ஐவர் மலை இரசியம்!!!

ரு கடந்த ஞாயிறு அன்று குடும்பத்துடன் குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் சாலையில் அமைந்துள்ள தற்பொழுது ஐயர்மலை என அழைக்கப்படும் சிவாயம் எனும் கோயிலுக்குச் சென்றிருந்தேன்

இந்தக் கோயில் பழனி மலையை விட ஒன்றரை மடங்கு பெரிதானது. எனது மாமியாரின் தங்கை குடும்பத்தின் குலதெய்வக் கோயில் என்பதால் எனது 27 வயது துவங்கி அன்றுவரை பலமுறை  நான் அங்கு சென்றதுண்டு.

எங்களின் முன்னோர்கள் நாங்கள் தற்பொழுது வசிக்கும் இடத்திற்குப் புலம் பெயர்வதற்கு முன்னர் வசித்த பகுதி இது என எனது உள்ளுணர்வும், எங்கள் குடும்பத்தவர்களை நாயக்கன்பட்டியான் வம்சம் என அழைப்பதற்கேற்ப இதே பகுதியில் நாயக்கன்பட்டி என்ற பெயரில் ஒரு சிற்றூர் இருப்பதுகூட, எனது பங்காளிகள் இங்குள்ள தெலுங்கப்பட்டி என்ற ஊரில்தாம் எங்களின் குலதெய்வம் உள்ளதாகத் தெரிவித்தபின்னர் அங்கு அடிக்கடி வழிபாட்டிற்குச் சென்றுவந்த நிலையில் செய்த ஆய்வில் புலனாயிற்று.

இது மட்டுமன்றி நம் தமிழ்ச்சமூகம் பல்வேறு சாதிப்பிரிவுகளாகப் பிளவு பட்டுப் போன இடமென எனது உள்ளுணர்வு வெளிப்படுத்தும் பொன்னர் சங்கர் கதைக்களம் நிகழ்ந்த வீரப்பூரும் இங்கிருந்து வெகு அருகில்தாம் உள்ளது. எனினும் நான் இதுவரை அங்கும் இதே மலையின் எதிரே தரை தளத்தில் இரண்டு கல் தொலைவில் உள் சிவாயம் என்ற ஊரில் உள்ள கோயிலுக்கும், நாயக்கன் பட்டிக்கும்  மட்டும் இன்றுவரை செல்ல இயலவே இல்லை. தமிழினம் மீண்டும் ஒன்றுபடும் காலம் உருவாகும்போதுதாம் நான் அங்கு செல்ல இயலுமோ என்பதும் யாமறியேன்.

இந்த அய்யர்மலையில் தமிழ்ச்சமூகம் பிரிந்ததற்கான இரகசியம் மறைந்திருப்பதாக எனது உள்ளுணர்வு அங்கு முதன்முதலாகச் சென்ற நாள்தொட்டு இன்றுவரை தொடர்ந்துள்ளது. தெலுங்கப்பட்டி, மற்றும் அய்யர்மலை இரு இடங்களுக்கும் நான் சென்றுவந்த அனுபவங்களை தனியாகத்தாம் எழுத வேண்டியிருக்கும்.

இந்த அய்யர்மலையின் சிரமமான படிக்கட்டுகளில் எனது 27 வயது முதற்கொண்டு சென்ற ஞாயிற்றுக் கிழமை தவிர மற்ற நாட்களில் நான் உறவுகளோடு ஏற முற்படும்போது கடுமையான சிரமத்துடன்தாம் ஏற முடிந்துள்ளது. சபரிமலை ஐயப்பனைக்கூட பம்பையிலிருந்து கடினமான பாதையில் நான் மூன்றுமுறை எவ்வித சிரமமுமின்றிச் சந்தித்து வந்துள்ளேன்

எனினும் இங்குள்ள சிவனை மட்டும் நான் சிரமப்பட்டே இதுவரை சந்தித்துள்ளேன். இதற்குக் காரணம் இதுவரை நான் எனது மனதில் பலவித குழப்பங்களையும், வாழ்க்கை தந்த சுமைகளையும் சுமந்தவாறே ஏற முயன்றதுதாம்.

கடந்த ஞாயிறன்றோ நான் இது வரை செய்து வந்த பணியிலிருந்து விலகிவிட்டிருந்தேன். அது மட்டுமன்றி பத்தாண்டுகளுக்கு முன்னர் என்னுள் எழுந்த ஒருவித எழுச்சி தற்காலிகமாக என்னுள் புதையுண்டிருந்தாலும், அது ஆல்போல என்னுள் வளர்ந்திருந்த நிலையில் ஒருவித புத்துணர்வோடும் மனதில் சுமையேதும் இன்றியே இந்த மலையில் ஏறத் துவங்கினேன்.

என் கரங்களில் நான் கடைசியாக வாங்கிய ஒரு அற்புதமான புத்தகம். எனது கைபேசியில் நம் தமிழ்ச்சமூகம் எப்படியெல்லாம் வாழ வேண்டும் எனச் சித்தர்கள் தந்ததாக நான் கருதும் அமரர் மக்கள் திலகம் மற்றும் அமரர் சிவாஜி அவர்களின் பாடல்கள் கேட்டவாறே எனது மலையேற்றம் துவங்கியது.

வழக்கமாக தினசரி மலை ஏறும் நபர்கள் தவிர பக்தர்களும் இந்த மலையின் படிக்கட்டுகளில் நேராக ஏற முடியாமல் ஒவ்வொரு படிக்கட்டிலும் இடம் வலமாகப் பயணித்தவாறுதாம் ஏற முற்படுவர். நான்கூட முன்னாட்களில் இப்படித்தாம் அங்கு ஏறியுள்ளேன். அன்றோ நான் ஒரு வீட்டின் மாடிப்படிகளில் ஏறுவது போல இறுதிவரை ஏறினேன்.

மலையின் கால்வாசி தூரம் கடந்த நிலையில் அருகில் பயணித்த எனது உறவுச் சகோதரி பவானி தன்னிடமிருந்த இன்றைய கல்லூரி இளைஞர்கள் நாகரீகமாகச் சுமந்து செல்வது போன்ற ஒரு பையைச் சுமை தாள இயலாமல் என்னிடம் தர நான் அந்தப் பையை எனது இடது தோளில் மாட்டியவாறு ஏறத் துவங்கினேன். இதைக் கண்ட எனது உறவுக் கல்லூரி இளைஞன் விமல் அதை எனது இரு தோள்களிலும் மாட்டியவாறு பயணிக்க வற்புறுத்த புவி ஈர்ப்பு விதிக்கேற்ப எனது சுமையின் பாரம் குறைந்து மேலும் பயணித்தேன்.

மேலும் பாதி தூரம் கடந்த நிலையில் எனது இளைய மைத்துனர் ஓருவர் கையிலிருந்த மற்றொரு பையும் சுமந்து செல்ல முடியாத நிலையில் என் வசம் வந்தது. இரண்டிலும் மேல் உள்ள சிவனுக்குப் படைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட பூசைப் பொருட்கள். மனதிலும் கையிலும் சுமையின்றிப் பயணித்த என்னைச் சுமையோடு ஏறப் பணித்த சிவனின் விருப்பம் இதுவோ என எண்ணியும் சொல்லியவாறும் என்னுடன் பயணித்த எனது மனைவி மலை ஏற உதவியவாறு மலையேறிக் கொண்டிருந்தேன்.

படியெங்கும் தமிழனை ஆரியம் அரக்கரென்றும், குரங்கு முகம் கொண்டவனென்றும் கம்பன் ஏமாந்தான் எனக் கவியரசர் குறிப்பிட்ட இராமாயணக் கட்டுக் கதையில் புகழப்பட்ட வானரக்கூட்டம் எங்களைப் பின் தொடர்ந்தவாறிருந்தது. மலையேறிய அனைவர் கரங்களிலும் ஒரு மரக்குச்சியை வைத்துக் கொண்டு அவற்றை விரட்டிக் கொண்டிருக்க அவையோ தங்களுக்கே உரிய சாமர்த்தியத்துடன் இவர்கள் கொண்டு வந்த தின்பண்டங்களைக் கவர்ந்து சுவைத்தவாறு மேலேறின.

என்னிடம் இருந்த கைப்பையிலும் சிவனுக்குப் படைக்கவிருந்த வாழைப்பழங்கள் அவைகளின் கண்ணிற்குப் படும் விதமாகவே பயணித்தன. மேலும் எனக்குச் சமமாக ஏறிய சில வானரங்களுடன் கை கொடுக்க முயன்றவாறு பயணிக்க அவையோ பயந்து ஒதுங்கின. ஆனால் குச்சி வைத்திருந்த மற்றவர்களை முறைத்தவாறும், இவை என்னை ஒன்றும் செய்யாது என்ற எனது பேச்சைக் கேட்டவாறும் பயணித்தன.

உறவுகள் அதை மறைத்து எடுத்து வாருங்கள் எனப் பலமுறை வற்புறுத்தவே நான் சிரித்தவாறே என்னிடமிருந்த புத்தகத்தைக் கொண்டு ஓரளவே அப்பழங்களை மறைக்க முயன்றும் பாதி வெளித்தெரிந்தவாறுதாம் மலையேற்றப் பயணம் நிறைவுக்கு வந்தது.

மலை உச்சிக்கு முன்பே ஒரு பிரம்மாண்டமான மண்டபம் உள்ளே ஒரு பெரிய நந்தியுடன் காணப்படும். அங்கு நுழைந்தவுடன் எவரெவர் என்னிடம் தங்களின் சுமைகளைக் கொடுத்தனரோ அவரவரிடமே அந்தச் சுமைகளைத் திருப்பித் தந்துவிட்டேன். அந்த மண்டபத்தை என்னைத் தவிர எவரும் எப்போதுமே இலட்சியம் செய்ததில்லை. என்னுடைய தேடலுக்கான விடை அங்குதான் உள்ளதென எனது ஆழ் மனம் அங்கு செல்லும்போதெல்லாம் அறிவுறுத்தினாலும் உறவுகள் என்னை அங்கு செல்ல அனுமதிப்பதில்லை.

இம்முறையோ எனது மனைவி அங்கு ஆய்வு நடத்த முயன்ற என்னை சில நாட்களுக்கு முன்னர் என்னுள் வெளிப்பட்ட இறையாற்றலை எனது மனப்பிரள்வாக நினைந்து எதிர்த்து வந்துள்ள நிலையில் இன்றும்  கடுமையாக எதிர்த்தார். அத்துடன் இந்த மண்டபத்தின் மேலே எந்த நூற்றாண்டிலோ அவசர அவசரமாக எழுப்பப்பட்ட ஒரு கோயிலில் அமைந்துள்ள  இராஜலிங்கம் என அழைக்கப்படும் சிவனை வழிபட என்னை வற்புறுத்தி அழைக்க முற்பட இம்முறை நான் கடுமையாக அதனை மறுத்து சிவம் என்னுள் உள்ளதால் மேலே எனக்கு வேலையில்லை என மறுத்துவிட்டு எனது ஆய்வினைத் தொடர முற்பட்டேன்.

இந்த முறைதாம் என்னால் அந்த மண்டபத்தைச் சரியாகப் பார்க்க முடிந்தது. மண்டபத்தின் மேற்கு பகுதியில் கிழக்கு நோக்கி வரிசையாகச் சிலைகள் காணப்பட்டன. அதில் முதலாவதாக இருந்த பிள்ளையார் சிலை பளிச்சென புதிதாக அமைக்கப்பட்டது போன்று காணப்பட தொடர்ந்திருந்த மற்ற சிலைகள் அறுபத்து மூன்று நாயன்மார்களுடயதாக அமைந்திருந்தன.
இந்தச் சிலைகளில் பிள்ளையார் சிலையைத் தவிர மற்ற சிலைகளின் பின்புறம் அவற்றிற்குரிய மாதம் மற்றும் நட்சத்திரம் குறித்த விபரங்கள் எழுதப்பட்டிருந்தன

அவற்றைப் படித்தவாறும் சிலைகளின் எண்ணிக்கையை எண்ணியவாறும் நடந்த எனது கண்களில் ஒரு தூணின் பின்புறம் மறைவாக இருந்த ஒரு சிலையும் அதன் பின்புறம் மற்ற சிலைகளின் பின்புறம் உள்ளது போன்று நட்சத்திரம் மற்றும் மாத விபரங்கள் எழுதப்படாததையும் அதன் பின்னர் தொடர்ந்த மற்ற சிலைகளின் பின்புறம் எழுதப்பட்ட நட்சத்திரம் மற்றும் மாதங்களை வேகவேகமாகப் படித்து முடித்து இதில் ஏதோ தவறு நேர்த்திருப்பதாக உணர்ந்தேன்.

உடனே நான் சற்று பதற்றமடைந்ததோடு மட்டுமன்றி சற்று அவசரப்பட்டு அருகிலிருந்த என் உறவினர் அல்லாத சிலரை அழைத்து இதோ இந்த வரிசையில் என்னுடைய பிறந்த மாதமும் நட்சத்திரமும் மட்டும் காணப்படவில்லை என்றும் அநேகமாக அது இதோ பின்புறம் மறைவாக உள்ளதே அந்தச் சிலைதாம் என்னுடைய பிறந்த மாதம் மற்றும் நட்சத்திரத்திற்குரியது எனக் கூறியவாறே அந்தச் சிலையை எடுக்க முயன்றால் அது இரு கால்களுமின்றி உடைக்கப்பட்ட நிலையில்தாம் அந்தத் தூணின் பின்புறம் மறைவாக வைக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

அது மட்டுமன்றி எனது அவசரப்படும் வெளி மனம் அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்பதை அறுபத்து நான்கு நாயன்மார்கள் எனத் தவறாக வெளிப்படுத்த உடனே நான் பிள்ளையாரை விட்டுவிட்டு அடுத்துள்ள சிலைகளை வரிசையாக எண்ண முற்படும்போது இருபத்தேழாவதாக வந்தது ஒரு பெண் நாயன்மார். அவர் பெயர் காரைக்கால் அம்மையார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது, அடுத்து வந்த அனைத்து சிலைகளுடன் கால் உடைந்த நிலையில் இருந்த சிலையையும் எண்ணி முடித்தால் சரியாக அறுபத்து நான்கு நாயன்மார்கள் என எண்ணிக்கை வந்தது. பின்னரே என் ஆழ் மனம் ஏன் அறுபத்து மூன்று நாயன்மார்கள் எனப் படித்த என்னுள் அறுபத்து நான்கு நாயன்மார்கள் எனத் தவறான வெளிமன வெளிப்பாடு வந்ததெனச் சற்றுக் குழப்பமுற்றது.

இருபத்தேழாவது பெண் நாயன்மாரின் இரு எண்ணிக்கையையும் கூட்டினால் ஒன்பது என வந்தது. அதே போன்று இறுதியாக இருந்த சில நாயன்மார்களில் இரு பெண் நாயன்மார்களின் சிலையும் இருப்பதை நான் அறிந்தேன். ஆக உடைபட்ட சிலை அநேகமாக புதிதாகத் திணிக்கப்பட்ட பிள்ளையார் சிலை இருந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும் என என் ஆழ் மனம் வெளிப்படுத்த அந்தச் சிலையே பூச்சியத்துக்குள்ளே ஒரு இராச்சியமாக இருக்கும் முழு முதற்கடவுளாக என் மனம் நம்பும் இயற்கையும் அவனே உலகமும் அவனே அண்ட சராசரங்களைக் காப்பவனும் அவனே எனும் முருகனாக இருக்குமோ என உறுதியாக நம்பத் துவங்கியது.

இதன் வெளிப்பாடாக நான் என் அருகிலுருந்த மற்றவர்களிடம் இதோ இங்கு முதலாவதாக இருக்கும் பிள்ளையார் ஒரு கடவுளே அல்ல. அந்தச் சிலை ஏதோ ஒரு நூற்றாண்டில் தமிழினத்தின் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட கற்பனை வழிபாட்டுச் சிலை. முழு முதற் கடவுள் முருகன் ஒருவன் மட்டுமே என உணர்வு பொங்க விவரிக்க முயல அவர்களில் சிலர் அதை ஏற்றவாறும் பலர் ஏற்காதவாறுமாக வேகவேகமாக மண்டப உச்சியில் உள்ள சிவனை வழிபடச் சென்றுவிடவே தனித்து விடப்பட்ட நான் மேலும் விரிவாக அந்த மண்டபத்தின் உட்புறத்தை ஆராய முற்பட்டேன்.

மண்டபத்தின் உட்புற மேற்கூரையில் நான் கண்ட விசித்திரக் காட்சியும், அதே மேற்புறத்தின் கிழக்கு பகுதியில் பாண்டியர்களின் மீன் சின்னம் சோழ நாட்டில் காணப்படுவதும் கண்டு என் மனம் வியப்புற்றது. அடுத்து நந்தியின் எதிரே ஒரு உயர்ந்த ஆசனம் மட்டுமே காணப்பட்டது. இது ஒருவேளை சமணர்களின் கல்விக்கூடமாக இருக்குமோ என என் ஆழ் மனம் சந்தேகப்பட்டது. அந்த ஆசனத்தின் பின்புலத்தில் என் கண்ணுக்குத் தெரிந்த சில காட்சிகள் எனது உள்ளுணர்வை மேலும் உறுதிப்படுத்தத் துவங்கின.

மண்டபத்தை முழுமையாக ஆராய முற்படாமல் கிழக்கு பகுதியில் மேல் நோக்கிச் சென்ற பாதையில் பயணிக்க முயன்றால் அந்த மண்டபத்தின் இறுதிப்பகுதி ஏற்கனவே எனது சந்தேகப் பட்டியலில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தின் மொட்டைக் கோபுரம் போலவே பாதியில் முடிந்த நிலையில் காட்சியளித்தது. கங்கை கொண்ட சோழபுரத்திற்குச் சென்ற போது என்னுள் உதித்த சபதம் போல இந்த மண்டபத்தின் இறுதி வடிவமும் என்னால்தான் நிறைவேறும் என்று எண்ணியவாறே மேலும் உச்சியை அடைய முயல அங்கு மதில் சுவரின் மீது மந்திகளின் கூட்டம் அமர்ந்திருந்தது.

அங்கிருந்த பாறையில் தண்ணீர் நிறைந்திருப்பதாக நான் கருத ஒரு மிகப்பெரிய உருவங்கொண்ட தேனீக்களின் கூட்டமும் அங்கு காணப்பட, நான் அச்சமின்றி அந்தப் பாறையில் இருந்த நீரில் கால் நனைத்தவாறு கடந்தால் மேலுள்ள சிவன் கோயிலின் வாயிலில் அந்தப் பாதை முடிவுறுவதைக் கவனித்தேன். பின்னர்தாம் அங்குள்ள பாறையில் இருந்த நீரில் தேனும் கலந்திருப்பதுவும் அவற்றைச் சுவைப்பதற்கே வானரக்கூட்டங்கள் காத்திருப்பதும் என் அறிவிற்குப் புலனாயிற்று. கடும் வெயிலில் மேலேறியிருந்த என்னிடம் நிறைந்திருந்த வியர்வை வாடை பிடிக்காத தேனீக்கூட்டம் என்னை ஏதும் செய்யாது விட்டதும் என்னை வியப்பின் உச்சத்தில் ஆழ்த்தியது.

இதன் பின்னர் எனது சந்தேகங்களுக்கான விடை ஓரளவு கிடைத்த நிலையில் என்னை சிவ வழிபாட்டிற்கு அழைத்த எனது மனைவியின் வற்புறுத்தலுக்குப் பணிய மறுத்த என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவர் வேகமாகக் கீழே இறங்க முற்பட ஆத்திரத்தில் இறங்க முற்பட்ட அவரின் செயலால் ஏதேனும் விபரீதம் நேரிடுமோ என அச்சமுற்ற நான் அவருக்குப் பாதுகாப்பாக கீழே இறங்கத் துவங்கினேன். அப்பொழுதும் என் கைபேசியில் அமரர் மக்கள் திலகம் மற்றும் அமரர் சிவாஜியின் பாடல்கள்தாம் ஒலித்துக் கொண்டிருந்தன.

முன்னதாக மலையேறும்போது ஒவ்வொரு மண்டபமாக நான் மற்றவர்கள் ஏறும் வரை அவர்கள் பத்திரமாக ஏற வேண்டுமே என்ற கரிசனத்துடன் சற்று ஓய்வெடுத்தவாறும், தாகத்திற்கென நான் வாங்கியிருந்த தண்ணீர் பாட்டிலும் மற்ற உறவுகளின் கைகளில் சென்றுவிட எனக்குக் கிடைத்த சதுரக் கல்கண்டில் சிறிதளவே வாயிலடக்கித் தாகம் தீர்ந்து பயணித்திருந்தேன். அப்பொழுது மேலிருந்து கீழ் இறங்கியவர்களும், இப்பொழுது கீழிருந்து மேல் ஏறியவர்களும் நான் பாடல்கள் கேட்டவாறு உற்சாகமாகப் பயணிப்பதை உள்ளுக்குள் சற்று ஆச்சரியத்துடனும் சற்றுப் பொறாமையுடனும் கவனித்தவாறும் என்னைப் பார்த்தவாறு அவர்கள் பேசிச் சென்றது இதுதாம்.

இவரைப் பாருங்கள் எவ்வளவு ஜாலியாகப் பாட்டுக் கேட்டவாறு மலை ஏறுகிறார்?  நாமும் இவ்வாறு ஏறாமல் போனோமே!

இரவு வீடு திரும்பியவுடன் என்னுள் மேலும் ஏராளச் சித்தர்களின் சிந்தனைகள்.

நாயன்மார்கள் அறுபத்து மூவரோ? அறுபத்து நால்வரோ?
இரு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்தச் சிலைக்குரிய நட்சத்திரமும் மாதமும் என்னுடயவை அல்லவே அல்ல எனக் குறிப்பு வருவதேன்?

ஆண் பெண் சமத்துவச் சிவசக்தித் தத்துவத்தை உதிர்த்த அர்த்தமற்ற இந்துமதம் நாயன்மார்களில் மூன்று பெண் நாயன்மார்களை மட்டுமே ஏன் வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டுள்ளது?

பூச்சியம் என்ற எண்ணைத் தன்னுடயதாக அறிவிக்கும் இறை சக்தி புவிப் பந்தின் தட்பவெப்ப இயல்புக்கேற்ப மக்கள் கூட்டம் ஒன்றிலிருந்து ஒன்பது வரை மட்டுமே என ஒரே வித முகங்களை உலகெங்கும் காட்டுவதேன்?

இங்குள்ள சிவனை பல்வேறு சாதியினரும் தத்தம் குல தெய்வம் என உலகெங்குமிருந்து வழிபடப் படையெடுத்து வருவதேன்?

இங்குள்ள குறிப்பிட்ட சில சாதிப் பிரிவுகளின் தங்குமிட மண்டபங்கள் மூன்று மந்தை, பதின்மூன்று மந்தை எனப் பல்வேறு மந்தைப் பெயர்களில் இருப்பதேன்?

தமிழக மக்கள் தற்பொழுது செம்மறி ஆட்டு மந்தைகளின் கூட்டத்தவர்களாகக் காட்சியளிப்பதேன்?

சாதிக் கட்சி, ஊழல் கட்சி, கூத்தாடிகள் கட்சி எனப் பிளவுபட்டுச் சண்டையிட்டு மண்டைகள் உடையும் மலையாட்டுக்கூட்டமாகக் காட்சியளிப்பதேன்?

இவர்கள் ஒரு வலிமையான தலைவன் உடைய வெள்ளாட்டு மந்தையாக மாறத் தயங்குவதேன்?

விடை என்னுள் அந்த மலையேறும் போது இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கிக் கையில் வைத்திருந்த அற்புதமான ஒரு புத்தகமான பொதுவுடமை இயக்கத் தோழர் புவியரசு எழுதியிருந்த அபூர்வமான வித்தியாசமான ஆய்வுக் களமாகத் திகழ்ந்த

தேன்தமிழ் என்ற புத்தகத்தில் மறைந்திருப்பதை மட்டுமே என்னால் தற்பொழுது ஓரளவு உணர முடிகிறது.

தமிழ் தமிழ் என ஓயாது உச்சரித்தால் அது அமிழ்து அமிழ்து என முடிவுறுவதும்

உழைப்பும் சுறுசுறுப்பும் மட்டுமே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டு உழைத்து வாழ்ந்த தேன் தமிழ்நாடு எனும் இந்தப் புவிப் பந்து முழுவதும் விரிந்து பயணித்துத் தன் உயிர் வித்துக்களைப் பரப்பிய தேன்தமிழ்நாட்டின் தலைவி ஒரு பெண் தெய்வமே என்ற உண்மை என்னுள் ஆழமாக உறைக்க
இந்தப் புவிப் பந்தைத் தன் கரங்களில் ஏந்திய சூரியன் என ஆண்பாலில் அழைக்கப்பட்ட சூரியா எனும் தமிழ்த்தாயே அந்தத் தாயாக இந்தப் புவிப்பந்திலுள்ள உயிர்களையும் பயிர்களையும் காக்கும் தாயாக
சிவந்த நிறத்துடன் தங்க நிறமாகக் காட்சியளிக்கும் முருகனாகப் பகலிலும்
கருமை நிறத்துடன் மாயோன் எனும் கண்ணனாக வெள்ளி நிலவாகி இரவில் காக்கும் தந்தையாகவும்
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு என
ஞாயிறு ஒரு கோள்
திங்கள் ஒரு கோள்
செவ்வாய் அதுவும் சிவந்த வாயை உடைய ஞாயிறைக் குறிப்பதும்
புதன் என அறிவிற்குரிய சந்திரனைக் குறிப்பதும்
வியாழன் என அறிவிற்குரிய தந்தையைக் குறிப்பதும்
வெள்ளி எனச் சந்திரனைக் குறிப்பதும்
சனி எனப் புரியாத புதிராக இந்தப் புவிப்பந்திலுள்ள உயிர்களையும் பயிர்களையும் ஆட்டிப் படைக்கும் தீய சக்திகளை எதிர்த்து நிலைத்திருக்கும் இறை சக்தி இந்தப் பால்வெளியில் நிலைத்து நிற்பது ஞாயிறும் சந்திரனும் மட்டுமே என ஓங்கி அடிப்பதும்
நாசா மற்றும் இந்தியா உட்பட உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இல்லாத கோள்களைத் தேடி அனுப்பியதாக அனுப்புவதாக அறிவித்த சாட்டிலைட்டுகள் அனைத்தும்
செட் போடப்பட்டு உலக மக்களை ஏமாற்றும் நாடகமோ என்ற கேள்வியில் முடிவதுதாம் விந்தையிலும் விந்தை.
பூச்சியமாக இருக்கும் இறைவனின் அடுத்து எந்த எண்ணைச் சேர்த்தாலும் அதன் மதிப்பு ஏறுவதும்
பூச்சியமாக இருக்கும் இறைவனின் முன்னால் எந்த எண்ணை அடுக்கினாலும் அவை மதிப்பிழந்து நிற்பதும் விந்தையிலும் விந்தைதானே?
இது எனது மனக் குழப்பமாக இருந்தால் விடை தெரிந்தவர்கள் உதவலாமே!

இந்த மாதம் மீண்டும் ஒரு முறை இதே கோயிலுக்குச் செல்ல நேரிட்டது. இந்த முறை இந்த மலையின் உண்மையான தமிழ்ப்பெயர் ஐவர் மலை என்பதும், இது மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதும், கௌரவர்களான ஆரியர்களிடம் நாட்டை இழந்த பாண்டவர்களான தமிழர்கள் வனவாசம் செய்த காலத்துடன் தொடர்புடைய மலை இதுவென்பதும், 

தமிழர்களிடமிருந்த இந்த மலை சமணர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானவற்றில் ஒன்றென்பதும் எனது அறிவிற்குப் புலனாயிற்று. வள்ளுவர் போன்ற தமிழர்கள் குருகுலமாகப் பாடம் நடத்திய இந்த இடமே பின்னர் சமணர் வசம் பள்ளிகளாகவும், அதன் பின்னர் ஆரியர் வசமாகி கோயிலாகவும் மாற்றப்பட்டுள்ளது என்பதுதாம் எமது ஆழ்மன உணர்வுடன் எனக்கு இதோ இந்த வீடியோ பதிவில் உலகிற்கே காணக் கிடைக்காத அபூர்வக் காட்சியளித்த எம் தமிழ்த்தாயின் வானுலா உணர்த்தும் உன்னத உண்மையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!