குமாரு வா உக்காரு சாப்பிடு யசோதை அன்னை த.காந்திமதி


என் தாத்தா கடையில் நான் இருக்கும்போது கிழக்கிலிருந்து வரும் இரு சக்கர வாகனம் ஒன்றிற்காக ஏங்கி நிற்பது உண்டு. அதன் பெயர் ஃபண்டாபிளஸ். ஸ்கூட்டர் வகையைச் சேர்ந்தது. அதனை தாய் மாமா தங்கவேலு அவர்கள் ஓட்டி வர முன்னும் பின்னும் நின்றபடியும் அமர்ந்தும் வருவது காந்தி அத்தையும் அவரின் மூத்த மகன் மோகன் மற்றும் பூங்கொடி இருவரும்.

வாகனம் வந்தவுடன் அவர்களை இறக்கிவிட்டுப் பின்னர் என்னையோ சில சமயங்களில் அங்கிருக்கும் எங்கள் சகோதரிகளையோ ஏற்றிக் கொண்டு சிறிது தூரம் ஓட்டிச் சென்று திரும்பி வந்து கடையில் இறக்கி விடுவார் என் தாய் மாமா தங்கவேலு அவர்கள்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இப்படித்தான் அறிமுகமானவர் காந்தி அத்தை அவர்கள். அப்போது காக்கா பாளையத்தில் ஆட்டையாம்பட்டிப் பிரிவில் ஒரு கடையும் வீடும் அமைந்திருந்த இடத்தில் தங்கித் தாத்தாவிடம் கற்ற தொழில்களையே செய்து  வந்தார் எங்கள் தங்கவேல் மாமா. இளமையில் சில நாட்கள் அங்கு சென்று தங்கியிருந்த அனுபவமும் எனக்கும் என் சகோதரிகளுக்கும் உண்டு.

ஒரு முறை எங்கள் தாத்தாவுடன் சண்டையிட்டுத் தன் தம்பி வசமிருந்த கடையைப் பிரித்துத் தனது பங்கெனக் கேட்டு வாங்கி இங்கேயே தங்கவேல் மாமா குடும்பம் வந்துவிட எங்கள் தாத்தா அவருடன் கோபித்துக் கொண்டு தனது தோட்டத்திலேயே தான் இறக்கும் வரை தங்கிக் கொண்டார்.

தாத்தாவின் மறைவிற்குப் பின்னரும் தங்கவேல் மாமா நடத்திய நிறுவனத்திலேயே என் பள்ளிப் படிப்பு முடித்த எனது 17 வயது வரை இரை தேடிச்  சென்ற  பறவை தன்  கூடு திரும்பி அடையும் இடமென நான் மகுடஞ்சாவடியை விட்டு நாடோடியாகப் புறப்படும் வரை இங்கேதான் அடைந்து கிடப்பேன். 

இன்று ஈரோட்டில் வசிக்கும் எனக்குக் காந்தி அத்தையுடனான உறவு இதோ இந்தப் பதிவை நான் எழுதத் துவங்கிய இந்த நொடி மட்டுமல்ல என் உயிர் இந்த உடலை விட்டு விண்ணில் கலந்து பின்னர் மறுபிறப்பெடுத்து மீண்டும் இதே தமிழ் மண்ணில்தாம் என்றும் தொடரும்.

23.05.2021 அன்று இரவு 9 மணியளவில் குமாரி அக்கா எனக்குத் தொலைபேசியில் அழைத்து காந்தி அத்தை தவறிவிட்டார் என்று சொன்னபோதுகூட  எனக்குள் எவ்வித உணர்ச்சிகளும் வெளிப்படவில்லைதான். 

அதன் பின்னர் நான் எனது சின்னம்மா மகன் சுந்தரைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோதுதான் அவர் கொரானா நோயின் அச்சத்தில் சிக்கித் தன் உடலை விட்டு விண்ணில் கலந்த விபரம் கேட்டறிந்தேன். அவரது  இளைய மகன் கோபியும் இதே  நோய்த் தாக்கத்தில் இருந்ததாலும் இரவு நேரம் என்பதால் அடுத்த நாள் காலைதான் அவரின் மூத்த மகன் மோகனை நான் கைபேசியில் தொடர்பு கொள்ள அவர் வெளியே சென்றுவிட்டதாகச் சொல்லிய அவரது மனைவி சாந்தியிடம்தான் நான் துக்கம் விசாரிக்க முடிந்தது. 

எனது தாய் மாமா நடேசன் அவர்களின் துணைவியார் திலகம் அத்தை தன் இன்னுயிர் நீத்தபோது அவரின் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ள இயலாதவாறு என் தம்பி மகளின் திருமணம் சார்ந்த கிராமத்து மூடத்தனமான பார்ப்பன நடைமுறைகள் தடையாக இருந்தன. 

காந்தி அத்தைக்கோ கொரானா நோய்ப் பரவல் காரணமாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட எங்கள் நிலைக்கு இந்தப் பிரதமர் கோயில் கட்டியும் தன் கடவுள் தன்மையைக் காட்ட மறந்த ராம ராஜ்ஜியத் துக்ளக் அரசுச் சட்ட அராஜக  நடைமுறைகள் தடையாக இருந்து தொலைந்தன.

என் தாத்தா வீட்டில் இருக்கும்போதெல்லாம் என் பசியாற்றிய பாட்டி சித்தாயம்மாளுக்குப் பிறகு அங்கு நான் செல்லும்போதெல்லாம் பசியாற்றிய யசோதை அன்னை என் காந்தி அத்தை அவர்கள். என் இளமை துவங்கிப் பரமத்தி வேலூருக்கு எங்கள் குடும்பம் குடியேறி என் திருமணம் வரை நான் மகுடம் சாவடி வந்தால் தங்குமிடமும் அத்தை  வீடுதாம். 

எந்த நேரம் வந்தாலும் எனக்கு உணவளித்தும் தேநீர்  தின்பண்டங்கள் வழங்கி அல்லது நான் வேண்டாமென மறுத்தாலும் கடையில் வேலை செய்பவர்களை விரட்டிக் குளிர்பானம் வரவழைத்துப் பரிவு காட்டியவர் காந்தி அத்தை அவர்கள்.

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய் நன்றி கொன்ற மகற்கு

இது வள்ளுவம் வாக்கு. எனது அன்பைத் தேடும் படலத்தில் காந்தி அத்தை அவர்களைப் பற்றிய பதிவை எழுதாவிட்டால் நானும் செய்நன்றி கொன்றவனாவேன்.

காந்தி அத்தையுடனான உறவு அவருடன் மட்டுமே நீண்டதில்லை. அவரின் தந்தையார் பாசத்திற்குரிய திரு.பாலகிருஸ்ணன் என் மீது தாயன்பு  செழுத்திய அவரின் தாயார் மட்டுமின்றி எனக்கும்  யசோதைத் தாயாக விளங்கிய அன்னை அவர்கள் என் மீது இன்றும் பாசமும் பரிவும் காட்டும் தங்கை திருமதி சூரியா அத்தையோடு  என் மீது அளவற்ற பாசம் காட்டிய அவரது கணவர்  அவர்கள் தம்பிகள் சண்முகம் புகழேந்தி உதயகுமார் பாஸ்கர் என அனைவருடனும் கொண்டிருந்த எனது பாசப் பிணைப்பு 

இன்று நான் மகுடஞ்சாவடியில் வாழ இயலாவிட்டாலும் மாரியம்மன் திருவிழா திருமணம் உறவுகளின் துக்க நிகழ்வுகள் என அவ்வப்போது சந்திக்க நேர்ந்து உரையாடக்கூட நேரமின்றி வணிகம் மற்றும் வேலை வாழ்வு தந்த அவசரம் காரணமாக ஊர் திரும்ப வேண்டி வந்தாலும் அதன் பின்னரும் எனது எண்ணங்கள்  அவர்களுடன் நான் வாழ்ந்த பழகிய நாட்களை என்றுமே மறக்க இயலாமல் மனதில் அசை போடும்.

காந்தி அத்தையின் தம்பி பாஸ்கரும் நானும் ஒரே வயது மட்டுமன்றி அவர் எனது பள்ளித்தோழனும் என்பதால் நான் அடிக்கடி அமரர் பாலகிருஸ்ணன் அவர்கள் வீட்டிற்கும் சென்று விளையாடுவதும் நண்பர்களுடன் சேர்ந்து படிப்பதும் என எனது பள்ளிப்படிப்பு முடியும் வரை தொடர்ந்தது. 

ஒட்டு மொத்தக் குடும்பமும் என் மீது காட்டிய அன்பும் பரிவும் வலுக்கட்டாயமாக அமர்த்தி அங்கும் எத்தனையோ நாட்கள் பசியாறியதும் இதோ இந்த நிமிடம் வரை என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளன.

அதன் பின்னரும் அத்தையின் தந்தை குடும்பத்துடனான உறவு தொடராமலில்லை. சூரியா அத்தை சேலத்தில் குடியிருந்தபோது நான் சில முறை அங்கு சென்றிருக்கிறேன். ஒரு முறை நான் கரூரில் ஆட்டோமொபைல்ஸ் நடத்தியபோது அவர்கள் வீட்டில் தங்கியிருந்து அடுத்தநாள் எனக்குத் தேவைப்பட்ட ஆர்ட் புத்தகத்தை சேலம் நான்கு ரோட்டில் அமைந்திருந்த ஒரு வணிக வளாகத்தில் தேடி வாங்கிக் கொடுத்து வழியனுப்பியது அவரது புதல்வி விட்டோபாயின் திருமணத்தில் கலந்து கொண்டதும் இன்றுவரை என்னுள் பசுமை நிறைந்த நினைவுகள்தாம்.

இந்தத் காரணங்கள் மட்டுமே ஒருவனுக்குப் பாசம் சார்ந்த உறவுகளா என்ற கேள்விக்கு என்னால் விடை சொல்ல இயலாது. அது அவரவர் உணர்வு சார்ந்தவை. அதை அனுபவித்து உணர்ந்தவர்களுக்குத்தான் அது புரியும்.

இந்த நன்றி உணர்வு காரணமாகவே எங்கள் குடும்பம் பரமத்தி வேலூரில் குடியேறிய பின்னரும் அத்தையின் மூத்த மகன் மோகனை நெய்வேலி அழைத்துச் சென்று என் பாசத்திற்குரிய மல்லிகா அத்தை மற்றும் நெய்வேலி மாமா அவர்களின் இல்லத்தில் தங்க வைத்து அங்கே ஒரு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்ட அவர்களும் சம்மதித்து அங்கே ஒரு காண்ட்ராக்ட் நிறுவனத்தில் வேலை வாங்கித்தந்து பின்னர் தங்குவதற்கு இடம் ஏற்படுத்திக் கொடுத்தும் பாதுகாத்து என்னை நெகிழச் செய்தனர்.

அடுத்து அத்தையின் இளைய மகன் கோபியின் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் பரமத்தி வேலூருக்கு அழைத்து வந்து எங்கள் இல்லத்தில் தங்க வைத்து தொழில் கற்றுத் தந்து ஒரு கட்டத்தில் நான் ஊருக்குத் திரும்பி இதே தொழிலை தந்தையுடன் சேர்ந்து செய்வதாக முடிவெடுத்தபோதும் எங்கள் குடும்பத்தோடு நானும் மன நிறைவுடனே வாழ்த்தி வழியனுப்பி வைத்தேன்.

இளம் வயதில் அத்தை அவர்களுடன் மட்டுமன்றி அவர்கள் தாய் தந்தை தங்கை தம்பிகளுடனான உறவும் அவர்களுடன் வாழ்ந்த நினைவுகளையும் எழுதுவதற்கே ஏராளமான பக்கங்கள் நான் செலவிட்டாக வேண்டும். இருப்பினும் என் நினைவை விட்டு நீங்காத சில நினைவுகளையாவது பகிர்ந்தாக வேண்டும்.

ஒரு முறை கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோவிலில் வேலை காரணமாகத் தங்கியிருந்த என் தாய்மாமா உயர்திரு சண்முகம் அவர்கள் வீட்டிற்குச் சென்று அப்பொழுதுதாம் புதிதாக அறிமுகமாகியிருந்த டேப் ரெக்கார்டரை வாங்கி வரும்வரை மூன்று நாட்கள் அத்தை வீட்டிலேயே தங்கி அவர்களின் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டேன். 

கடை நிர்வாகம் முழுக்க நான்தான் கவனித்தேன். பிள்ளைகள் மூவரும் எப்பொழுது தங்கள் பெற்றோர் வருவார்கள் என மணிக்கொருதடவை என்னைக் கேள்வி கேட்டுத் துளைப்பார்கள்.  அவர்கள் திரும்பி வந்து மாமாவின் அனுமதியுடன் அந்த டேப் ரெக்கார்டரை ஆம்ளிபயரில் இணைத்து ஒலிநாடாவில் பதிந்திருந்த புதிய மற்றும் பழைய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தது இன்று வரை காதில் ரீங்காரமிடும்  நினைவு.

உறவுகள் அரசியல் சார்ந்த விவாதங்களை என் தாய் மாமாவுடனும் அத்தையுடனும் அடிக்கடி நடத்தி உலக அனுபவம் பெற்றது ஊரில் இருந்தவரை நான் கர்மவீரர் பக்கம். அதன் பின்னர் வணிக வாழ்வு காரணமாக இன்றைய ஊழல் திமுக பக்கம். அவர்கள் இருவரும் மக்கள் திலகம் பக்கம். நான் அன்றைய அரசியல் நிலவரத்திற்கே என் தாய் மாமாவுடன் அடிக்கடி வாதம் புரிவேன் என்றாலும் அத்தை இதில் தலையிடமாட்டார்.

சில நேரங்களில் என் தாய் மாமா அவர்கள் எரிச்சலுற்ற நிலையில் இருக்கும்போது அவர் சண்டையிட்டாலும் நானும் அத்தையும் எங்களுக்குப் பிடித்த பாடல்களை ஒலி பெருக்கியில் சத்தமாக வைத்துக் கேட்பதுண்டு. எங்களுடன் குழந்தைகள் போல மாறித் தாயம் போன்ற விளையாட்டுகளையும் அத்தை விளையாடியதுண்டு. 

எனக்கு நினைவு தெரிந்த ஒரு நாளில் தங்கவேல் மாமா வாங்கி வந்த தாழம்பூ திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த 

தாழம்பூவின் நறுமணத்தில் நல்லத் தரமிருக்கும் மணமிருக்கும் 

அது தாமதித்தாலும் நிரந்தரமாக 

மணம் கொடுக்கும் என்றும் மணம் கொடுக்கும் 

என்ற பாடலை என் கைபேசியில் இன்றும் பதிவு செய்து கேட்டு வாழும் நீங்கா நினைவாக 

அந்தப் பாடல் பதிந்திருந்த அரக்கு இசைத் தட்டை அன்றைய சாவி கொடுக்கும் ஒலிப்பானில் ஒலிக்க விட்டு அத்தை உட்பட அங்குப் பணிபுரிந்த உறவுகளுடன் உறவாகக் கேட்டு இரசித்த சிறுவனான என் காதுகளில் அந்த நாள் துவங்கி; இந்த வினாடி மட்டுமல்ல இனி என் வாழ்நாள் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கப் போகும்தாம். 

தாழம்பூவின் நறுமணமாக அத்தையுடனான என் இளமைக்கால நினைவுகளும் இன்றுடன் முடிந்துவிடாது. தாழம்பூவின் மடல் ஒன்றினைப் புத்தகத்தின் இடையில் வைத்து அது என்றேனும் காணாமல் போனாலும் அதில் வெகு நாட்களுக்குத் தொடர்ந்து மணம் வீசுவதைப் போல என்றென்றும் மணந்து மணம் வீசும். 

மண்ணில் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் உடல் ஐம்பூதங்களில் கலந்து மறைந்தாலும்

மனிதரின் உயிரும் எண்ணங்களும் பிறவிதோரும் தொடரும். அது எத்தனை யுகங்கள் ஆனாலும் 

தொடரும் தொடரும் தொடரும்.

உயிர்களும் பயிர்களும் அழிவற்றவை.

அதைத் தாங்கும் உலகமும் என்றும் அழிவற்றதே 

தமிழ் பேசும் நல்லுலகில் பிறப்பெடுக்க வைத்து காந்தி எனும் யசோதைத் தாயை எனக்கு அறிமுகம் செய்து வைத்த இறை சக்திக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வரலாறு உண்டு. என் வரலாற்றுப் புத்தகத்தில் காந்தி அத்தைக்கும் சில பக்கங்களே ஒதுக்க முடிந்தது. காரணம் என்னுள் வார்த்தைகளில் வெளிப்படுத்த இயலாத துக்கம் நிறைந்து நினைவுகள் அதில் புதைந்து போன காரணத்தால்தாம்.

24.05.2021 மதியம் தாம் அவர் பற்றிய நினைவுகள் என்னுள் ஊஞ்சலாட மனம் கனத்தது. கண்களில் கண்ணீர் பெருகியது. இந்தப் பதிவை அடுத்த இரண்டு நாட்களும் நள்ளிரவு 1.30 மணிக்கெல்லாம் தினமும் எழுந்து காலை வரை கணிணியில் தட்டச்சு செய்து  பதிந்தேன். 

என் அத்தைக்குத் தெரியும் நான் அவரின் இறுதி யாத்திரையில் ஏன் கலந்து கொள்ள இயலவில்லை என.

கொரானா குறித்த எங்கள் குடும்பம் மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்திவிட்டு எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் எனக் கொள்ளையடிக்கும் மதவாதத்தையும் ஊழல் அரசியல்வாதத்தையும் ஏட்டளவில்தாம் எதிர்க்க இயல்கிறதே தவிர அந்தச் சட்டத்தை உடைத்தெரிகின்ற ஆற்றல்களைப் பெறத் தமிழக மக்கள் இன்னும் எத்தனை நாட்கள் பொறுத்திருக்க வேண்டி வருமோ. 

அதுவரை காந்தி அத்தை போன்ற ஏராளமான உணர்வுகள் சார்ந்த உறவுகளின் பிரிவை வெறும் ஜடப் பொருளான கைபேசி மற்றும் வலை தளம் வாயிலாக மட்டுமே எழுதிப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதுதாம் மதவாதம் வகுத்த  சார்வரி ஆண்டுக் கலிகாலம் நமக்குக் கற்றுத் தந்துள்ள படிப்பினை பாடம்

பெயருக்குத்தான் அவர் எனக்குக் காந்தி அத்தை. நான் அவருடன் வாழ்ந்த நாட்கள் முழுவதும் அவரின் மூத்த மகனாகத்தான் வாழ்ந்திருந்தேன். அந்த நினைவுகள் ஒன்றே எனக்குப் போதுமானது.

இன்றைய பணம் சார்ந்த வாழ்க்கை முறைக்குத் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு தரம் தாழ்ந்து கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தைப் போல மகுடம் சாவடி மண்ணை விட்டு நான் நாடோடி வாழ்க்கை துவங்கிய அன்றைய நிலை இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. 

எங்கள் தந்தைக்கும் பெரிய தகப்பனாருக்கும் ஏற்பட்ட பிரிவினையால் நன்றாக வாழ்ந்த எங்கள் குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டபோது தாம் வசதியாக வாழ்கிறோம் இப்பொழுது இவர்கள் தன்னை விட வசதியில் தாழ்ந்துவிட்டார்கள் என்று எண்ணாமல் என்னிடமும் எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அரவணைத்து அத்தை காட்டிய பரிவும் பாசமும் இன்றுவரை நான் மறவேன்.

நாங்கள் எங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு நாமக்கல் புறப்பட்டபோது கலங்கி நின்ற உறவுகளில் காந்தி அத்தையும் ஒருவர். நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் என எங்கள் நாடோடி வாழ்க்கை திசை மாறி நான் ஊர் திரும்பும்போதெல்லாம் எங்களை விட்டுப் பிரிந்த சோகத்தை அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டதையும் நான் மறவேன். 

அத்தையின் தந்தை இராணுவத்தில் பணியாற்றிய தேச பக்தி மிகுந்தவரென்பதால்தான் காந்தி எனத் தன் மூத்த மகளுக்குப் பெயரிட்டுப் பாசமுடன் வளர்த்திருந்தார். அத்தையின் குடும்பம் அவர் மீது காட்டிய அளவற்ற அன்பை நான் நன்கறிவேன். 

மனிதர்கள் அனைவரும் மகாத்மா காந்தி போல வாழ்ந்திட முடியுமா அவரே இமாலயத் தவறு செய்தவர் அல்லவா. ராம ராஜ்ஜியம் ராம் ராம் எனத் தன் வாழ்நாள் முழுக்க எழுதி மக்களை மூளைச் சலவை செய்து அதனுடனே வளர்ந்த மதவாதத்தால் அன்றோ தன் இன்னுயிர் தொலைத்தபோது காப்பாற்றித் தொலையாத தன் கடவுளை நொந்தவாறுதாம் ஹே ராம் உன் மதவாத ராஜ்ஜியத்தின் நிலை இனி இப்படித்தான் வன்முறையில் நாட்டைச் சீரழிக்கப் போகும் என்ற தவிதவிப்புடனுமே உயிர் துறந்தார்.

காந்தி அத்தைக்கும் ஒரு மோசமான குணம் இருந்தது. தன் மாமியார் சித்தாயம்மாள் தனது கணவரை இழந்த துக்கத்திலும் சோகத்திலும் இருப்பாரே என்ற நினைவுகூட இன்றிச் சுமங்கலியான என்னை அமங்கலியான என்  மாமியார் பார்க்கும்போதெல்லாம் எனக்கு நேரம் சரியில்லாமல் போகிறது நான் தொட்ட காரியம் விளங்குவதில்லை அவர் விடோ என அடிக்கடி எனக்கே பலமுறை எரிச்சல் ஏற்படுமளவிற்கு நேரடியாக என் பாட்டியிடமும்  என் தாயார் உட்பட அனைவரிடமும் வெளிப்படுத்தியவாறுதாம் தன் உணர்வுகளும் எண்ணங்களும் தவறானவை என்று  அறியாமலே மதவாதம் வகுத்த தவறான வாழ்க்கை முறையில் வாழ்ந்திருந்தார்.

அதனால்தானோ என்னவோ தன் வினை தன்னைச்  சுடும் என்ற சித்தர் வாக்கு மெய்ப்பட என் தாய் மாமாவுடன் நீண்டகாலம் தன்னுடன் வாழ இயலாமல் பறிகொடுத்துத் தானும் அதே நிலைக்குத் தள்ளப்படும் அவல நிலை அடைந்தார். 

என் தாய் மாமா அவர்களின் மரணத்தில் எனக்கு இந்த நிமிடம் வரை உள்ள சந்தேகத்தைப் போலவே என் தாய் மாமா தன் இறுதிக் காலம் வரை நேசித்த அமரர் எம்ஜியார் துவக்கி பின்னர் கைமாறிய அதிமுகவின் தலைவி ஜெ அம்மையாரின் மரணமும் சந்தேகத்திற்கு இடமாகிப் போனதுதாம் விந்தையிலும் விந்தை. 

தனது கணவரின் இறப்புக்குக் காரணமான ஊழல் சக்திகள் கொடுத்த நிவாரணத் தொகையை அத்தை தனது குடும்பத்துடன் சென்று ஜெ அம்மையாரிடம் வாங்கியது கேட்டு நான் ஒருவன் மட்டுமே அப்பொழுதும் வருந்தினேன். 

ஒரு குடம் பாலைக் கெடுக்கச் சேர்த்த ஒரு துளி நஞ்சென இதைக்  கருதாமல் ஒரு குடம் பாலில் சிறிதளவு தண்ணீரைக் கலப்பதே தவறென்ற கோணத்தில் எழுதப்பட்ட எனது மன நிலையைப் புரிந்து கொள்ளாமல் அத்தையின் உறவு சார்ந்தவர்களின் மணம் ஏதேனும் புண்பட்டால் அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். 

எனினும் அத்தையிடம் இருந்த இந்த ஒரு குறையினை நான் எழுதியதே மிக நீண்ட  பதிவெனச் சலிப்புற்றுத் தவிர்க்கும் இளைய தலைமுறை சார்ந்தவர்கள் என்றேனும் இதைப் படிக்க நேரிடும்

நம் தமிழகத்தில் வாழும் அத்தனை பெண்களும் தங்களை சாத்திரம் சம்பிரதாயம் சடங்கு பரிகாரம் தெய்வம் அதற்கு ஏராளமான நகைகள் பில்லி சூனியம் சோதிடம் ராகு கேது பாவம் புண்ணியம் பணம் கடன் பட்டாவது ஆடம்பர வீடு அந்தஸ்து பகட்டான கார் வரதட்சிணை உள்ளிட்ட 

ஏராளமான தங்கள் உழைப்பைச் சுரண்டிப் பிழைப்பதோடு மட்டுமின்றி நாட்டை மதவாத மோதல்களில் சீரழித்து அண்டை நாடுகளின் உறவுகளை மோசமாக்கி யுத்த மேகங்கள் பரவச் செய்து இன்று கொரானா நோய் பரப்பி அச்சத்தில் மக்களை வீட்டுச் சிறையில் அடைபட வைத்த மோசமான மதவாதச் சாக்கடையிலிருந்து மீள வேண்டுமென்ற அறம் சார்ந்த உணர்வுகள் காரணமாகத்தாம்.

எந்த நேரமும் பக்தி பூசை எனத் தன் வாழ்நாள் முழுவதும் மதவாதம் வகுத்த பாதையில் பயணித்த காந்தி அத்தையின் இறுதி யாத்திரையின்போது உறவுகள் எவருமின்றிப் போனதும் இதோ இந்தப் பதிவை முடிக்கும்போது மதவாதக் குஜராத்திலிருந்து மதவாத இலங்கைக்குச் சென்ற உலகை அச்சுறுத்தும்  இராசாயனங்கள் நிறைந்த கப்பல் வெடித்துச் சிதறும் காட்சியும்

டெல்லி மருத்துவமனை கொரானாவால் இறந்த உடலில் நோய்க் கிருமிகள் அறவே இல்லை என்ற ஓராண்டு ஆய்வுத் தகவல்களும் வந்ததைக் கண்ணுற்றபோது 

மதவாதம் மக்களை எந்த அளவிற்குச் சீரழித்து  உறவுகள் பிரித்தாண்டு விளையாடியிருக்கிறது என்பதை என் உள்ளுணர்வில் கலந்த தமிழன்னையின் புதல்வன் உலகின் ஒப்பற்ற ஒரே கடவுள் கல்லும் மணணும் கடலும் காற்றும் தீயும் விண்ணும் என நிறைந்திருக்கும் கந்தக் கடவுள் பெயரில் 

கந்தசாமி என்ற  ஒரு ஆலமரத்தின் விதையாக நானிருக்க அந்த ஆலமரத்தில் தங்க வந்த பறவையாக என் காந்தி அத்தை திகழ மதவாதம் இந்த ஆலமரத்தை வெட்டிச் சாய்த்து விச மரங்களை நாடு முழுவதும் நட்டுத் தொலைவதை இனியும்  நம் தமிழகம் வாழ் பெண்கள் தண்ணீர் ஊற்றியும் கண்ணீர் சிந்தியும் வளர்த்து வாழ வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில்தாம். 

கன்மோ த்தைஅ ராங்கவ 

என எனக்குப் புரியாத சங்கேத மொழியில் பாசமிகு சூரியா அத்தை அவர்கள் உருவாக்கித் தந்த புது மொழியில் காந்தி அத்தை தன் பிள்ளைகளுடன் உரையாடுவார். தங்கவேலு மாமாவுக்கே இந்தப் புது மொழி புரியாது. ஒரு நாள் என்னிடம் மட்டும் அத்தை இந்த மொழி பற்றிய இரகசியத்தைப் போட்டு உடைத்துவிட்டார்.

தமிழ் வார்த்தையின் முன் எழுத்து ஒன்றை நீக்கி அதை அந்த வார்த்தையின் பின்னால் இணைத்துப் பேசப்பட்ட சங்கேத பரிவர்த்தனை அந்த மொழியின் முழு வடிவம் இதுதாம்

மோகன் அத்தை வராங்க. 

இந்த இரகசியத்தை நான் தெரிந்து கொண்டதால் அப்பாவியான தன் கணவர் இருக்கும்போது சங்கேதமாகப் பேசும் அத்தை நான் அங்கிருக்கும்போது மட்டும் சங்கேத  மொழியில் பேசுவதைத் தவிர்த்து விடுவார்.

இறுதியாக நான் அவரைச் சந்தித்தபோது தலைப்பில் நான் எழுதியுள்ள அதே  பழைய பாசத்துடன் என்னைக் கண்டபோது தன் இல்லத்து  வாசலில் நின்று அழைத்தபோது நான் அவசரம் காரணமாக ஊர் திரும்பி அவரின் பழைய பாசத்தைத் தவற விட்டதுதாம் இப்போது என்னுள் ஏதோ ஒரு புதையலை இழந்துவிட்டதான பரிதவிப்பு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!