பொது உடமைத் தொண்டுகள் செய்ய பங்கு வையடா! தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா!

பொது உடமைத் தொண்டுகள் செய்ய பங்கு வையடா!
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா!

பொது நலத் தொண்டர்கள் என நாம் இனி குறிப்பிட வேண்டியது அரசியல் மற்றும் அரசு நிர்வாகம் சார்ந்த அரசு அலுவலர்களைத்தான்!

இவர்கள் இருவரையும் பொது பொது நலத் தொண்டர்கள் எனக் குறிப்பிடுவதன் காரணமே இன்றைய வாதம் பிடித்த அரசியலை மனதில் கொண்டுதான்!

உடம்பிற்கு வருகின்ற வாதத்தை நமது பாரம்பரிய வர்மக்கலை வாயிலாகவோ அல்லது பாரம்பரிய மருத்துவ முறை மூலமோ சரி செய்து விட முடியும்!

ஆனால் நமது தமிழகத்தை நோயெனப் பீடித்துள்ள அரசியல்வாதத்தைச் சரிசெய்வதென்பது முடியாததென்பதால்  அந்தப் பெயரையே முடக்கிவிட்டுப் புதிய பெயர் சூட்டுவதென நாம் முடிவு செய்ய வேண்டிய காலம் இது!

இவர்களுக்கு தலைப்பிற்குரிய பெயர் பொருத்தமானதெனவே யாம்  கருதுகிறோம்! இதைவிடச் சிறந்த பெயரிருந்தால் அதை நீங்களே சூட்டி விடுங்கள்!

எங்கள் மகளை ஒரு மாவட்ட ஆட்சியராக உருவாக்க வேண்டுமென்ற கனவுடன்தான் அவளுக்கு ஆண் குழந்தைக்கு உரிய பெயரினை இட்டு அழைக்கத் துவங்கினோம்!

இன்று அவள் வளர்ந்து பெரியவளான நிலையில் எங்களது கனவை நனவாக்க அவளைத் தயார்ப்படுத்த நாங்கள் முனைந்தபோது எங்கள் குடும்பத்தைச் சார்ந்த மற்ற உறுப்பினர்கள் தடுக்க முயன்றனர்!

அதற்கு அவர்கள் கூறும் காரணம், தினசரி நமது இன்றைய அரசியல்வாதிகளின் அராஜக செயல்பாடுகளையும், அவர்களின் தவறுகளுக்கு உடன்படாத நேர்மைமிகு மாவட்ட ஆட்சியர்களை அவர்கள் பந்தாடும் காட்சிகளை ஊடகங்கள் வாயிலாகக் காண்பதை  மனதில் கொண்டுதான்;!

ஊழல் அரசியல்வாதிகளுக்கு பயந்து தான் விரும்பிய படிப்பினைப் படிப்பதற்குக்கூட இன்றைய இளைய தலைமுறையினர் அச்சப்படும் நிலையை உருவாக்கியவர்கள்தாம் இனித் தங்கள் எதிர்காலம் குறித்து அச்சப்பட வேண்டிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்!

இதற்கென யுத்தங்கள் எதுவும் நமக்கு இனித் தேவையுமில்லை! இருக்கவே இருக்கிறது நம்முடைய வாக்கு வங்கி எனும் ஆயுதம்!

இதை சற்று வலுவாக நாம் வருகின்ற தேர்தல்களில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தி ஊழலை அடியோடு ஒழிப்பதற்கு சபதம் ஏற்க வேண்டும்!

தம் கடந்த கால வாழ்க்தை தமிழகத்திற்கே ஒரு அவமானமான நினைவுச்சின்னமென நம் ஊழல் அரசியல்வாதிகள் சற்று நிதானமாக ஓய்வெடுத்து சிந்திக்க அவகாசம் தேவை! எனவே தற்போதைய ஊழல் சார்ந்த கடின உழைப்பிலிருந்து அவர்களை நாம் சற்று விடுவித்து விடுவோம்.

புதிதாக உருவாகும் இளைய தலைமுறையினர் தாங்களாகவே முன்வந்து உருவாக்கி அவர்களே பங்கேற்கும் அரசியலும், தமிழக நலன் சார்ந்த நிர்வாக இயலும், இனித் தூய்மையான பொது நலத் தொண்டர்களால் வழி நடத்தக்கூடிய புதிய சூழல்கள் உருவாக்கப்பட வேண்டும்!

இந்தப் பொது பொது நலத் தொண்டர்களுக்கு  உரிய உச்சபட்ச தகுதிகள் என்னென்ன என்பதை நம் வருங்கால மாணவ சமுதாயமே பட்டியலிட்டு உருவாக்க வேண்டுமென்பதுதான் எமது உயர் இலட்சியமும், ஏக்கமுள்ள தமிழ்க்கனவும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!