அரசு மற்றும் தனியார் துறைகளில் ஒழுக்கம் மேன்மையுற!

1.அரசு மற்றும் தனியார் என எந்தத் துறையில் வேலை செய்தாலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தம்முடைய வேலைக்கு அரசாங்கமெனில் மக்களின் வரிப்பணத்திலும், தனியார் எனில் தம் போன்ற ஊழியர்களின் உழைப்பிலும்தாம் ஊதியம் கிடைக்கிறது என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ற உழைப்புடன் பணி நேரத்தை முழுமையாக நிறைவு செய்தல்!

2.தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை தம்முடைய பணிக்கென மட்டுமே பயன்படுத்துதல், மற்றும் அந்த வாகனத்திற்கு ஆகும் எரிபொருள், பராமரிப்பு போன்ற செலவுகளுக்கு ஆகும் உண்மையான கணக்கு வழக்குகளை நேர்மையாகப் பராமரித்தல்! எக்காரணம் கொண்டும் குடும்பத்தினருக்காகப் பயன்படுத்தாதிருத்தல்!

3.அரசுத் துறை என்றால் நாம் மக்களின் பணி செய்வதற்காக இந்தப் பணியில் அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வுடனும், தனியார் துறை என்றால் நாம் பணியாற்றும் நிறுவனத்தின் மேன்மைக்காகப் பாடுபட்டு நம் கடின உழைப்பிற்கேற்ற ஊதியமும், பணி உயர்வும் கிடைக்க வேண்டுமென்று மிகுந்த ஒழுக்கத்துடன் வேலை செய்தல்!

4.அரசு மற்றும் எந்தத் தனியார் துறையாக இருந்தாலும் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் போன்றவர்கள் நம்மை நம்பி ஒப்படைக்கும், பணம், மற்றும் கணக்கு வழக்குகளை மிகுந்த நேர்மையுடன், பணமென்றால் இது நம்முடையதல்ல என்ற மன நிலையுடன் நேர்மையாகக் கையாளுதல்!

5.சக ஊழியர்களின் ஒத்துழைப்பின்றி நம்முடைய பணி சிறக்காது என்பதால் அவர்களின் குண நலன்களுக்கேற்ப நம்மை நியாயமானவற்றிலும், நேர்மையானவற்றிலும் மட்டுமே மாற்றிக்கொண்டு அவர்களின் ஒத்துழைப்புடன் நிர்வாகம் சிறக்குமாறு ஒற்றுமையுடன் பணி செய்தல்!

6.எந்தத் துறையாயினும் தம் பங்கிற்கு நிர்வாகத்திற்கு அதிக வருமானம் கிடைக்கும் வகையிலும், தம் பொறுப்பிலுள்ள செலவினங்களை எவ்வளவு சிக்கனமாகச் செய்ய முடியுமோ அவ்வளவு சிக்கனமாக்கித் தனி மனித சிக்கனம் ஒரு நிறுவனத்தின் மாபெரும் சேமிப்பு என்பதை உணர்ந்து செயல்படுதல்! (உதாரணததிற்கு ஒரு பேருந்து ஓட்டுனரின் சிறப்பான செயலபாட்டால் எரிபொருள் சிக்கனம் தினசரி கிடைத்தல்)

7.தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியில் கவனமாக இருத்தல் ஒன்றே பல்வேறுவிதமான நன்மைகளை நிர்வாகத்திற்கு ஏற்படுத்தும் என்பதில் தெளிவாக இருத்தல்!

8.நம் கடன் பணி செய்து கிடைப்பதே என உண்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த உன்னதமான நிர்வாக அமைப்பு நிச்சயமாக இலாபத்தில்தான் நடைபெறும் என்பதைக் கவனத்தில் கொண்டு தம் பங்கினை முழுமையாக அர்ப்பணித்து உழைத்தல்!

9.எந்த ஒரு நிர்வாகமாக இருந்தாலும் அது பலதரப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பால்தாம் இலாபம் பெற முடியும்! இந்த இலாபத்தை குளிர்சாதன வசதியில் அமர்ந்து நிர்வகிக்கும் நிர்வாகிகள் இலஞ்சம், ஊழல், கமிசன், எனப் பலவகைகளில் தமதாக்கிக் கொள்ள முயலுவது பாவத்தின் சம்பளம் என்பதை உணர்ந்து தங்களின் உயர்ந்த பதவிக்கேற்ற ஊதியமும் அடிமட்டத் தொழிலாளிகளின் உழைப்பால் வருவதுதாம் என உணர்ந்து நேர்மையுடன் கண்ணியமாகத் தம் கடமையைச் செய்தல்!

10.அரசு மற்றும் தனியார் என இரு நிர்வாகங்களின் வருமானமும் அதனை நிர்வகிக்கும் அரசியல்வாதிகளின் பொறுப்பில் வருவதால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையோ, அல்லது பலமுறையோ மக்களின் ஆதரவுடன் பதவிக்கு வருபவர்கள் வரலாற்றில் தங்களின் பெயர் களங்கப்படாமல் நிலைத்து நிற்க ஒரு துறவியின் விருப்பு வெறுப்பற்ற மன நிலையுடன் செயல்படுமாறு ஒரு சிறந்த அரசியல் தன்மை ஒரு நாட்டில் அமைந்து விட்டால் 

அந்த நாட்டில் வறுமை, தரித்திரம், பிணிகள், வேலையின்மை, வேலை நிறுத்தங்கள், கொலை, கொள்ளை, வஞ்சகம், போன்ற பல்வேறு சமூக ஒழுக்கக் கேடுகள் தொலைந்து அந்த நாடு உலகினுக்கே ஒரு முன்னோடியான நாடாகத் திகழும் எனபதில் சந்தேகம் ஏதுமில்லை!

மேற்கண்டவற்றில் நீங்கள் எத்தனை நல்லவற்றைக் கடைப்பிடிக்கிறீர்கள் என உங்கள் மனச்சாட்சியை அடகு வைக்காமல் உங்களின் ஆழ் மனதிற்குள் கேட்டுப் பாருங்கள்! பாதிக்கு மேல் கடைப்பிடித்தால் மீதமுள்ளவற்றை முழுமையாகக் கடை பிடியுங்கள்! 

ஒன்றுமே செய்யவில்லையென்றால் இனியாவது முதலில் இருந்து நேர்மையாகத் துவங்குங்கள்! ஏமாற்றுபவர்கள் மற்றவர்களை ஏமாற்றுவதில்லை! அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பதுதாம் உண்மை எனத் தெளியுங்கள்! ஒரு ஒழுக்கம் நிறைந்த நேர்மையான அமைப்பு உருவாக உங்களின் பங்கினை இப்பொழுதிலிருந்தே வழங்கிட உறுதி கொள்ளுங்கள்!

தனி மனித ஒழுக்கமே ஒரு நாட்டை மேம்படுத்தும் உயரிய உன்னத சக்தியாகும்! அதில் உங்களின் பங்கு முதன்மையானதாகவும் உயரியதாகவும் இருக்கட்டுமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!