன் குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பது எனக்குள் நன்றாகவே விளங்கும்!

நாமக்கல்லிலும் எங்களால் இரு ஆண்டுகளுக்குமேல் தாக்குப்பிடிக்க இயலவில்லை! அங்கும் எனது சிறிய தகப்பனாருடன் ஏற்பட்ட வணிக மனவருத்தம் காரணமாக நாங்கள் அவரிடமிருந்தும் பிரிய நேர்ந்தது! அவருடனான உறவும் என் தந்தைக்கு முறிந்தது!

அது மட்டுமல்ல! பல்வேறு காரணங்களால் எங்கள் தகப்பனாரின் மன வருத்தத்தைச் சம்பாதித்து அவரது ஒட்டுமொத்த உடன் பிறந்தவர்கள் குடும்பமும் பல்வேறு கால கட்டங்களில்  எங்களுடன் பேச்சுவார்த்தை இன்றிப் போனது! 

என் வயது இருபதைத் தாண்டியபின் என் தந்தையிடம் சுதந்திரமாக இருக்க முடிந்ததால் அதன்பிறகு ஊருக்குச் செல்லும்போதெல்லாம் எனது பெரியப்பா குடும்பத்துடன் நான் தொடர்பு கொண்டு விட்டுப்போன குடும்ப உறவைப் புதுப்பிக்கத் தொடங்கினேன்!

அது மட்டுமன்றி உறவு விட்டுப்போன அனைத்து குடும்பங்களுடனும் நான் உறவினைப் புதுப்பிக்கத் துவங்கினேன்!

இந்தப் பிறவியில் விரும்பியோ விரும்பாமலோ ஒரு உறவுக்கூட்டத்தில் பிறப்பெடுத்துவிட்டோம்! இது தேகம் சார்ந்த உறவு! அடுத்து குடும்பத்தில் நிகழும் திருமணங்களால் மேலும் சில உறவுகளை நாம் புதியதாகப் பெறுகிறோம்!

இவையன்றி நமக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இதோ இந்த நிமிடம் வரை பல்வேறு இன மொழி மார்க்கம் சார்ந்த பலரிடம் நாம் நட்பு பாராட்டுகிறோம்! வாழ்க்கை என்பதே ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதுதாம்! 

இந்த வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் அனுபவங்களில் ஒன்றுதான் பிரிவு என்பது! அந்தப் பிரிவு என்ன காரணத்திற்காக ஏற்படுகின்றதென்பது அவரவர் மனச்சாட்சி சார்ந்ததாகும்! 

ஒவ்வொருவர் தரப்பிலும் ஒவ்வொரு காரணம் இருக்கும்! அவரவர் நிலையில் அது சரியானதாகக்கூட இருக்கலாம்! 

இந்த நிலையில் என் தந்தைக்கு விரோதமானவர்கள் எனக்கு விரோதமாக இருக்க வேண்டியதில்லை என்ற கொள்கையை உடையவன் நான்! அது போன்றே எனக்கு உறவாக இருப்பவர்களுக்கு விரோதமாக இருக்கும் அவர்தம் உறவும் நட்பும் எனக்கும் விரோதமாக இருக்க வேண்டிய நிர்பந்தம் எனக்கில்லை என்பதில் நான் எப்பொழுதும் உறுதியாகவே இருந்து வந்துள்ளேன்!

ஏனெனில் அவரவர் கோபம் அவரவருக்கு! அதை நம் மீது திணிக்கும் அதிகாரத்தை நான் என்றைக்குமே அவர்களுக்குக் கொடுப்பதில்லை! 

என் குணம் அறிந்ததால் என் தந்தையும் என்னைக் கண்டித்ததில்லை! திருமணமாகி எனக்கு மனைவியாக வாய்த்தவரும் குடும்ப உறவுகள் பிரியாமல் இருக்கும் எனது முயற்சிக்கு ஆதரவாக இருப்பதாலும் எவ்வளவோ மன வருத்தங்களுக்கு இடையிலும் நான் எனது குடும்ப உறவுகள் ஒற்றுமையாக இருப்பதற்காகப் பாடுபட்டு வருகிறேன்!

என் தந்தையும் தனது இறுதிக் காலத்தை மருத்துவமனையில் எதிர்பார்த்துக் காத்திருந்தபோது எங்களின் வேண்டுகோளைச் செவியேற்று அதுவரை தன்னிடம் பேச்சு வார்தையின்றிப் போன குடும்ப உறவுகள்  அனைவரும்  தன்னை வந்து நலம் விசாரித்துச் செல்ல அனுமதியளித்து தன் இறுதி மூச்சினை நிறுத்தினார்!

என் தந்தையின் குணம் எப்படிப்பட்டதென்பதை நான் நன்கறிவேன்! தன்னைச் சரியாகப் புரிந்து கொண்டு மதித்தவர்களின் நல்லது கெட்டதுகளில் எவ்வித வேறுபாட்டையும் வெளிக்காட்டாமல் வயதான காலத்திலும் தன்னுடைய உடல் நலன் பாராமல் முன்னிருந்து பொருட்செலவு பாராமல் கலந்து கொண்டு நடத்தி வைத்துள்ளதையும் 

தன்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாத உறவுகளை வெளிப்படையாக வெறுப்பது போலப் பாவனை செய்தாலும் தன் வாழ்நாள் இறுதிவரை தன் தேகம் சார்ந்த உறவுகளின் மேல் அவர் வைத்திருந்த பாசத்தை அறியக்கூட இயலாத ஆழ்மன உணர்வு தொலைத்தவனல்ல நான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!