ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே!

எனது மகளின் திருமணம் இனிதாக முடிந்த அந்த நன்னாளில் சேலத்திலிருந்து ஈரோட்டிற்கு இல்லம் திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில் காணப்பட்ட வங்கி ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பது கண்டு சற்று வியந்தவாரே எங்கள் பயணம் தொடர்ந்தது.

சங்ககிரியைக் கடப்பதற்கு முன்பு எங்களின் செல்பேசிகளில் இன்றுவரை நாட்டையே அலங்கோலமாக்கிவிட்ட ஒட்டுமொத்த தமிழக மக்கள் மட்டுமல்ல, வந்தாரை வாழ வைக்கும் நம் தாய்நாடாம் தமிழகத்தில் பிழைப்புத் தேடி வந்துள்ள கோடிக்கணக்கான வட இந்தியர்கள் வரை, இந்திய வரலாற்றிலேயே இன்றுவரை திட்டித் தீர்க்கப்படும் ஒரே பெருமைக்குரிய நம் பாரதப் பிரதமர் அவர்கள் சர்வாதியாக அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் அந்தத் துயரகரமான செய்தி.

அன்று துவங்கியதுதாம். ஒரே நாளில் மக்கள் அனைவரும் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டனர். கையில் வைத்திருந்த சொற்பமான சில ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் திருப்பிக் கொடுக்க ரேசன் கடைகளில் காத்திருப்பதை விடக் கேவலமாக கடும் வெயிலிலும், தன் அன்றாட வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு நடுத்தெருவில் கால்கடுக்க நின்றனர் நாட்டு மக்கள்.

 ஒரே சேமிப்பான மண்பாண்ட உண்டியல் துவங்கி ஒவ்வொரு வீட்டின் இண்டு இடுக்கெல்லாம் ஏதேனும் அவசரத் தேவைக்கேற்ப போட்டு வைத்திருந்த 100, 50, 20, 10, 5, 2, 1, ரூபாய் தாள்கள் உட்பட நாணயங்களும் தட்டித் தடவி தேடி எடுக்கப்பட்டு ஒட்டு மொத்த நடுத்தர மக்கள், சராசரி ஏழை மக்கள் துவங்கி பிச்சைக்காரர்கள் வரை தாங்கள் வசித்த வீடுகளைச் சுத்தமாகச் துடைத்து எடுத்து தம் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் படாதபாடு பட்டனர்.

இந்த அவலங்களைத் தவிர மருத்துவமனைக்குக் கட்டக்கூட மதிப்பிழந்த பணத்தை வைத்துக் கொண்டும் உயிரை மாய்த்தவர்கள் போன்ற துயரச் சம்பவங்கள் ஏராளம் ஏராளம் இந்த நாடறிந்தவைதாம். அவற்றையெல்லாம் எழுத இங்கே ஏராளம் பக்கங்கள் தேவை.

அன்று துவங்கி நாட்டு மக்களின் வீடுகளில் தரித்திர தாண்டவம். 

இதோ இன்றுவரை நாட்டிலுள்ள சராசரி மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளில் பணப்புழக்கம் என்பது சுத்தமாகத் துடைத்தெடுக்கப்பட்ட நிலையில்தாம் காட்சியளிக்கின்றன. 

யாரிடம் பேசினாலும் மத்தியிலுள்ள ஆட்சி ஒழிந்தால்தாம் நாடு உருப்படும் என்ற விரக்தியான பதில்தாம்.

இதற்காக நான் காங்கிரசுக்கு வக்காலத்து வாங்குபவன் எனக் கருதிவிடாதீர்கள். ஆக்சுபோர்டில் படித்தவர் என்ற பெயர் பெற்ற ப.சி அவர்கள்தாம் சேவை வரி என்ற நரித் திட்டத்தை இந்தியாவில் நுழைத்து மக்களின் ஒட்டுமொத்த வியர்வையையும் இரத்தத்தையும் அரசியல்வியாதிகள் வரிப்பணமென சுவைத்து இன்று இலட்சம் கோடிகள் என ஊழலில் கரை புரண்டோடிடச் செய்த புண்ணியத்திற்குரியவர்.
அவர் கொண்டு வந்த இந்தத் திட்டத்தை மக்களுக்கான அரசு என மார் தட்டும் மோடி உண்மையிலேயே ஒரு மக்கள் எதிர் பார்த்த மாற்று அரசாக இருந்தால் சேவை வரியை உடனடியாக நீக்கியல்லவா இருக்க வேண்டும். 

ஆனால் நடந்த கதையோ வேறு.

ப.சி 10 சதம் எனக் கொண்டு வந்த இந்தச் சேவை வரி இன்று 18 சதம் என உயர்ந்து சிலவற்றிற்கு அதைவிட மேலாக ஜிஎஸ்டி என்ற வடிவில் மக்களின் வியர்வையையும் இரத்தத்தையும் இரத்தம் குடிக்கும் அட்டைபோலக் குடித்துக் கொண்டிருக்கிறது.

ஆக நாட்டில் மத்தியில் ஆளும் இன்றைய அரசு மட்டுமல்ல இலட்சம் கோடிகளை வெளிநாடுகளில் குவித்து வைத்து பாரத மக்களின் வயிற்றெரிச்சல்களைச் சுமந்துகொண்டு அற மன்ற வாசல்களில் சொத்துக் குவிப்பு வழக்கிற்காக தனது குடும்பத்துடன் அலைந்து கொண்டிருந்தாலும் எவ்வித பணப் பற்றாக்குறையும் இல்லாத பொருளாதார மேதை எனப் புகழப்பட்ட ப.சி போன்றவர்களை தலைவர்களாகக் கொண்ட காங்கிரசு போன்ற இயக்கமும் நாட்டின் அடுத்த அரியணையில் ஏறவே தகுதியற்ற ஒரு இயக்கம்தாம்.

இதோ இன்றைய தினம் பாராளுமன்றம் கூடும் இந்த நாள் பாராளுமன்ற வரலாற்றிலேயே தலை சிறந்த நாளாகத் திகழும் என்ற பிரதமரின் அறிவிப்பு வந்தது. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டு நாடாளுமன்றமே செயலிழந்து போனாலும் கவலையற்றவர்களாகக் காட்சியளிக்கும் எம்பிக்கள் அனைவரும் இதோ பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு நிலை குலைந்து தவிக்கும் சராசரி சாமானியர்களைப் போலப் பரம ஏழைகள் அல்ல. 

அவர்களின் சொத்துக் கணக்கு அதிகாரபூர்வமாகவே 100 கோடிகளுக்கு மேல்தாம். பினாமிகள் பெயரிலும் வெளிநாடுகளில் பதுக்கியவை இந்தக் கணக்கில் வரவே வராது.

இனி பாரத நாட்டை ஆள்வதற்கு ஏகபோக சக்தியாகக் கருதும் காங்கிரசு மற்றும் பாஜக என இரு இயக்கங்களும் தகுதியற்றவை.
 50 ஆண்டுகள் ஆண்டு குட்டிச்சுவரான காங்கிரசு ஆட்சியும்,

 4 ஆண்டுகள் ஆண்டு ஒட்டுமொத்த நாட்டையும் நாணயத்தைச் சுண்டுவது போலப் புரட்டிப்போட்ட பஜக ஆட்சியும் சரிக்குச் சம சர்வாதிகாரம் மற்றும் ஊழல் குணம் கொண்டவைதாம்.

இவர்கள் இருவருக்கும் மாற்றாக இனி மாநிலக்கட்சிகள் மட்டுமே அசுர பலம் கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலங்களின் சுயாட்சி என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் வெற்றி முழக்கம் உலகெங்கும் எதிரொலிக்கும் நிலை பாரத மக்களால் உருவாக்கப்பட வேண்டும்.

உடனே நான் திமுக ஆதரவாளன் என அவசரப்பட்டுவிடாதீர்கள்

ஊழலின் இமயம் திமுக என்றால் அதற்குச் சற்றும் சளைக்காதது அதிமுக. ஆக தமிழகத்தில் இந்த இருபெரும் ஊழல் இயக்கங்கள் தவிர இவற்றுடன் தேர்தலுக்குத் தேர்தல் 1, 2, 3, 5, 10 சீட்டுக்கென கொள்கைகளை அடகுவைத்து தேர்தலுக்குத் தேர்தல் பச்சோந்தி குணம் கொண்டு அணி மாறும் இன்றுள்ள அனைத்து சாதி இயக்கங்கள் உட்பட அரசியல் இயக்கங்கள் அனைத்தும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழக்கும் நிலை உருவாக வேண்டும்.

உடனே நான் இன்று புற்றீசல் போல முளைத்துள்ள காளான் கூத்தாடிக் கட்சிகளின் ஏதோவொரு ஆதரவாளன் என நினைத்துவிடாதீர்கள். நான் இவர்களையெல்லாம் தமிழகத்தை ஆள்வதற்கு தகுதியுள்ளவர்கள் என்ற தவறான நினைப்பை ஒரு துளியளவும் எனது நினைவில் ஏற்பவன் அல்லவே அல்ல. திரைப்படத்தில் நடித்து வன்முறை, போதை, பெண்களுடன் அரைகுறை ஆடைகளுடன் நடனம் என  நான் தொட்டு நடிக்காதவன் என மார் தட்டும் டிஆர் முதற்கொண்டு ஒருவரும் தகுதியற்றவர்கள் என்பதை வெறித்தனமான இரசிக குணம் அல்லாதவர்கள் எவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இந்த நிலையில் தமிழக அளவிலாவது ஒரு மகத்தான அரசியல் மாற்றம் நிகழ்ந்தே தீர வேண்டும். அது சல்லிக்கட்டுப் போராட்டம் போலத் தன்னிச்சையாக உருவாக வேண்டும். தமிழகத்தில் நிகழும் எழுச்சி ஒட்டு மொத்த பாரதம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும். 😄அதற்கு வெறித்தனமான அரசியல்வாதிகள் மீதும் நடிகர்கள் மீதும் அவர்களின் சுயம் அறியாது பற்றுக் கொண்ட பதவிக்கு அலைபவர்களைத் தவிர தங்களின் வாக்கு வங்கியை இலவசங்களுக்கோ மற்ற எதற்கும் சற்றும் மயங்கி அடகு வைத்து அடிமையாகாத மக்கள் கூட்டம் திரண்டெழ வேண்டும்.

பதவிக்கும் பணத்திற்கும் ஆசையற்ற சாதி மத இன பேதமின்றி மக்கள் நலம் மட்டுமே மனதில் கொண்டு இருக்கும் இடம் தெரியாமல் எங்கேனும் மக்கள் தொண்டு செய்யும் நல்லவர்களை அடையாளம் காண வேண்டும். 5 இலட்சம் மக்கள் தொகை கொண்ட நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் தேடினால் 40 நல்லவர்கள் கிடைக்காமலா போவார்கள். தேடுங்கள் கிடைப்பார்கள். அவர்களை தொகுதி மக்களுக்கு இவர்தாம் உங்களின் மக்கள் வேட்பாளர் என அறிமுகம் செய்யுங்கள். சிந்தாமல் சிதறாமல் படிப்பறிவற்றவர்களுக்கும் எடுத்தியம்பி அவர்களின் வாக்குகளையும் இந்த நல்லவர்களுக்கே கிடைக்கச் செய்யுங்கள்.

மத்தியில் கூட்டாட்சி அமைக்க தமிழகத்தில் ஒரு புதிய இயக்கம் தயார். இளைய சமுதாயம் இந்த எமது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டால்

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே

அட நான் விஜய் இரசிகன் இல்லவே இல்லை.

இந்த நாளில் பாராளுமன்ற நிலை எவ்வாறிருக்கும் என இதோ இந்தப் பதிவின் போதுவரை நான் ஊடகங்களை நாடவில்லை.

ஆனால் வரலாறு படைக்கப்போகும் அந்த நாள்தான் பாராளுமன்ற வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படும் ஒரு நன்னாளாகத் திகழும்

இந்த மகத்தான மாற்றம் தமிழகத்திலிருந்து துவங்கினால் அதுதான் தமிழினத்தின் மாமன்னன் இராசஇராசன் கடல் கடந்து தனது எல்லையை விரிக்கப் புறப்பட்ட நன்னாளுக்கு இணையானதாக வரலாறு பதிவு செய்யும்.

மாற்றத்திற்கு தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான இளைய சமுதாயம் தயாரா? தயார் என்றால்

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே!!!!!!!!!!!!!!
உங்கள் தெகுரா!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!