தமிழர் தந்தை பெரியார்!

இன்று தமிழர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள்!

தென்னாட்டு சாக்ரடீசு எனப் போற்றப்பட்ட ஒரு ஒப்பற்ற உலகத் தலைவர் பிறந்த நூற்றாண்டில் தமிழராகப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்!

பகுத்தறிவு ஒளியினைத் தம் எழுத்தாற்றலாலும், பேச்சாற்றலாலும், தள்ளாத வயதிலும் தம் ஓய்வறியாத உழைப்புடன் தமிழகமெங்கும் பயணப்பட்டுப் பரப்பிய அந்த மாபெரும் தலைவர் மறைந்த பின்னர் அவரது இடத்தைப் பகுத்தறிவுத் தலைவர்கள் எவருமே நிரப்பவில்லையெனலாம்!

தந்தை பெரியாரால் வளர்ந்த திராவிட இயங்கங்கள், அவர் தீவிரமாக எதிர்த்த சாதி அமைப்புகளையும், மூடப் பழக்க வழக்கங்களையும் தந்தையின் மறைவிற்குப் பிறகு அதிகளவில் வளர்த்து வந்துள்ளமைதாம் வேதனையிலும் வேதனை!

அவரது மறைவிற்குப் பின்னர்தாம் சாதி அமைப்புகள் வாக்கு வங்கிக்கென ஏராளமாகத் தமிழகத்தில் பெருகி விட்டன! இந்தச் சாதி அமைப்புகளைத் தங்களின் வாக்கு வங்கிக்கென வளர்த்து விட்ட இரு பெரும் திராவிட இயக்கங்கள் இன்று இவர்கள் தயவின்றி ஆட்சி சுகம் அனுபவிக்க இயலாது யானை தன் தலையின் மீதே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வது போலத் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறும் பச்சோந்தி குணச் சாதி அமைப்புகளைத் தங்களின் தேவைக்கு அவ்வப்போது ஊறுகாயெனப் பயன்படுத்தி வருகின்றன!

தந்தை பெரியார் அவர்கள் வணிகம் செய்த அவரது வணிக வளாகம் இன்று பல கோடி ரூபாய்கள் மதிப்பில் இருப்பதால் இந்த இடத்தை யார் கைப்பற்றுவது என்ற சொத்துச் சண்டை காரணமாக வழக்கு மன்றத்தில் வழக்கு நடைபெறும் நிலையில் கவனிப்பார் இன்றிப் பரிதாபமான நிலையில் பாழடைந்து நிற்பதை அந்த வழியே செல்ல நேரிடும் எவரும் மனம் கலங்கித் தவிக்கத் தவறுவதிலலை! 

உலகளாவிய புகழ் படைத்த அந்த ஒப்பற்ற தலைவருக்கு அந்த இடத்தில் ஒரு நினைவு மண்டபமோ அல்லது ஒரு நவீனமான நூலகமோ அமைந்தால் தந்தை பெரியார் அவர்களின் உழைப்பிற்குத் தமிழினம் உரிய மரியாதை செழுத்திடும் நன்றிக்கடனுக்கு ஒப்பாகும்! ஏனோ இந்த விசயத்தில் இரு திராவிட இயக்கங்களும் தங்களின் வாக்கு வங்கிக்கென மவுனம் காக்கின்றன! 

தமிழின மேன்மைக்கெனத் தந்தை பெரியார் கண்ட கனவுகள்! ஏராளம் ஏராளம்! அந்தக் கனவுகளை முழுமையாக நிறைவேற்ற ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அவர்தம் பிறந்த நாளில் உறுதியேற்கிறது! 

தந்தை பெரியாரின் மறைவிற்குப் பின்னர் தமிழகத்தில் புற்றீசலாகப் புறப்பட்டு தமிழக மக்களைத் தங்களின் செல்வாக்கால் பிரித்தாளும் சாதிய இயக்கங்களின் ஆதிக்க மனப்பான்மையை நடுநிலையான தமிழர்கள் உணர்ந்து அவர்களை முற்றிலும் நிராகரித்து பிரிந்து நிற்கும் சாதிகள் ஒன்றுபடத் தேவையான வழிமுறைகளை இளைய சமுதாயத்தின் முன் கொண்டு செல்ல முன்வர வேண்டும்! இந்த நிலை உருவாக ஐந்தாம் தமிழ்ச்சங்கம் பாடுபடும்!

மேலும் தமிழகத்தை அமைதிப் பூங்காவாகத் திகழவிடாமல் மதவாத வன்முறை பரப்ப முயலும் மதவாதச் சக்திகளை மக்கள் அடையாளம் கண்டு நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்தது போல மதவாத மற்றும் சாதியவாத சக்திகளை மற்றுமன்றி ஊழலில் திலைக்கும் இயங்கங்களையும், 

சந்தர்ப்பவாத பச்சோந்தி குண அரசியல் இயக்கங்களையும், முற்றிலும் நிராகரிக்கும் நிலையினை வருகின்ற 2016 ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில்  வாக்களித்து மீண்டும் மகத்தான ஒரு வரலாற்றுச் சாதனையைத் தமிழ் மக்கள் நிகழ்த்தத் தயாராக 

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் தன்னாலான முயற்சியை வெளிப்படுத்தும் எனத் தந்தை அவர்களின் இந்த மகத்தான பிறந்தநாளில் உறுதியேற்கிறது!

குறிப்பு!
பகுத்தறிவும் நானும் என்ற ஒரு கட்டுரையில் என்னுள் பகுத்தறிவு எண்ணங்கள் தோன்றுவதற்கு எனது பிறப்பும் ஒரு காரணமாகும் என்பதை நான் இங்கு கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்! எனது முப்பாட்டனார் ஒரு மிகச் சிறந்த பகுத்தறிவாளராகத் திகழ்ந்திருக்க வேண்டும்! 

அவர் தமிழக மதவாத அமைப்புகள் தொன்று தொட்டு கட்டிவரும் பொய்யான இதிகாசப் புராணக் கதைகளை ஏற்காத மன நிலைக்குச் சொந்தக்காரராக விளங்கியிருக்க வேண்டும்! அதனால்தான் என்னவோ தனது மகனான எனது தந்தை வழிப் பாட்டனாருக்கு இரண்யன் எனப் பெயரிட்டுள்ளார்! 

இரண்ய கதையைத் தமிழகத்தில் பக்திமார்கள் ஒருவிதமாகவும் பகுத்தறிவுவாதிகள் ஒருவிதக் கண்ணோட்டத்திலும் இன்றுவரை கண்டுவந்துள்ளதே இதற்குச் சாட்சியமாகும்! 

தமிழர்களை அரக்கர்கள் என இராமாயணம் போன்ற கதைகளில் இழிவு படுத்தியிருப்பதை ஏற்றுக் கொள்ள இயலாத எனது முப்பாட்டனார் அதனால்தான் என்னவோ இரண்யன் ஒரு அரக்கனல்ல எனக் கருதித் தனது மகனுக்கு இரண்யன் எனப் பெயரிட்டிருப்பதாலேயே அவர் வம்சத்தில் பிறந்த எனக்குள்ளும் இயல்பாகவே பகுத்தறிவு சார்ந்த எண்ணங்கள் தோன்றியிருப்பதாக என்னால் உணர முடிகிறது! 

தந்தை பெரியார் அவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் தம் சுயம் அறியாமல் வாழ்ந்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அவரும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் அறியாமையிலும், மூடப் பழக்க வழக்கங்களிலும் சிக்கித் தவிக்கும் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கப் பிறப்பெடுத்த ஒரு ஞானத் தவச் சித்தர்தாம்!

தந்தை பெரியார் அவர்களின் சீரிய பகுத்தறிவுப் பணிகள் தொடரத் தமிழ்ச்சித்தர்களின் எண்ணங்கள் தாங்கிய வண்ணம் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் எழுத்துப் பணியும் என்றென்றும் தொடர்வதற்கெனத் தன் எண்ணங்களைப் பேரண்டப் பெருவெளியிலிருந்து பரவச் செய்யும் தந்தை அவர்களின் புகழ் ஓங்குக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!