அங்குசம்!

அங்குசம்!

இந்தத் தலைப்பிற்கு முக்கிய காரணமே நமது இன்றைய வாக்கு வங்கியின் பரிதாப நிலையினை மனதில் கொண்டுதான்! தமிழக மக்கள் தங்களின் தற்போதைய மன நிலையிலிருந்து திருந்தி, மகத்தான மாற்றங்கள் பெற்று உயர் வாழ்வு பெற வேண்டுமென்ற நோக்கில்தான்!

தங்களது வியர்வை சிந்தி உழைத்த உழைப்பில் தாம் அளிக்கும் ஏராள வரிப்பணத்தை முறையாகச் செலவிட்டு, தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கில்தான், தமிழகத்தில் சங்க காலம் தொடங்கி இன்றுள்ளது போன்ற தேர்தல் முறை ஏற்படுத்தப்பட்டது!

மக்களுக்குத் தொண்டாற்றத் தகுதிமிக்க நபர்களைத் தேர்வு செய்யவே குடவோலை முறையில் வாக்களிக்க வைத்து, மக்கள் பிரதிநிதித்துவத் தத்துவத்தை உலகிற்குத் தந்தனர்  சோழர்கள்! மக்களாட்சித் தத்துவம் இந்த முறையில்தான் தழைத்தோங்க வழி காணப்பட்டது நம் தமிழகத்தில்!

இன்றுள்ள மக்களாட்சித் தத்துவம் கேலிக்கூத்தானது என்பதை எவரும் மறுக்க இயலாது! யானை கட்டிப் போரடித்த பெருமைக்குரிய தமிழினம் என்பதுவும், குடவோலை முறையில் நேர்மையுடன் ஆண்ட முன்னோடித் தமிழினம் நாம் என்பது, நமது இன்றைய தலைமுறைக்கு சரியாகச் சென்றடையவில்லை என்றே நான் கருதுகிறேன்!
   
தலைப்பிற்குரிய பொருள் என்னவென்று தமிழ் மக்களுக்கு விளங்காததல்ல! பத்து டன்னுக்கு மேல் எடையுள்ள ஒரு யானையை அடக்கி, அரைக் கிலோ எடையுள்ள ஒரு கருவியை வைத்துக் கொண்டு, ஒரு யானைப் பாகன் காட்டுகின்ற வித்தைக்கு பெருமை சேர்க்கின்ற பெயர் இது!

பாகனின் கையிலுள்ள இந்த மிகச் சிறிய அற்ப கருவியின் முன்பு அத்தனை பலமுள்ள யானை பலவீனமாகி அடங்கி விடுகின்றதென்றால் இந்தக் கருவி அவ்வளவு ஆற்றல் மிக்கதா? எனும் கேள்வியும் இங்கு எழத்தான் செய்கிறது! அங்குசத்திற்குரிய பலமல்ல இது! பாவம்! யானைக்கு உரிய பலவீனம் அது!

யானை சிறு களிராக இருக்கும்போதே அதனைப் பழக்கப்படுத்தி, தமக்கு கட்டுப்பட வைத்து, தன்னால் செய்ய இயலாத ஆற்றல் மிகுந்த செயல்களை செய்வதற்கு, மனித இனம் உருவாக்கிய சிறு ஆயுதம் அங்குசம்!

இக்கருவி கொண்டு இளம் வயதில் அக் களிறின் காதில் குத்தும்போது அதற்கு உண்மையிலேயே வலிக்கும்! இந்த வலியினை தனது வாழ்நாள் முழுவதும் மனதில் கொண்டு, இந்தக் கருவியைக் கண்டு பயந்தே, அது பாகனின் எல்லா கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கத் துவங்கிவிடும்!
   
இதே போன்று சிறு வயதில் யானையை ஒரு இரும்புச் சங்கிலியால் பிணைத்து வைப்பர்! அப்போது தப்புவதற்கு முயற்சித்து யானை தோற்றுவிடும்! வளர்ந்து பல ஆண்டுகளான பின்னரும் தனது சிறு வயது தோல்வியையே மனதில் வைத்திருக்கும்! இப்பொழுது ஒரு சிறு கயிறு கொண்டு தன் கால்கள் பிணைக்கப்பட்டிருந்தாலும், தப்பிக்க முயற்சிக்காது விதியேயென தனது பலத்தை மறந்து பலவீன நிலைக்கு ஆட்பட்டுவிடும்!

நம் அரசியல்வாதிகளின் கையிலுள்ள அங்குசமும் இது போன்ற சங்கிலித்தன ஏமாற்று கயிறும்தான் இன்று மக்களுக்கு வாரி வழங்குவதாக விளம்பரப்படுத்திக்கொண்டு அதிலும் ஊழல் செய்து சுகம் காணும் இலவச திட்டங்கள்!  
   
வாக்காளப் பெருங்குடி மக்களே!
தமிழக வாக்காளர்களையும், நம் அரசியல்வாதிகளையும் இதோ இந்த முறையில் வகைப்படுத்தலாம்.      

 தெருவில் பிச்சையெடுக்கும் தெய்வீக யானை!

தனது முழு ஆற்றலும் அறியாத இந்த யானை, ஒரு சிறு அங்குசத்திற்குப் பயந்து கொண்டு, தனது வாழ்நாள் முழுவதும் பாகனுக்கு அடிமையாகிப் பிச்சையெடுத்து வாழ்கிறது! 

தான் சம்பாதிக்கும் ஏராள வருமானத்தில் பாகன் அளிக்கும் குறைவான உணவினை உண்டு காலம் கழிக்கிறது! வறுமையினாலும், நடந்து நடந்து பிச்சையெடுக்க நேரிடும் உடல் வேதனையாலும், நலிவுற்ற நிலையில் சில சமயங்களில் இதற்கு மதம் பிடிக்கவும் செய்கிறது! அப்பொழுது தனக்கு உணவளிக்காத பாகனைத் துவம்சம் செய்துவிட்டு, மீண்டும் வேறொரு பாகனுக்கு அடிமையாகித் தன் வாழ்க்கையைத் தொடர்கிறது!

இந்த வகை யானையைத் தம் வயிற்றுப் பிழைப்பிற்காகப் பிச்சையெடுக்க வைக்கும் பாகன்கள் தங்களின் சுய லாபத்திற்காகவே இவற்றைத் தெய்வப் பிறவிகளாக்கி விட்டனர் என நாம் கருதலாம்;!

மக்கள் யானையைத் தம் எதிரே கண்டாலே பயபக்தியுடன் தம்மிடமுள்ள நாணயத்தை,  அதன் கையில் கொடுத்து வணங்குவர்! அதைப் பெற்றுக்கொண்டு; தும்பிக்கையை உயர்த்தி, நம் தலை மீது வைத்து வாழ்த்தும்! சற்று பகுத்தறிவுடன் உற்று நோக்கினால்தான் யானையின் இந்தச் செயலுக்குரிய காரணம் விளங்கும்! 

யானை மீது அமர்ந்திருக்கும் பாகன் அப்போது தனது தேவைக்கேற்ற பணம் வந்துவிட்டதா எனக் கவனிப்பார்! பணம் திருப்தியானதென்றால் தனது கட்டளையை யானையின் காதில் இலேசாக மிதித்து பணத்தைப் பெற்றுக் கொள்ள உத்தரவிடுவார்! அதுவே அவர் கீழிருந்தால் கட்டளை அங்குசம் வாயிலாக அதன் காதில் குத்தி கட்;டளை பிறக்கும்!

இது ஒரு பயிற்சி! யானையை சிறு வயது முதல் இவ்வாறே காசு பெறப் பயிற்சியளிப்பர்! அதன்படி யானை நம்மை வாழ்த்தும்! யானையின் வாழ்த்துதலுக்குப் பின் உள்ள வேதனையும், வலியும், வாழ்த்துப் பெற்று மகிழும் மக்களுக்கு இனியாவது விளங்க வேண்டும்!

பழனியில் எனக்கு ஒரு அனுபவம் கிடைத்தது! எனது மனைவியின் பிரார்த்தனையை நிறைவேற்ற இருவரும் எனது இரண்டு வயது மகளுடன் சென்றிருந்தோம்! வழக்கம் போல கோவில் யானையைப் பார்த்தவுடன் என் மனைவி எனது மகள் கையில் இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்து வாழ்த்துப் பெற முயன்றார்! யானை வாங்க மறுத்தது!

மேலிருந்த பாகனும், கீழிருந்த பாகனும் ஐந்து ரூபாய் தந்தால்தான் பணம் வாங்குமென்றனர்! யானையின் இந்தச் செயலுக்கு காரணம் அறிந்துள்ள நான் இது எங்களின் விருப்பத்தில் தருவது அதற்கு மேல் தர முடியாதென்றேன்! 

அவ்வளவுதான்! உடனே அந்த யானையை எங்கள் மீது பாய்வது போன்று  ஏவி விட்டனர்! எனக்குக் கடும் கோபமேற்பட்டது! உடன் எனது மனைவியை அழைத்துக் கொண்டு காசு போட மறுத்து திரும்பி விட்டேன்! தமிழக கோயில்களில் இது போன்ற அனுபவங்கள் பலருக்கும் ஏற்படுவதுண்டு!

இந்த வகை யானையின் நிலையில்தான் நம் தமிழக மக்களின் வாக்கு வங்கி உள்ளது! பல்லாயிரம் ஆண்டுகளாகத் தனது பலம் அறிந்தும், தமிழினம் தமக்குரிய வாக்கு வங்கியின் பலம் என்னவென்று அறியாது பலவீனமாகிப் போனதற்கு, ஒருவேளை நம் மக்களின் பக்தி முறைதான் பிரதான காரணமோ என்னவோ? 

தமிழினம் தம் உழைப்பில் பெருகும் வரிப்பணத்தைப் பிச்சையென நினைத்து, அதில் கிடைக்கும் வருமானத்தை ஏய்த்து, ஊழல் அரசியல்வாதிகள் தரும் இலவசத் திட்டங்கள் எனும் அற்பமான உணவுடன் திருப்தி கொண்டு, தனது வாழ்நாளைக் கழிக்கின்றது!

வறுமை நிலையுற்ற நமது தமிழினத்திற்கும் தேர்தலுக்குத் தேர்தலாவது சற்று மதம் பிடித்து விடும்! அந்த நேரத்தில் தன்னைச் சரியாக நடத்தாத பாகனைத் தூக்கி எறிந்து விடும்! புதிய பாகனைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு வழக்கம்போல உழைத்து வரிப்பணத்தைச் சேர்க்கும்!
  
சில நேரங்களில் புதிய பாகனின் செயல்களும் அவரது  நடவடிக்கைளும் எல்லை மீறிப் போனால், தனது பழைய பகை மறந்து, பழைய பாகனையேகூட மீண்டும் தனது நடத்துனராக மாற்றிக் கொள்கிறது! 

இப்பொழுதோ இந்த யானையின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய ஏராள நடிப்புலகப் பாகன்கள்! ஒருவேளை தமிழினம் இவர்களுக்கும் தனது முதுகில் ஏறிச் சவாரி செய்யும் பாகன்களாக இருக்கும் வாய்ப்பை வழங்கக்கூடும்!
  

காட்டு யானைகள்!

காட்டு யானைகளைப் பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் நாம் படித்துத் தெரிந்து வருகிறோம்! தங்களுக்குள் ஒற்றுமை குலையாது வாழும் இவை, தங்களின் உணவு தேடும் முயற்சிக்கு எதிராக செயல்படும் மனிதர்க்கு சற்றும் ஈவு இரக்கம் காட்டுவதில்லை! 

வனம் சார்ந்த பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், மனித இனம் இன்றுள்ள பரிதாப நிலையில் கடன்பட்டு பயிரிடப்பட்டவை என்ற விபரமெல்லாம் இவற்றிற்கு தேவையில்லாத ஒன்று! 

தங்களின் உணவுத் தேடலுக்கு மனித இனம் குறுக்கே வந்தால் துவம்சம் செய்யக்கூடத் தயங்காதவை! கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வாழும் இவற்றிற்குள்ள தாய்ப்பாச உணர்வு, வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்பதை நாம் சமீபத்திய சில சம்பவங்களில் நன்கு அறிவோம்! 

தனது குட்டி கிணற்றில் விழுந்து விட்டதை மீட்கத் தாய் யானை இரண்டு நாட்கள் போராடியதும், காப்பாற்றத் திரண்ட மக்களின் உதவி குணம் அறியாமல், அதில் ஒருவரை மிதித்துக் கொன்ற காட்சியும் தொலைக்காட்சியில் கண்டது, இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறதே! 

இந்த நிலையிலுள்ளவர்கள்தான் இன்றைய வன்முறை குண அரசியல்வாதிகள்! மக்கள் நலன் பற்றிச் சிறிதளவேனும் கவலையற்றவர்கள்! தங்களின் பிள்ளைகள் தனது பதவி தங்கள் குடும்பம் என்று வரும்போது, தனக்கு எதிராக எவர் வந்தாலும் நாசம் செய்யத் தயங்காதவர்கள்! தங்கள் குடும்பப் பாசத்திற்காக குடும்ப வளத்திற்காக கொலையும் செய்ய தயங்காதவர்கள்! 

வன்முறை அரசியல்வாதிகளை அடக்கி ஆளவே நம்மிடமுள்ளது அங்குசமென்னும் ஓட்டுக் கருவி! இந்த எளிய கருவியின் துணை கொண்டு, நமக்கு ஏவல் செய்யக்கூடிய அடிமைகளாக இவர்களை நடத்தத் தெரியாமல், அவர்களை பலம் பொருந்திய காட்டு யானைகளாக வளர்த்துவிட்டு, அவர்கள் செய்யும் நாசங்களைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் கோழைகளாக நாம் வாழ்ந்து வருகிறோம்!
                  கும்கி யானைகள்!

மாடு கட்டி போரடித்தால் மாளாத செந்நெல்லென்று யானை கட்டிப் போரடித்து வளமுற்ற தமிழகம்!

சங்க காலத்தில் யானைகளின் பயன்பாடு நமது வேளாண் தேவைகளுக்கும் பயன்பட்டிருந்தன என்பதை இந்த பெருமைமிகு சொல் ஒன்றே பறை சாற்றும்! உழைப்பின் மேன்மையை உலகிற்கு உரைத்த,  உழைப்பாளிகள் நிறைந்த பொற்காலம் அது! 
     
அக்காலங்களில் வனங்களிலுள்ள பெரிய பெரிய மரங்களைச் சுமந்து வருவதற்கும், தஞ்சை பெரிய கோயில் கோபுரத்திலுள்ள மிகப் பெரிய விமானத்தை நிறுவுதல் போன்ற வியக்க வைக்கும் ஆற்றலுக்கும் யானைகளைப் பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள்!
  
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன், அன்போடு பழகி வசப்படுத்தி ஆற்றல் மிக்க செயல்களுக்கு யானைகளைப் பயன்படுத்தி, அவற்றின் உழைப்பால் மனிதகுல மேன்மைக்கு வழி கண்டது இத்தகு உன்னத வழி!

இன்று காடுகளில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பயிற்சி பெற்ற யானைகளைத்தான் தலைப்பில் கண்டவாறு கும்கி யானைகள் என அழைப்பர்! அடர்ந்த காடுகளில் வனத்துறையால் வெட்டப்படும் மரங்களைச் சுமந்து வர இவை இன்று பயன்படுத்தப்படுகின்றன!

அது மட்டுமன்றி காடுகளில் கட்டுப்பாடின்றித் திரிந்து, வனப்பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதி வாழ் மக்களின் பயிர்களை நாசம் செய்கின்ற காட்டு யானைகளைக் கட்டுப்படுத்தி, அவற்றை வனப்பகுதிக்குள் திருப்பி விடுகின்ற காவல் பணியையும், இந்த வகை யானைகள் பிரதானமாகச் செய்கின்றன!

யானை கட்டிப் போரடித்து வளமுற்ற உன்னத நிலை தமிழகத்தில் மீண்டும் வர வேண்டும்! சங்ககாலச் சோழர்களின் முன்னோடித் தேர்தல் முறையான குடவோலைத் தேர்வு எனும் நேர்மையான  வாக்கு வங்கி முறைக்குத் தமிழினம் மாற வேண்டும்! தமிழினம் பிச்சைக்கார யானையா! அல்லது இன்றைய படுநாச அரசியல்வாத யானைகளை அடக்கியாளும் கும்கி யானையா? அல்லது அங்குசமா? முடிவு இன்றைய விழிப்புணர்வு மிக்க தமிழினத்திடம்!

இதோ நாடாளுமன்றத்தேர்தல் வந்துவிட்டது. வழக்கம் போல அரசியல் பச்சோந்திகள் என்ன நிறம் மாறுவதென முடிவெடுக்க இயலாது திணறுகின்றனர். மதவாத இயக்கங்கள் சாதியவாத இயக்கங்களுடன் கைகோர்த்து நிற்கின்றன. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான ஊழல் இயக்கங்கள் தங்களிடம் குவிந்து கிடக்கும் ஏராளமான செல்வ வளத்தை வாரி இறைத்து வாக்கு வங்கியை வளைக்கத் துவங்கிவிட்டன. 

மக்களின் மன நிலை என்ன என்பதை காசு கொடுத்துக் கருத்துக்கணிப்பாக்கி தங்களுக்குத்தான் ஆதரவு என ஊடகங்கள் வாயிலாக மக்களை குழப்பும் வேலைகளை எல்லா அரசியல் இயக்கங்களும் துவங்கிவிட்டன. இனி மக்கள்தான் சிந்திக்க வேண்டும்!

உங்கள் கையிலுள்ள வாக்குச்சீட்டுதான் மதயானைகளாகத் திரியும் இன்றைய அரசியல்வாதிகளை அடக்குகின்ற அங்குசம். இந்த அங்குசத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதுதான் இன்றைய கேள்வியே! 
நீங்கள் எந்த வகை வாக்காளர் என்பதை முடிவெடுக்கும் உரிமையையும் உங்களின் மன நிலைக்கே விட்டுவிட்டோம். 

இங்கு அங்குசம் என்பதும், பலவீன யானையும், கும்கி யானையும், மதயானையும், யானைப்பாகனும் நாம்தான்! அபார  பலம் பொருந்திய யானை பலவீனப்பட்டு, பலம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற எளிய அங்குசம்தான், இங்கு பலம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது! இனியாவது தமிழினத்தின் பிச்சையெடுக்கும் நிலை மாறி, இலவசத் திட்டங்களுக்கு மயங்கி, பலம் வாய்ந்த வாக்கு வங்கி வீணாகும் பலவீன நிலை ஒழிய வேண்டும்! யானை அங்குசமாவதும், அங்குசம் யானையாவதும், தமிழகத்தின் வருங்காலம் குறித்த விழிப்புணர்வு தேடும் தமிழினத்தின் மன நிலையில்தான் உள்ளது!

எனவே வாக்காளப் பெருங்குடி மக்களே! உங்களுக்குப் பணியாற்ற, வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் கும்கி யானையான எனக்கு, அங்குசம் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு, உங்கள் பொற்பாதம் தொட்டு, வேண்டி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்! நான் உங்கள் வீட்டுப் பிள்ளை! என்னை உங்கள் தொகுதியின் பிரதிநிதியாக்கினால்.....................................................!

ஆகட்டுண்டா தம்பி ராஜா! நடராஜா! மெதுவா தள்ளடா! பதமா செல்லடா!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!