வாக்காளர்களாகிய நீங்கள் இனி என்ன செய்யப் போகிறீர்கள்?

நாம் உபயோகப்படுத்துகின்ற செருப்பு (இனி காலணி என்றே பதிவு தொடரும்) அறுந்துவிட்டதெனில் அதனை நன்கு செப்பனிடுபவரிடம் கொடுத்துச் சரி செய்து கொள்வோம்.

அதுவே தேய்ந்து நைந்து பழுதான நிலையில் அசிங்கமாகக் காட்சியளித்தால் உடனடியாக அல்லது நம்மிடம் பணம் உள்ள போதாவது மாற்றிவிட முயற்சி செய்வோம்.

அதை விடுத்து இது இராசியான காலணி எனவோ அல்லது இதை விட்டுப் பிரிய முடியவில்லை எனவோ முரட்டுப் பிடிவாதம் கொண்டு கல்லிலும் முள்ளிலும் பயணப்பட்டால் காயம்படப் போவது நம் பாதங்கள்தானே தவிரக் காலணியல்ல.

இதைப் போல நம்முடைய அரசாங்கம் பழுதுபட்டால் நாம் அதைச் செப்பனிடத் தகுதியானவர்களைத் தேடுகிறோமா என்று நான் அல்ல அய்யா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சாக்ரடீசு என்ற மேதை கேள்வி எழுப்பியுள்ளார்.

நாமோ தேய்ந்து கிழிந்துபோன காலணிகளைப் போன்ற அரசியல் இயக்கங்களைத்தாம் இன்றும் காலில் போட்டு அல்ல நம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தலை கால் புரியாமல் ஆடுகிறோம்.

கரடு முரடாக கல்லும் முள்ளுமாக இருந்தாலும் அவர்களின் போடாத சாலையிலும் போட்ட சாலையிலும் சகித்துக் கொண்டு பயணப்படப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டோம்.

காலணி எனது அண்ணனுடையது எனப் பதினான்கு வருடம் அதைத் தன் அரியணையில் வைத்திருந்து அந்தக் காலணியைப் பயன்படுத்தாமல் வேறு ஒரு காலணியைப் பயன்படுத்திய பரதனைப் போன்றவர்கள் ஒரு இரகம்.

அந்தக் காலனியை அவன் அண்ணன் மீண்டும் அரியணை ஏற்றபோது அணிந்துகொண்டானா என்பதை அறிந்துகொள்ள நாம் ஒன்றும் புராண காலத்திற்குத் திரும்பிப் பயணிக்க முடியாது.

நான் ஒன்றும் இதுபோன்ற முரட்டுப் பக்தி மற்றும் முரட்டுப் பகுத்தறிவு கொண்டவனல்ல. எனக்குப் பளபளப்பாகத் தற்பொழுது காட்சியளிக்கும் திரைப்படக் காலணிகளும் தேவையில்லை. ஏனெனில் அவற்றை வாங்கக்கூடிய தகுதியும் வசதியும் எமக்கில்லை. எனவே நான் புதிய தரமான எளிமையான எனக்காக உழைக்கும் காலணிகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

உடனே புதுக் காலணி கடிக்கும் என்ற வியாக்கியானமும் வேண்டாமே. வேறு நல்லதாக வேண்டுமென்று தேடி அலைந்து விலை கொடுத்து வாங்கிய குற்றத்திற்காக அவற்றைத் தூக்கி எறியவா முடியும்?

நம் காலுக்குப் பாதிக்காத வண்ணம் அதைச் சற்றுச் சரிப்படுத்தினால் நம் போக்கிற்கு வந்து அவை உழைக்காதா என்ன?

தமிழக வாக்காளர்களாகிய நீங்கள் இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்பதும் எம் கேள்வியல்ல. மேதை சாக்ரடீசின் கேள்விதாம்.
தெகுரா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!