மனிதவள மேலாளர் பதவி

மனம் தளராத விக்ரமாதித்தன் போல் மீண்டும் வேலைக்குச் செல்வது என முடிவெடுத்தேன். இதுவரை இருபது நபர்கள் எனக்கு கீழ் வேலை பார்த்த இடங்கள் போல் இன்றி 250 நபர்கள் வேலை செய்யும் இடத்தில் வேலை கேட்கப் போக இங்கே எனக்கு கிடைத்தது மனிதவள மேலாளர் என்ற பதவி. 

மனித வளம் பற்றி ஏற்கனவே ஏராளமாகப் படித்துள்ளேன். இப்பொழுது கூட நூலகத்தில் எடுத்துவந்து படிக்க முடியாமல் இருக்கும் ஒப்பற்ற தமிழறிஞர் இளங்குமரனார் அவர்களின் தமிழ் வளம் என்ற புத்தகத்தில் வளம் பற்றிய கருத்துக்களை அவ்வப்போது படித்து வருகிறேன்.

நிறுவன உரிமையாளர் ஏற்கனவே இந்தப் பதவியில் இங்கு உள்ளவர்களிடம் விளக்கம் கேட்டு அதன்படி நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்றும், அவ்வப்போது காசாளர் மற்றும் பில் செய்யும் இடங்களில் உதவியாக இருக்க வேண்டும் என்றும் பணித்திருந்தார். 

ஆஹா எனக்கு ஓரளவுக்கு பரிச்சயமான ஆனால் முற்றிலும் புதிய பதவி என்று அகமகிழ்வுடன் என்னுடைய பணியைத் துவக்கினேன். 
இங்குதான் எனக்கு சிக்கலே ஆரம்பமாயிற்று. ஏற்கனவே இந்த பதவியில் இரண்டு நபர்கள் இருந்தனர். அவர்கள் என்னை தங்கள் பதவிக்குப் போட்டியாக வந்தவன் என்ற மனநிலையிலும் 59 வயதானவனுக்கு கணினி பற்றிய அறிவும் மென்பொருள் பற்றிய அறிவும் இருக்காது என்று அவர்களாகவே கணித்து என்னை நடத்த முற்பட்டனர்.

அந்தப் பதவியின்  வேலையாக தினசரி வருகை பதிவேடு பராமரிப்பது, 10 நாட்களுக்கு ஒரு முறை அதனை சரி பார்ப்பது, மாதத்தில் 15-ஆம் தேதியன்று விற்பனை செய்யும் தொழிலாளர்களின் கமிஷன் தொகையை கணக்கிட்டு வழங்குவது, மாதத்தின் 20ஆம் தேதியன்று தொழிலாளர்களுக்கு அட்வான்ஸ் வழங்குவது,  மாத இறுதியில் சம்பளக் கணக்கு போட தளம் வாரியான வருகைப் பதிவேடுகளைச் சரிபார்த்து, தொழிலாளர்கள் தாமதித்து வருதல், பொருள் சேதம், வாடிக்கையாளர்களை தவறவிடல், காசாளர் கையிருப்புக் குறைதலுக்குப் பிடித்தம் மற்றும் அபராதம்,சீருடை அணியாமல் மற்றும் சிகை அலங்காரம் இன்றி வருதல், வாடிக்கையாளரிடம் பொருள் அதிகம் கொடுத்த தவறுக்கு அபராதம் etc etc, போன்றவை தவிர ESI PF பிடித்தம் செய்து அரசுக்கு அனுப்பி அதைக் கழித்துக் கணக்கிட்டு அடுத்த மாத முதல் நாளில் வழங்க மாத இறுதியில் பட்டியல் தயாரித்தல் போன்ற நிகழ்வுகள்.

இடையிடையே நிர்வாகம் பணிக்கும் காசாளர்களின் வரவு செலவுக் கணக்கு சரி பார்த்தல், புதிய ஆட்களை நேர் காணல் செய்து வேலைக்கு அமர்த்துதல், தவிர இதர வேலைகளையும் கவனிக்க வேண்டும். இதுதான் மனிதவள மேலாளரின் வேலை என்று எனக்கு மூத்தவர்கள் (பதவி அனுபவத்தில் ஆனால் வயதில் இளையவர்கள்) ஆக இருப்பவர்கள் அன்றாடம் செய்து வந்த பணியாக நினைத்திருந்தனர். 

அந்தப் பணியையும் மேலான ஒரு பணி இருப்பதை அவர்கள் ஏனோ அறிந்திருக்க வில்லை. காரணம் அவர்கள் இருவரும் இளைய வயது இளைஞன் மற்றும்
 பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண்ணின் தாயார்.

என்னை அவர்கள் தங்கள் இடத்தை அடைய வந்தவன் என்ற கோணத்தில்தான் பார்த்தார்களே ஒழிய என்னுடைய அனுபவம் சார்ந்த எந்தச் சொல்லையும் ஏற்கும் மன நிலையில் அவர்கள் இல்லை. இதற்குக் காரணம் தலைமுறை இடைவெளி. போட்டது போட்டபடி முக்கியமான டாக்குமெண்ட்களை குப்பையாகச் சேர்த்து வைத்த தேவை அற்ற தாள்கள் இடையே தொலைத்து விட்டு மணிக்கணக்கில் தேடி நிர்வாகத்திடம் திட்டு வாங்குதல் கண்டு அதைத் தவிர்க்க சொல்லும் அறிவுரைகள் ஏற்க முடியாத குணம்.

வாழ்க்கை தந்த அடிகளும் வலிகளும் வேதனைகளும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் மற்றவர்களை நம்பி ஏமாந்து நின்று அனுபவப்பட்டு பக்குவப்பட்ட மனநிலையுடன் ஏராளமான அனுபவங்களுடன் இந்தப் புதிய வேலைக்கு வந்துள்ள நான் முதலில் அவர்கள் போக்கில் சென்று என்னுடைய வேலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன்.

வழக்கம்போல அவர்கள் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் நிறுவன உரிமையாளர் 
உட்பட அங்கு பணியாற்றும் மற்றவர்களும் என்னை எரிச்சல் உணர்வுடனே நடத்தத் துவங்கினர். 

எனினும் நான் மனம் தளராமல் அங்கு நடப்பவை எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கத் துவங்கினேன். புதிதாக வந்த என்னை நீங்கள் யார் என விசாரிக்கும் அங்குள்ள ஒவ்வொருவரிடமும் என்னைப் பற்றிய அறிமுகத்தை தெரிவிப்பேன்.

இஸ்லாம் என்றால் வெறுக்கத்தக்க மதம் என்ற மன நிலையில் உள்ளவர்களுக்கு முற்றிலும் எதிராக இளமையிலிருந்தே இஸ்லாத்துக்கும் எனக்கும் ஒரு இனம்புரியாத நட்பு இன்று வரை தொடர்கிறது.

 இங்கே ஏராளமான இஸ்லாமிய பெண்களும் ஆண்களும் வேலை பார்ப்பதை நான் கவனித்தேன். பளிச்சென்று சிரித்த முகத்துடன் காணப்படும் சில பெண்களிடம் நான் எனக்கு இஸ்லாம் என்றால் மிகுந்த மதிப்பு என்பேன். உடனே அவர்கள் எனக்கு நட்பாகி விட்டனர். என்னைப் பார்க்கும் போதெல்லாம் முகம் மலர்ந்து சிரிப்பார்கள்.

இதைப் போலவே என்னைப் பற்றி விசாரிக்கும் மற்றவர்களும் என்னைப் புரிந்து கொண்டு என்னுடன் நட்பு பாராட்ட தொடங்கினர்.

எனினும் என் அறிவுரைகளையும் அனுபவத்தையும் புரிந்து கொள்ள விரும்பாத ஒரு சிலர் குறிப்பாக என் பதவிக்கும் அவர்கள் பதவிக்கும் சம்பந்தமே இல்லாத சிலர் இனக்குழு மனப்போக்குடன் என்னை எதிரியாகத்தான் பாவித்தனர்.

பாவம் அவர்களுக்கு ஒரு பாடல் வரி விளங்காது நண்பனும் பகை போல் தெரியும் அது நாட்பட நாட்பட புரியும் என்று.

இங்கு புதிதாக வேலைக்கு சேர வரும் இளைய சமுதாயம் மற்றும் முதியவர்களை கூட நான் நேர்காணல் செய்து பணிக்கு அமர்த்தி உள்ளேன்.
 
என்னுடைய நேர்காணலின்போது நிர்வாகம் எனக்குச் சொல்லிக் கொடுத்ததை விட சற்று அதிகமாகவே அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு இங்கு வந்து ஒழுக்கமாக வேலை செய்து சம்பளப் பணத்துடன் விற்பனைக் கமிசனையும் பெற்று உங்களுடைய வாழ்க்கை தேவைகளை நிறைவு செய்து சிக்கனமாக வாழ்ந்து எதிர்காலத்தில் நிம்மதியாக வாழவேண்டும் என்று அறிவுறுத்துவேன்.

இளமையில் விளையாட்டுத்தனமாக பணம் சேர்க்காத நான் பணம் மீது ஆசை அற்று இருந்தாலும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பை இழந்து இதோ இப்போது உங்கள் முன் வேலைக்கு வந்து நிற்பதைப் போல வயதான காலத்தில் பணம் இல்லாமல் வாழ சிரமப்படக் கூடாது என்று கூடுதலாகவும் அறிவுறுத்துவேன்.

என்னுடைய அறிவுரைகளை ஏற்று அவர்கள் நல்ல விதமாக வேலை செய்து வருவதையும் நான் அவ்வப்போது கவனித்து வந்தேன்.

அடிக்கடி வேலையை விட்டு வேறு வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கக் கிளம்பி விடும் இளைய சமுதாயத்தின் போக்கால் நிறுவனம் சார்பாக நாளிதழ்களில் கொடுக்கப்படும் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் கண்டு முந்தைய நிறுவனத்தை விட அதிக சம்பளம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் தினமும் இளைய சமுதாயம், நடுத்தர வயது, மற்றும் என் போன்ற முதியவர்களும் இங்கு அன்றாடம் வேலை கேட்டு வருவார்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் பல இடங்களில் குறுகிய மாதங்களே வேலை செய்து தான் படித்த படிப்புக்கும் சம்பந்தம் இல்லாத நிலையில் அரை குறையான கற்றலோடு வருவதை நானே அறிவேன். பெரும்பாலான நேர் கானல்களில் எனக்குப் புலப்பட்டது இதுவே. 

ஆனால் அவர்கள் என்னிடம் ஒன்றும் நிறுவன உரிமையாளர் வசம் வேறு விதமான பதில்கள் சொல்லித் தெரியாததை தெரியும் என்றும் சொல்லி என்னையே சங்கடப் படுத்துவதும் உண்டு.

வேலைக்கு வரும் போகும் நேரத்தை நான் சொன்னதற்கு மாறாக நிறுவன உரிமையாளர் சொல்லும் நேரத்தையும் தனக்கு கொடுத்த பிரிவு வேலையையும் தலை ஆட்டி ஏற்றுவிட்டு என்னிடம் வந்து மாற்றிக் கொடுக்குமாறு வற்புறுத்துவதும் நிகழும். 

மனித வள மேலாளர் பதவிக்கு அதிக சம்பளம் என்ற விளம்பரம் பார்த்து அந்தப் பதவி பற்றிய எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் வருபவர்கள்தாம் அதிகம். கணினி சார்ந்த வேலைகளிலும் இதே நிலைதான்.

நிறுவனத்தில் வேலை செய்யும் விதிகளை மதிக்காமல் தாங்கள் செய்யும் தவறுகள் அறிந்தும் அறியாமலும் தங்களுக்கு மேல் உள்ளவர்கள் தங்களை எரிச்சலும் கடுப்பும் ஆக நடத்துவதாக தவறாக எண்ணியும், தங்களுக்கு உள்ள குடும்ப பிரச்சினைகளை மனதில் கொண்டு வேலைக்கு வந்த இடத்திலும் இது போன்ற ஆட்களிடம் திட்டு வாங்க நேருகிறது என்ற ஆத்திரத்திலும், அவர்களை மரியாதை இன்றிப் பேசுவதையும் நான் கவனிப்பேன்.

ஒரு சிலரிடம் இப்படி மரியாதைக் குறைவாக உங்கள் மேலாளர்களைத் திட்டாதீர்கள். அவர்களுக்கும் டார்கெட் உங்களை நிர்வகிப்பதில் உள்ள சிரமங்கள் போன்றவற்றால் முதலாளியிடம் திட்டு வாங்க நேரிடும். அதன் காரணமாகத்தான் அவர்கள் உங்களிடம் கடுமை காட்டுகிறார்கள் 

நாம் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நேரம் தவறாமல் வந்து வீட்டுக் கவலைகளை நிறுவனத்திற்கு வெளியே செருப்பைக் கழற்றிவிட்டு வருவதைப்போல வந்துவிட்டு இங்குள்ள மற்றவர்களுடன் உற்சாகமாக பேசியும் புன்னகையுடன் வாடிக்கையாளர்களுடன் நட்பு பாராட்டி வேலை  செய்து வந்தால் நம்மை அதிகாரம் செய்ய எவருமே தேவையில்லை என்றும் எடுத்துரைப்பேன்.

சொல்வதைச் சிரித்த முகத்துடன் சொல்வதால் புரிந்து கொண்டவர்கள் என்னை மென்மையாகவும் மரியாதையாகவும் நடத்தினர். புரியாதவர்கள் எதிர்ப்புணர்வு குறையாமலே தொடர்ந்தனர்.

 மெல்ல மெல்லத்தான் அவர்களிடம் மாற்றத்தை உருவாக்க முடியும்.
இருப்பினும் நிர்வாகமும் புதியவர்களின் திறன் கண்டு அவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதால் எனக்கு வணிகத்தில் பல இடங்களில் கிடைத்த சொந்த அனுபவங்களை செம்மையான நிர்வாகம் செய்ய நிர்வாகத்துக்கு அவ்வப்போது தெரிவித்தும் வந்தேன்.

ஒவ்வொருவரும் வாழ்க்கைத் தேவைக்காகவும் தங்களின் வறுமைக்காவும்தான் வேலை செய்யவே வருகின்றனர். சிலர் என்போல வணிகம் செய்து நட்டப் பட்டவர்களாக இருப்பர். ஒரு சிலர் ஏற்கனவே அரசுப் பணி போன்றவற்றில் இருந்து விட்டு அரசு தரும் ஓய்வூதியத்துடன் கூடுதல் வருமானம் பெற இங்கு வேலை செய்ய வருகின்றனர்.

 ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலை ஒருவர் கனிவு காட்டினால் மற்றவர் எரிந்து விழுவார். ஒருவர் பொறுமையாகச் செய் என்பார். மற்றவர் வேகமாகச் செய் என எரிந்து விழுவார். இதுவும் சரி அதுவும் சரி என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்குடன் என் மனதுக்கு எது சரியோ அதன்படி நடப்பவன் நான்.

எல்லோரும் ஒரே மாதிரியாக இருந்துவிட்டால் உலகில் அன்பும் சமாதானமும் அமைதியும் அல்லவா நிலவும். அதற்கெல்லாம் நான் ஆசைப்பட முடியுமா? 

காலை முதல் இரவு வரை வேலை செய்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் பெண்கள் இரவு சமையல் சமைத்து  குடும்பத்திற்கு பரிமாறிவிட்டுத்தான் உண்ண வேண்டும் என்ற நிலையும், குழந்தைகளை விட்டுவிட்டு வந்த தவிப்பும், 

ஆண்கள் என்றால் நேரம் கழித்து வீட்டுக்குச் சென்று நிலைமை புரியாமல் எரிச்சல் படும் மனைவிகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.

12 மணிநேரம் வேலை அரசு 8 மணி நேரம் வேலை என விதி வகுத்துள்ளது

 12 மணி நேரத்தையும் தாண்டி ஒற்றை நபர் ஒரு பொருள் வாங்க இரண்டு மணி நேரம் இழுத்தடித்தால் வீட்டுக்குச் செல்ல வேண்டிய அவசரத்தில் கடும் பசியோடு உள்ள பணியாட்கள் எரிச்சல் அடைவதையும் நான் கவனித்து உள்ளேன். ஒரு சிலர் இதனை காரணம் காட்டியே வேலையை விட்டும் விலகி விடுகின்றனர்.

நாங்கள் முன்பு பணியாற்றிய இடத்தில் இரவு ஒன்பது மணிக்கு மேல் வேலை செய்ய வேண்டாம் என்றும் ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் என்றும் போராடித்தான் சுதந்திரம் பெற்றோம்.

 முன்னதாக இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகும் வணிகத்தை நாங்கள் கணக்கிட்டு தினசரி காலை நேரத்தில் முந்தைய மேலாளர்கள் 7 மணிக்கு திறந்து ஆன விற்பனயையும்  கணக்கிட்டு மிகக்குறைவான விற்பனையே என்பதையும் அதுவும் இரவில் ஒரு சிலர் வீட்டில் நன்றாக உணவருந்திவிட்டு இங்கு இருக்கும் பத்து நபர்களின் பசித்த வயிறு புரியாமல் ஒரு ரூபாய் மதிப்புள்ள பள்ளிக்கு அடுத்த நாள் கொண்டு செல்ல வேண்டிய சார்ட்டுக்கு மணிக்கணக்கில் தேடி பரிதவிக்க வைத்த காட்சியையும் நாங்கள் உணர்ந்தோம்.

வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது, தாங்கள் நேரம் கடத்துவதால் ஏராளமானவர்களின் வயிற்றெரிச்சலை தங்கள் வீட்டுக்குச் சுமந்து செல்கிறோம் என்பது போல மாலைச் சிற்றுண்டி எடுக்கும் நிர்வாக உரிமையாளர்களும் பசித்த வயிற்றின் வலியை அறியமாட்டார்கள்தான்.

இந்தக் கசப்பான உண்மையுடன் அலுப்பும் சலிப்பும் ஆன வேலைச் சூழல் நிலவும்  நிறுவனத்தில் கொடுக்கும் பணிகள் மந்த கதையாகத்தான் நடக்கும். 

அபராதங்கள் ஏசல்கள் எரிச்சல்கள் பழகிப்போன வேலை ஆட்கள் இயந்திர கதியில் ஏனோ தானோ என்றுதான் நடந்துகொள்வார்கள். 

திருடர்கள் கூட ஒரு முறை திருடி அடி உதை வாங்கி அது பழகிப் போனால் அது தொடர்கதையாகி உல்லாச வாழ்வுக்கும் தண்டனையில் இருந்து தப்ப லஞ்சத்துக்கும் செலவிட்டு பல வழக்குகள் தவறுகள் தொடருகின்றன.
 லஞ்சம் வாங்கும் நாய்களும் இதே நிலை. 

புரையோடிப் போன இன்றைய அவல வாழ்க்கை முறை. தமிழ் மண்ணுக்கு ஆவாவழித் திருவிழாவின் போது அடுத்து காசாளர் பதவி. இங்கும் சிக்கல். ஆரம்பத்தில் என்னைப் புரிந்து கொள்ளாதவர்கள் பின்பு என் இயல்பு கண்டு நட்பு. அடுத்த சிக்கல் பணம் கையாளும்போது குறைந்தால் அது காசாளர் தலையில். அதிகம் வந்தால் நிர்வாகம் வசம். லட்சக்கணக்கில் நட்டப்பட்ட என் மனம் ஏற்பதைப் போல என் வருமானத்தை எதிர் பார்த்து நிற்கும் குடும்பம் ஏற்க மறுத்து இந்த வேலையை விடு சம்பளப் பணத்தை அங்கே விட்டுவிட்டு ஒன்றும் இல்லாமல் வந்தால் என்னாவது என்ற கடுப்பு.

அபராதங்கள் கூடக் கூடுதலான வருமானம் என்று நினைத்து நிர்வாகங்கள் நடப்பது இன்று வங்கிகள் மல்லையாக்களிடம் கமிசன் அடித்து இழந்து பாமரர்கள் தலையில் கை வைப்பது. சேமிப்பு கணக்கு இன்று சேமிப்பை சுரண்டும் கணக்கு. பிச்சைக்கார மத்திய அரசு. மக்களின் சுமை அறியாமல் இளக்காரமாக நடக்கிறது. தூக்கி அடித்து விட்டு அடுத்த ஊழல் சாம்ராஜ்ஜியம் கொடுக்கும் இலவசங்கள் பெற்று மீண்டும் மீண்டும் தொடரும் நரக வாழ்வை மக்கள் சகித்து வாழ்வதும் எத்தனை நாளோ?

உழைப்பவன் ஏமாந்து நிற்க நடிப்பவன் அடுத்தவன் உழைப்பில் சோம்பேறிகள் வாழும் வாழ்வு.  கிடைத்தவர்கள் பிரித்துக் கொள்ள உழைத்தவர்கள் தெருவில் தொடரும் அவலம். 

வீடு, நாடு வணிகம் அரசு நிர்வாகம் எதற்கும் இது அழகல்ல. இந்த நிலை நீடித்தால்
நிலைமை இன்னும் மோசமாகும். கலிகாலமாம். சப்பைக்கட்டு. 

திருந்த திருத்த நல்ல மனங்கள் வேண்டும். சர்வாதிகாரம் வென்றதாக சரித்திரம் இல்லை. நாடு அகிம்சையை ஆயுதமாக ஏந்தியே விடுதலை பெற்றது. நாமக்கல் கவியும் இங்கு என்னை அனுப்பிய முருகன் உட்பட சித்தர்கள் அனைவரும் என்னுள்ளே சிரிக்கிறார்கள்.

வீட்டிலும் எதிர்ப்பு, வேலை செய்யும் இடத்திலும் எதிர்ப்பு என என்னை மட்டம் தட்டும் முயற்சிகள் தொடர்கின்றன.
அடுத்தவர் செய்யும் தவறுகளுக்கும் புதிது புதிதான நடைமுறைகளை தாமதமாக எவரும் சொல்லிக் கொடுக்காமலே புரிந்து கொண்டு நடக்கும் போதும் கூடத் தினசரி நிர்வாகத்திடம் திட்டு வாங்கி மனம் சலித்துப் போக உடலும் கடுமையான வேலைச் சுமையால் காய்ச்சல் கண்டது.

இரண்டு நாட்கள் இதைப் பொறுத்துக் கொண்டு கடுமையான உடல் வலியோடு மூன்று தளங்கள் பலமுறை ஏறி இறங்கி வேலை செய்தேன். ஒருவர் செய்ய வேண்டிய வேலைக்கு ஐந்து மனித வள மேலாளர்கள்.  உட்காரக் கூட இடம் தராத இளைய சமுதாயம்
 விடுப்பு எடுக்கும் நாளில் விடுப்பு தராமல் நாளை கட்டாயம் வேலைக்கு வர வேண்டும் என்ற கருணை அற்ற உத்தரவு.

மனம் முடிவு செய்தது அடுத்த பயணம் செய்ய.

யாரோ வருவார்
யாரோ போவார்
வருவதும் போவதும் தெரியாது
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதி இல்லை

நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியலே
இங்கு அன்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே.
கொடுமையைச் செய்தவன் புத்திசாலி
அதைக் கோபித்துத் தடுத்தவன் குற்றவாளி

உண்மையைச் சொல்பவன் சதிகாரன்
இது உலகத்தில் ஆள்பவன் அதிகாரம்.

9500 சம்பளம் கடும் உடல் வேதனையுடன் செய்த இரட்டிப்பு வேலைக்கு
அபராதம் ஆயிரம் ரூபாய். மீண்டது 8500

திறமை உள்ளவன் வயது காரணம் காட்டி குறைந்த சம்பளம். 

திறமை அற்ற நான் கற்றுக் கொடுக்கும் நிலையில் உள்ள பெண்ணின் கீழ் வேலை செய்யும் அவலம் கூடப் பொறுக்கலாம். உன் அனுபவத்தை உன்னோடு வைத்துக் கொள் என்ற தொனியில் திமிர்வாதம் கொண்ட பார்வை. உற்றவர்களே மதிக்காதபோது மற்றவர்களைக் குறை சொல்லி என்ன பயன்?

தினசரி கல்லுப் பிள்ளையாருக்கு மணியடித்து அரை மணி நேரம் புரியாத செத்த சமஸ்கிருத மந்திர வேலைக்கு மாதம் 4500.

என்னுள் மயில் மேல் அமர்ந்து உலகம் சுற்றி ஞானப் பழம் இழந்த முருகன் சிரிக்க

வீழ்வேனா என்று நினைத்தாயா 

பாரதி வரிகள் தான் இனி என்னை வழிநடத்த வேண்டும். 

கருத்துகள்

  1. தங்களின் அயரா உழைப்பு உயர்வைத் தரும்.
    ஒரு சிறு வேண்டுகோள்
    தங்களின் பதிவினை சிறு சிறு பத்திகளாகப் பிரித்து, பதிவிடுவீர்களேயானால், படிப்பதற்கு சுலபமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. ஐந்தாம் தமிழ்ச் சங்கம்
    என்னும் தங்கள் வலைப் பூவின் பெயர் காரணம் அறிய
    மனம் விரும்புகிறது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!