திருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!
ஆறிலும் சாவு! நூறிலும் சாவு! தாயகம் காப்பது கடமையடா!

வடவர்களின் மதவெறிப் பயிற்சிப் பட்டறையில் பயிழும் சில நண்பர்களுடன்  நான் அவ்வப்போது உரையாடுவது வழக்கம். அவர்களிடம், தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னதாம் புதியதாக   அறிமுகப்படுத்தப்பட்ட பிள்ளையார் ஊர்வலங்களால் வருடம்தோறும் ஏற்பட்டு வரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும், இதனால் தூண்டப்படும் மதவெறியால் ஆங்காங்கே வன்முறைகள் நிகழும் வாய்ப்புகளும், மேலும் இதனால் அரசிற்கு வீண் செலவினங்களும் தற்போது புதியதாக உங்களின் மதவாத அமைப்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பிள்ளையார் ஊர்வலங்கள் நடைபெறும் காலங்களில் பதட்டம் நிறைந்த அப்பகுதிகளுக்குச் செல்லக்கூட அச்சமாக உள்ளதே இது தேவையா என வினவுவேன்.

அதற்கு அந்த மதவாதத் தீவிர நண்பர்கள் ஒரே விதமாகக் கூறுவது என்ன தெரியுமா? நீங்கள் ஏன் அப்பகுதிகளுக்குச் செல்லவேண்டும்? வீட்டிலேயே கோழையாக இருந்து விடுங்கள்! என்ற பதில்தான்!

தமிழில் ஒரு பழங்கதையில் தமிழ்ப் பெண்களின் வீரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் புலியை முறத்தால் அடித்து விரட்டியவள் தமிழச்சி எனப்; போற்றப்பட்டிருக்கும்! இதுகூட வடவர்களின் ஆதிக்கத் தமிழகத்தில் அவர்தம் கற்பை பாதுகாத்துக்கொள்ள எழுச்சியூட்டி மிகைப்படுத்திக் கூறப்பட்ட கற்பனையே என்பேன்!

இவ்வாறு நான் எழுதுவதற்கு வலுவான காரணம் தமிழர்தம் வரலாற்றுப் பின்னணிதாம் என்பேன்.

யானை கட்டிப் போரடித்து வளமுற்ற தமிழகத்தில் தற்போதுள்ள கொடிய தன்மையுடைய வன விலங்குகள் இப்போதுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வனங்கள் போன்ற சூழலில் வாழ்ந்ததில்லை.

இயற்கையும் மனிதரும் ஒன்றி வாழ்ந்த ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட தமிழினக் காலம் நான் குறிப்பிடுவது! இன்றுள்ளது போல இயற்கை வளங்கள் அழிக்கப்படாத தமிழ் நிலப்பகுதி அக்காலத்தில் முற்றிலும் வனங்கள் சூழ்ந்ததாகத் திகழ்ந்தது! அக்கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நெறி முழுவதும் அன்பு வழியே!

அத்தகு காலத்தில் இன்று கொடிய விலங்குகளாகக் கருதப்படும் வன விலங்குகள் தமிழர்களின் செல்லப் பிராணிகளாக வாழ்ந்திருக்க வேண்டும்!

அது போன்ற ஒரு சூழலில்தான் தனது வீட்டு வேலைகளைச் செய்ய விடாமல் தடை செய்து கொண்டு தன்னைச் சுற்றிச் சுற்றி வந்து இடையூறு கொடுத்த தனது செல்லப் பிராணியான புலியைத் தன் கையில் இருந்த முறத்தால் செல்லமாக விரட்டியிருப்பாள் நமது தமிழச்சி!

இந்நிகழ்ச்சியை மனதில் கொண்டுதான் பின்னாளில் தமிழக மகளிர் வஞ்சகர்களால் தமக்கு நேரிடும் வன் செயல்களிலிருந்து தம்மைத் தடுத்தாட்கொண்டு போராடத்தக்க வீரம் பெற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கதை புனையப்பட்டு அவர்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும்!

மனித குலத்தால் இயலாதது எதுவுமில்லை எனும் காலமிது! இன்றும் மனிதர்களோடு இராச நாகங்கள் வசிக்கும் வீடுகளையும், புலிகளோடு வசிக்கும் புத்த துறவிகளையும் பாரதத்திலும் நேபாளத்திலும் இதற்கு சாட்சியாகக் கூறலாம்.

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள் என்பது வள்ளுவம் வாக்கு. இது கொடிய விலங்குகளுக்கும் சேர்த்து எழுதப்பட்ட குறள்தாம்.

வனத்தில் அழிந்து வரும் வனவிலங்குகள் மீண்டும் மனிதருடன் கலந்து வாழும் வழி செய்வோம்! கொடிய விலங்குளையும் சைவ உணவிட்டுப் புலியையும் பூனையாக்குவோம்! நமது வருங்காலச் சந்ததியைச் சேர்ந்த குழந்தைகள் அவற்றின் மீது ஏறி விளையாடிக் களிக்கும் நிலை இங்கு மீண்டும் உருவாகவேண்டும்!

அது சரி வடவர்களின் பிள்ளையார் ஊர்வலக் கதைக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? தமிழரின் வழியே அன்பு வழிதான்! பகைவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே தமிழர்கள் வீரம் நிறைந்தவர்களாகும் நிலைக்கு ஆளாக்கப்பட்டனர்! அதற்குக் காரணம் அந்நாட்களில் தமிழகத்தில் கொட்டிக் கிடந்த செல்வ வளத்தின் செழிப்பைக் கண்ணுற்றுக் களவு செய்ய வந்தவர்களை விரட்டியடிக்கத்தான்!

இன்றைய தமிழகத்தில் சுரண்டுவதற்கு ஒன்றுமில்லையென்றாலும் தமிழினத்தின் உழைப்பைச் சுரண்டுவதற்கெனவே மதவாதிகள் கோவில்களைக் கட்டி வைத்துக் கொண்டு தமிழர்தம் பணத்தை வாரிக் குவிப்பதுமட்டுமன்றி மதச் சண்டைகளில் சிக்க வைத்து தமிழர்களைப் பலியாடாக்குகின்றனர்!

அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் மக்களின் வருமானத்தை தங்கள் வசம் திசை திருப்ப இருமுடி கட்டி எங்களிடம் வாருங்கள் என ஒரு அமைப்பு புதிதாக இரு முடி கட்டும் வழக்கத்தைத் துவக்கியிருப்பதும்,

இதே போன்று சித்ரா பவுர்ணமி விழாவிற்கு வாருங்கள், சிவராத்திரிக்கு வாருங்கள், என என்னென்ன வழியில் மக்களின் உழைப்பைத் தமதாக்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு வழியில் மதவாத இயக்கங்கள் காசு பார்க்கத் துவங்கிவிட்டன.

பாமர மக்கள் தங்களின் துயரம் தீர இது போன்ற இடங்களுக்குத் தங்களின் தகுதியை மீறிச் சென்று உண்டியல்கள் நிரப்பிச் செலவழித்துத் தங்களின் உழைப்பின் பயனை வீண் செய்கின்றனர்.

இதில் இளைய சமுதாயமும் வீழ்ந்து கிடப்பதுதாம் வேதனைக்குரிய செய்தி!

எனவே தமிழக இளைஞர்கள் இது போன்ற மதவாத அமைப்புகளில் இனியும் சேர்ந்து தமிழின அழிவிற்கு துணை போகக்கூடதெனவும் இது போன்ற இயக்கங்களிலிருந்து இளைய சமுதாயம் மீள வேண்டுமென்பதே சித்தர்களின் எண்ணங்ளைத் தாங்கிய எமது பணிவான வேண்டுகோள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!